Wednesday, August 22, 2012

காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டவேண்டும் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப்பாசன மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பாசனம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீர் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்த நிலையில், கர்நாடக அரசு அம்மாநில அணைகளில் இருந்த தண்ணீரில் ஓரளவு கொடுத்திருந்தால் கூட காவிரிப்பாசன பகுதிகளில் குறுவை சாகுபடியை வெற்றிகரமாக செய்திருக்க முடியும்.

ஆனால், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்துவிட்டதால், மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டால் தான் சம்பா சாகுபடி சாத்திய மாகும்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை 100.65 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும். இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறைப்படி பார்த்தால்கூட 35 டி.எம்.சி தண்ணீரைக் கொடுத் திருக்க வேண்டும்.
ஆனால், கர்நாடகம் இது வரை வெறும் 7 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே தந்திருக்கிறது. கர்நாடக அணைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ள போதிலும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க அம்மாநில அரசு மறுத்து வருகிறது.

இப்பிரச்சினை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை கூட்டும்படி, அதன் தலைவரும், பிரதமருமான மன்மோகன்சிங்கிற்கு கடந்த மே 19-ம் தேதியே தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் அதை பிரதமர் பொருட்படுத்தவில்லை.
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு கடந்த 13-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவிரி ஆணையத்தை கூட்டாததற்காக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகும் மத்திய அரசின் உறக்கம் கலைய வில்லை. காவிரி பிரச்சினையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இவ்வாறு அக்கறையின்றி இருப்பது கடுமையாக கண்டிக்கதக்கது.
தமிழக உழவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ள நிலையில், இனியாவது மத்திய அரசு அதன் அலட்சியத்தை கை விட்டு, காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டவேண்டும். அவ்வாறு ஆணையம் கூட்டப்படும் வரை காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 2 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறந்து விடும் படி கர்நாடகத்திற்கு பிரதமர் ஆணையிட வேண்டும்.
காவிரி பிரச்சினை குறித்து முறையிடுவதற்கான இன்னொரு அமைப்பான காவிரி நடுவர் மன்றம் கடந்த 5 மாதங்களாக தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. அதற்கும் புதிய தலைவரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்’’ கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: