Wednesday, August 29, 2012

ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ’’தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்ட விதிகளின்படி அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளன. தேர்வு எழுதிய 6.67 லட்சம் பேரில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாக 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஒரு தேர்வில் 99.6 விழுக்காட்டினர் தோல்வி அடைந்திருப்பதை வைத்து பார்க்கும் போது தேர்வு எழுதியவர்களிடம் குறை இல்லை. தேர்வு முறையில் தான் குறை உள்ளது என்பதை உணர முடிகி றது.  மனப்பாடம் செய்துவிட்டு வந்து ஒப்பிக்கும் முறையை ஊக்குவிக்கும் வகையில் தான் தகுதித் தேர்வு முறை அமைந்துள்ளது.

99 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் தோல்வி அடைந்து விட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறுவது, ஆண்டுக்கணக்காக படித்த பட்டய மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

இந்தியாவின் எதிர் காலம் சிறப்பாக வடிவமைக்கப்பட வேண்டும் என்றால் ஆசிரியர்களுக்கு சிறப்பான கல்வியும், பயிற்சியும் வழங்கப்பட வேண்டும். நிகழ்கால  சவால்களை சமாளிக்கும் வகையில் கல்வியியல் பட்ட, மற்றும் பட்டயப் படிப்புகளை மேம்படுத்த வேண்டும்.

ஒன்றுக்கும் உதவாத தகுதித் தேர்வை நடத்துவது திறமையை வளர்க்கவோ, அளவிடவோ உதவாது. எனவே, ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்துவிட்டு, ஏற்கனவே இருந்த முறைப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பின் அடிப்படை யில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டு கட்டாயப்பயிற்சி அளித்து ஆசிரியர் பணியில் அமர்த்த வேண்டும். அப்போது தான் தரமான கல்வியை வழங்கமுடியும்’’ என்று கூறியுள்ளார்.

Tuesday, August 28, 2012

இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் வலியுறுத்தி வரும் நிலையில், அதை சிறிதும் பொருட்படுத்தாமல் இலங்கை படையினருக்கு இந்தியாவில் தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் பல்லம் ராஜு கூறியிருக்கிறார்.
தமிழக மக்களின் உணர்வுகளை சற்றும் மதிக்காத அமைச்சரின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இலங்கை அரசு எப்போதுமே இந்தியாவுக்கும், தமிழர்களுக்கும் எதிராகவே செயல்பட்டு வருகிறது.

2009ம் ஆண்டு போரில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களை சிங்களப் படைகள் கொன்று குவித்தன. இலங்கைக் கடற்படையால் இதுவரை 600-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்மைக் காலமாக சீனாவுடன் சேர்ந்துக் கொண்டு இந்தியாவுக்கு எதிரான செயல்களில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், ‘இலங்கை எங்களின் நட்பு நாடு. அதற்கு தொடர்ந்து ராணுவ பயிற்சி அளிப்போம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் கூறுவது, பூகோள அரசியல் சூழல் குறித்து அவருக்கு சரியான புரிதல் இல்லை என்பதையும், தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் உணர்வுகளை அவரும், மத்திய அரசும் மதிக்கவில்லை என்பதையுமே காட்டுகிறது.


இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் உள்ள ராணுவப் பயிற்சிக் கல்லூரியில் அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்தி அவர்களை சொந்த ஊருக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சரும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், இதையெல்லாம் மதிக்காமல் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினை வரும்போது, கூட்டாட்சி முறையில் மாநில அரசுகளின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்க வேண்டியது அரசின் கடமை எனவே தான் மாநில அரசுகள் விரும்பியவாறு சுரங்கங்களை ஒதுக்கினோம் என்று மத்திய அரசு கூறுகிறது.

ஆனால், சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்கும் விஷயத்தில் மட்டும் தமிழகத்தின் கருத்துக்களை மத்திய அரசு மதிக்காமல் உதாசீனப்படுத்துகிறது. இதில் இருந்தே, தமிழர்களை கொல்லும் சிங்களப் படையினருக்கு பயிற்சி அளிக்க மத்திய அரசு வரிந்துக் கட்டிக்கொண்டு துடித்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.

இலங்கையுடனான உறவு குறித்த விஷயத்தில் மத்திய அரசு தவறான கொள்கைகளையே கடைபிடித்து வருகிறது. இனியாவது இந்த தவறை திருத்திக் கொள்ளவேண்டும். வெலிங்டனில் பயிற்சி பெற்று வரும் சிங்கள போர்ப்படை அதிகாரிகள் இருவரையும் உடனடியாக அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

அதுமட்டுமின்றி, இனி இலங்கைப் படையினருக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கப்படாது என அறிவிப்பதுடன், பயிற்சித் தொடர்பாக இலங்கை அரசுடன் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Sunday, August 26, 2012

காவிரி பிரச்சினை: அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும்

சென்னை: இதன்மூலம் தமிழகத்தின் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் தமிழகத்தை வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இது உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்றம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காவிரி பிரச்சினை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள கர்நாடக அரசு, காவிரியில் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் கோரமுடியாது, அப்படியே கோரினாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருக்கிறது.
தேசிய ஒருமைப்பாட்டு கொள்கைக்கும், நதிநீர் பகிர்வுக் கோட்பாட்டிற்கும் எதிரான கர்நாடக அரசின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. காவிரி நதிநீர் பகிர்வு பிரச்சினை பற்றி விசாரித்த காவிரி நடுவர் மன்றம், தமிழ்நாட்டில் குறுவை மற்றும் சம்பா சாகுபடி செய்வதற்கு வசதியாக ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வாரமும் குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று அதன் இடைக்காலத் தீர்ப்பிலும், இறுதி தீர்ப்பிலும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது.
ஆனால், நடுவர் மன்றம் வகுத்த அட்டவணைப்படி தண்ணீர் தரமுடியாது. டிசம்பர் மாதத்திற்குள் நாங்கள் விரும்பும் நேரத்தில்தான் காவிரியில் தண்ணீரை திறந்து விடுவோம் என்று உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு கூறியிருக்கிறது.
இதன்மூலம் தமிழகத்தின் தேவைக்கு தண்ணீர் தரமாட்டோம் தமிழகத்தை வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இது உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்றம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு விடப்பட்ட சவால் ஆகும்.
கர்நாடக அரசின் இந்த பிடிவாதப் போக்கை கண்டிக்க வேண்டிய மத்திய அரசோ தொடர்ந்து அமைதி காத்து வருகிறது. அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான மத்திய மின் தொகுப்பிலிருந்து ஏதேனும் மாநிலம் அளவுக்கு அதிகமாக மின்சாரம் எடுத்தால், அந்த மாநில தலைமைச் செயலாளருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
அதேபோல், தமிழ்நாடு, கர்நாடகம், புதுவை, கேரளா ஆகிய 4 மாநிலங்களுக்கு பொதுவான காவிரி நீரை நாங்கள் மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறும் கர்நாடக அரசையும் மத்திய அரசு எச்சரிக்க வேண்டும்.
சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து செப்டம்பர் 17ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள போதிலும், அணையில் இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு சம்பா சாகுபடியை வெற்றிகரமாக முடிக்க முடியுமா? என்பது ஐயம்தான்.
கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சம்பா சாத்தியமாகும். ஆனால், தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்துவரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியமாகிறது.
காவிரி பிரச்சினையில் கர்நாடக கட்சிகள் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒன்றாக செயல்படுகின்றன. கர்நாடகத்துக்கு ரூ.2000 கோடி வறட்சி நிதி பெறுவது, காவிரி பிரச்சினை ஆகியவை குறித்து பிரதமரிடம் வலியுறுத்த தமது தலைமையில் அனைத்துக் கட்சி குழு டெல்லி செல்லும் என்று கர்நாடக முதல்வர் அறிவித்துள்ளார்.
அதேபோல், காவிரி பிரச்சினையில் தமிழக கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். இதற்காக அனைத்துக்கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்டவேண்டும். அதில் எடுக்கப்படும் முடிவுகளை தமிழக முதல்வர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ்

Saturday, August 25, 2012

கிரானைட் ஊழல் பெருக அனுமதிப்பதா? புதிய குவாரிகளை ஏலம் விடக்கூடாது: ராமதாஸ் அறிக்கை




பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மதுரை மாவட்டம் அமலூர் வட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணையில் நாள்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுமென்றும், இந்த முறைகேட்டில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனடிப்படையில், கனிமவளம் மற்றும் வருவாய் துறைகளைச் சேர்ந்த 9 அதிகாரிகள்  பணியிடை நீக்கம் செயப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கிரானைட் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் விசாரணையில் உள்ளது. ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கவேண்டும்  அனைத்து குவாரிகளிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் விற்பனையை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தநிலையில், சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண்ணாமலை,  காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி  ஆகிய 9 மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் குவாரிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.  இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்தால் கோரப்பட்டிருக்கின்றன. கிரானைட் ஊழலிலோ அல்லது வேறு முறைகேட்டிலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊழலில் தொடர்புடைய பல நிறுவனங்கள் பினாமி பெயர்களில் ஒப்பந்தப்புள்ளிகளை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

  எதிர்காலத்தில் கிரானைட் ஊழலை அடியோடு தடுக்க அனைத்து கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை அரசு பரிசீலித்துவரும் நிலையில், புதிய கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுவது முறையானதாக இருக்காது. ஏற்கனவே ஊழலில் ஈடுபட்ட  நிறுவனங்களே இந்த குவாரிகளையும் ஏலத்தில் எடுக்கக் கூடும் என்பதால் அது மேலும் மேலும் ஊழலுக்கு வழிவகுக்கும்.

மிகவும் அரிதான இயற்கை வளங்களை நாட்டின் சொத்துக்களாக கருதி பாதுகாக்கவேண்டும் என்றும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் பல தருணங்களில் வலியுறுத்தியிருக்கிறது. எனவே, 9 மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடும் முடிவை அரசு கைவிடவேண்டும்  ஏற்கனவே செயல்பட்டுவரும் கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்கவேண்டும்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு ராமதாஸ் கண்டனம்




பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு குறித்து படம் பிடிப்பதற்காக சென்ற 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழின் புகைப்படக்கலைஞர் ஆல்பின் மேத்யூ அங்கிருந்த பேராசிரியர் மய்யா மற்றும் பாதுகாவலர்களால் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எங்கு தவறு நடந்தாலும் அதை வெளிக்கொண்டுவர வேண்டிய பொறுப்பும், கடமையும் ஊடகங்களுக்கு உள்ளது. ஐ.ஐ.டி. மாணவியின் தற்கொலை தொடர்பாக பல்வெறு ஐயங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அது பற்றிய படங்களை எடுப்பதற்காக மேத்யூ அங்கு சென்றிருக்கிறார். அப்போது அவரை பேராசிரியரும், பாதுகாவலர்களும் போக்கிலிகளைப் போல சூழ்ந்துக் கொண்டு தாக்கியிருக்கிறார்கள். இத்தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

இத்தாக்குதல் தொடர்பான வழக்கில் 3 பாதுகாவலர்களை கைது செய்த காவல்துறையினர் , முக்கிய எதிரியான பேராசிரியர் மய்யாவை கைது செய்யத் தயங்குவதும், அவரை கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தினால் புகைப்பட கலைஞரையும் கைது செய்யவேண்டியிருக்கும் என்று பத்திரிகையாளர்களையே காவல்துறையினர் மிரட்டுவதும் கண்டனத்திற்குரியது. இத்தாக்குதலுக்கு காரணமான பேராசிரியர் மய்யாவை உடனடியாக கைது செய்யவேண்டும்.

அண்மைக்காலமாகவே ஊடகத்துறையினர் மீதான  தாக்குதல் அதிகரித்திருக்கிறது. மதுரை மற்றும் சென்னையில் குவாரி ஊழல்கள் பற்றி செய்தி சேகரிப்பதற்காக சென்ற புதிய தலைமுறை தொலைக்காட்சியின்  பத்திகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர் . இவற்றில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன், எதிர்காலத்தில் இத்தகைய தாக்குதல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செப்டம்பர் 17 போராட்டம் சைவ போராட்டம் தான் : ராமதாஸ்



வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்ட விளக்க பொதுக்கூட்டம் பஸ் நிலையத்தில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர்,   ‘’வன்னியர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை தான் நாம் கேட்கிறோம். பலருக்கு இட ஒடுக்கீடு என்றால் என்ன என்பதே தெரியவில்லை. 100 இடங்கள் இருக்கும் பட்சத்தில் அதில் நமக்கு 20 இடங்களை தனியாக கேட்கிறோம். இதுதான் இட ஒதுக்கீடு.
இந்த இட ஒதுக்கீட்டை மற்ற ஜாதிக்காரர்கள் நமக்காக கேட்பார்களா? கேட்க மாட்டார்கள். நமக்கு நாம் தான் கேட்க வேண்டும். இட ஒதுக்கீட்டை நமக்காக மட்டும் கேட்கவில்லை மற்ற ஜாதிகளுக்காகவும் தான் கேட்கிறோம்.

நம்மிடம் ஒற்றுமை இல்லை. இதற்காக இந்த ஒற்றுமைக்காக 35 வருடமாக போராடி வருகிறேன். இப்போது தான் ஒற்றுமை வந்துள்ளது. எப்படி கூறுகிறேன் என்றால் ஜெ.குரு உருவாக்கியுள்ள மஞ்சள் படையை பார்த்து தான் ஒற்றுமை வந்து விட்டது என கூறுகிறேன்.

மஞ்சள் நிறமும், அக்னி கலசமும் வன்னியனின் அடையாளம். நாம் ஆட்சிக்கு வந்தால் யாதவர் களுக்கு தனி இட ஒதுக்கீடு கொடுப்போம். ஏனெனில் வன்னியர்களும், யாதவர்களும் மாமன், மச்சான்கள் தான். யாதவர்களும் 95 ஜாதிகளில் ஒருவராகதான் உள்ளனர்.

நம்மை போல அவர்களுக்கும் போராட தெரியாது. செப்டம்பர் 17-ந்தேதி நடைபெறும் போராட்டம் ஒரு அடையாள போராட்டம் தான்.

அதை தொடர்ந்து ஜெயலலிதா தனி இட ஒதுக்கீட்டை தரவில்லை என்றால் வருகிற 2013ம் வருடத்தில் நாம் நடத்தும் போராட்டத்தால் நாடு தாங்காது.

தமிழ்நாட்டில் 12 சிறைகள் உள்ளன. அதில் இருக்கும் கைதிகளை தவிர்த்து 10 ஆயிரம் பேரை அடைக்கலாம். அந்த போராட்டத்திற்கு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் நாம் அடுத்த ஆண்டில் சிறையை பார்ப்போம். கருணாநிதியிடம் தனியாக இட ஒதுக்கீடு கேட்டோம் 107 ஜாதிகளை சேர்த்து கொடுத்தார். முழுமையாக கிடைக்கவில்லை.

செப்டம்பர் 17 போராட்டம் சைவ போராட்டம் தான். இதற்கு பிறகு இட ஒதுக்கீடு கொடுக்கவில்லை எனில் 1-ல் 2 பார்த்து விடுவோம். 130 வருடங்களாக வன்னியர் முன்னுக்கு வரவில்லை. இந்த ஜாதியை சேர்ந்த இளைஞர், இளம்பெண்கள் என்னுடைய பேச்சை கேட்டு ஒருமுறை மாம்பழத்திற்கு வாக்க ளித்தால் இந்த நிலை மாறும்’’என்று கூறினார்.

மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளை ஏலம் விடக்கூடாது: டாக்டர் ராமதாஸ்

 
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ''மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழல் தொடர்பான விசாரணையில் நாள் தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலின் மதிப்பு மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டுமென்றும், இந்த முறைகேட்டில் ஆளும் மற்றும் ஆண்ட கட்சிகளை ச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனடிப்படையில், கனிம வளம் மற்றும் வருவாய் துறைகளைச் சேர்ந்த 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கிரானைட் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் விசாரணையில் உள்ளது.
ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்க வேண்டும். அனைத்து குவாரிகளிலும் கிரானைட் கற்களை வெட்டி எடுத்தல் மற்றும் விற்பனையை அர சுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.
இந்த நிலையில் சேலம், ஈரோடு, தருமபுரி, திருவண் ணாமலை, காஞ்சீபுரம், விழுப்புரம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய 9 மாவட்டங்களில் பல ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான கிரானைட் குவாரிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிகளும் தமிழ்நாடு கனிம வள நிறுவனத்தால் கோரப்பட்டிருக்கின்றன.
கிரானைட் ஊழலிலோ அல்லது வேறு முறைகேட்டிலோ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஊழலில் தொடர்புடைய பல நிறுவனங்கள் பினாமி பெயர்களில் ஒப்பந்தப் புள்ளிகளை தாக்கல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் கிரானைட் ஊழலை அடியோடு தடுக்க அனைத்து கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை அரசு பரிசீலித்து வரும் நிலையில், புதிய கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடுவது முறையானதாக இருக்காது. ஏற்கனவே ஊழலில் ஈடுபட்ட நிறுவனங்களே இந்த குவாரிகளையும் ஏலத்தில் எடுக்கக் கூடும் என்பதால் அது மேலும் மேலும் ஊழலுக்கே வழி வகுக்கும். மிகவும் அரிதான இயற்கை வளங்களை நாட்டின் சொத்துக்களாக கருதி பாதுகாக்க வேண்டும் என்றும், அவற்றை தனியார் நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் பல தருணங்களில் வலியுறுத்தியிருக்கிறது. எனவே 9 மாவட்டங்களில் கிரானைட் குவாரிகளை தனியாருக்கு ஏலம் விடும் முடிவை அரசு கைவிட வேண்டும். ஏற்கனவே செயல்பட்டு வரும் கிரானைட் குவாரிகளையும் அரசுடைமையாக்க வேண்டும்'என்று கூறியுள்ளார்.

Friday, August 24, 2012

வெற்றறிக்கை விடுவதை விட்டுவிட்டு மின்வெட்டைப் போக்குங்க: அரசுக்கு ராம்தாஸ் கோரிக்கை

சென்னை: வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை விட்டு விட்டு மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாட்டில் காற்றின் புண்ணியத்தால் கடந்த சில வாரங்களாக குறைந்திருந்த மின்வெட்டு மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் கடுமையான இருளில் மூழ்கியுள்ளன. நாள்தோறும் 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்படுகிறது.
கோவையில் 14 மணி நேர மின்வெட்டால் தொழில் உற்பத்தி அடியோடு முடங்கி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை விட மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரமே அதிகமாக இருப்பதால் விவசாயம், மாணவர்களின் படிப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தூங்குவதற்கு கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். காற்றாலைகள் மூலம் 4 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கிடைத்துக் கொண்டிருந்தது. அது தற்போது குறைந்துவிட்டதால் தான் மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது என்று கூறி காற்றின் மீது பழியை போட்டு தப்பித்துக்கொள்ள அரசு முயற்சிக்கிறது.
அதிமுக ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் மின்வெட்டு போக்கப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்தார். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஒருமுறை இந்த வாக்குறுதியை அவர் புதுப்பித்து வந்தார். ஆனால் ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மின்வெட்டு அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. கடந்த 4.2.2012 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் 500 மெகாவாட் திறன்கொண்ட வல்லூர் மின்திட்டத்தின் முதல் பகுதியும், 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் மின் திட்டத்தின் மூன்றாம் பகுதியும், 2012ம் ஆண்டு மார்ச் மாதத்திலும், 600 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மின்திட்டத்தின் முதல் பகுதியும், 500 மெகாவாட் திறன் கொண்ட வல்லூர் மின்திட்டத்தின் இரண்டாம் பகுதியும் 2012ம் ஆண்டு ஜுன் மாதத்திலும் உற்பத்தியை தொடங்கும் என்றும், இதன்மூலம் 2012 ஜுன் மாதத்திற்குள் 1950 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக கிடைக்கும் என்றும் உறுதி அளித்திருந்தார்.
ஆனால் இன்று வரை இந்த திட்டங்களில் இருந்து ஒரு மெகாவாட் மின்சாரம் கூட கிடைக்கவில்லை. தமிழகத்தில் மின்வெட்டை போக்க அரசு எந்த முயற்சியையும் மேற்கொள்ள வில்லை என்பது இதில் இருந்தே தெளிவாகிறது. வெற்று அறிக்கைகளை வெளியிடுவதை விட்டு விட்டு மின்வெட்டை போக்க உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Wednesday, August 22, 2012

காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டவேண்டும் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   ‘’தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப்பாசன மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பாசனம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீர் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
 கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்த நிலையில், கர்நாடக அரசு அம்மாநில அணைகளில் இருந்த தண்ணீரில் ஓரளவு கொடுத்திருந்தால் கூட காவிரிப்பாசன பகுதிகளில் குறுவை சாகுபடியை வெற்றிகரமாக செய்திருக்க முடியும்.

ஆனால், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்துவிட்டதால், மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.

கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டால் தான் சம்பா சாகுபடி சாத்திய மாகும்.

காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை 100.65 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும். இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறைப்படி பார்த்தால்கூட 35 டி.எம்.சி தண்ணீரைக் கொடுத் திருக்க வேண்டும்.
ஆனால், கர்நாடகம் இது வரை வெறும் 7 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே தந்திருக்கிறது. கர்நாடக அணைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ள போதிலும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க அம்மாநில அரசு மறுத்து வருகிறது.

இப்பிரச்சினை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை கூட்டும்படி, அதன் தலைவரும், பிரதமருமான மன்மோகன்சிங்கிற்கு கடந்த மே 19-ம் தேதியே தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் அதை பிரதமர் பொருட்படுத்தவில்லை.
காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு கடந்த 13-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவிரி ஆணையத்தை கூட்டாததற்காக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகும் மத்திய அரசின் உறக்கம் கலைய வில்லை. காவிரி பிரச்சினையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இவ்வாறு அக்கறையின்றி இருப்பது கடுமையாக கண்டிக்கதக்கது.
தமிழக உழவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ள நிலையில், இனியாவது மத்திய அரசு அதன் அலட்சியத்தை கை விட்டு, காவிரி பிரச்சினை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டவேண்டும். அவ்வாறு ஆணையம் கூட்டப்படும் வரை காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 2 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறந்து விடும் படி கர்நாடகத்திற்கு பிரதமர் ஆணையிட வேண்டும்.
காவிரி பிரச்சினை குறித்து முறையிடுவதற்கான இன்னொரு அமைப்பான காவிரி நடுவர் மன்றம் கடந்த 5 மாதங்களாக தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. அதற்கும் புதிய தலைவரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்’’ கூறியுள்ளார்.

Monday, August 20, 2012

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை தேவை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வங்கக் கடலில் சனிக்கிழமையன்று மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது நடுக்கடலில் சிங்கள கடற்படையினர் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த சிங்கள கடற்படையினர், கயிறு, கட்டை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். சில மீனவர்கள் கத்தியாலும் குத்தப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த 9 மீனவர்கள், வேதாரண்யம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மீனவர்களிடமிருந்து மீன்கள், டீசல் போன்றவற்றை கொள்ளையடித்துச் சென்ற சிங்களப் படையினர், கடலில் விரிக்கப்பட்டிருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதேபோல், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களையும் சிங்கள கடற்படையினர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீதான சிங்களப் படையினரின் தாக்குதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கின்றனர். எனினும், மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போது, இலங்கை அரசுடன் இந்திய அரசு பெயரளவில் பேச்சு நடத்துவதும், அதைத் தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசு உறுதியளிப்பதும், அடுத்த சில நாட்களில் மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதலை ஆதரவற்ற தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலாகக் கருதாமல், இந்தியா மீது தொடுக்கப்பட்ட போராகவும், இந்திய இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் மத்திய அரசு பார்க்க வேண்டும்.

மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் போதெல்லாம் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டதாக தமிழக முதலமைச்சர் கருதக்கூடாது. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 15 மாதங்களில் மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக 12 முறை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எனவே, மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும் இதற்குக் காரணமான சிங்களப் படையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக மக்களின் உணர்வுகளை பிரதமரை, முதலமைச்சர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.

Friday, August 17, 2012

மாணவன் சாவு: பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய ராமதாஸ் கோரிக்கை

 Boy Dies School Swimming Pool Pmk Demands Arrest
YGP School 6th Annual Day Celebrati...
Ads by Google
Promote your website  www.Google.com/AdWords
Reach more customers with AdWords Start advertising with Google today
சென்னை: பள்ளியில் நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் பலியான விவகாரத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் படித்து வந்த ரஞ்சன் என்ற நான்காம் வகுப்பு மாணவன் நீச்சல் பயிற்சியின் போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தான் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
லட்சம் லட்சமாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மாணவர்களின் பாதுகாப்பில் எந்த அக்கறையும் செலுத்துவதில்லை என்பதையே இது போன்ற விபத்துகள் காட்டுகின்றன.
சென்னையில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி என்ற பெயரில் மாணவர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
மாணவன் ரஞ்சன் படித்த பள்ளியிலும் இதே நிலை தான். மாணவர்களின் நீச்சல் பயிற்சிக்காக போதிய எண்ணிக்கையில் உயிர்காப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. ரஞ்சன் குளத்தில் மூழ்கி வெகு நேரத்திற்குப் பிறகே அவரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. சற்று முன்பாகவே தேடுதல் பணியை தொடங்கியிருந்தால் ரஞ்சனை காப்பாற்றியிருக்கலாம்.
ஆனால், பள்ளி நிர்வாகம் அலட்சியம் காட்டியதால் மாணவன் உயிரிழக்க நேரிட்டிக்கிறது. எனவே, மாணவன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அதில் பள்ளியின் தாளாளர் உள்ளிட்டோரை சேர்க்க வேண்டும்.
சென்னை தாம்பரத்தில் மாணவி சுருதி பேருந்திலிருந்து உயிரிழந்த வழக்கில் சம்பந்தபட்ட பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைப் போல இந்த வழக்கிலும் பள்ளி நிர்வாகிகள் கைது செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அனுமதியின்றி நடத்தபடும் நீச்சல் குளங்கள் அனைத்தையும் மூட வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும் : ராமதாஸ்


காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவிக்க கோரியும், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரியும் பாட்டாளி மக்கள் கட்சி உழவர் பேரியக்கம் சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆர்ப்பாட்டத்த்துக்கு தலைமை தாங்கினார். முன்னதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,   ‘’காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாக உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் மேட்டூர் அணையில் 80 அடி தண்ணீர் இருந்தது.நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. தண்னீரை திறந்து விட தமிழக அரசு, கர்நாடகத்திற்கு வலியுறுத்தி இருக்கலாம். அதை தவற விட்டு விட்டனர்.

ஆனால் கர்நாடக அரசு தண்ணீர் தராமல் கோடை சாகுபடியை செய்துள்ளனர். காவிரி நதி நீர் ஆணையத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதுவதுடன் நின்று விடுகிறார். கொடநாட்டில் இருந்து கொண்டு அரசாங்கத்தை நடத்துவதாக சொல்லி கொண்டு இருக்கிற முதல்- அமைச்சர், 1,2 முறை காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வலியுறுத்தி கூட்டியிருக்க வேண்டும்.



முந்தைய அரசும், இன்றைய அரசும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிடவில்லை. 2007-ம் ஆண்டு பிப்ரவரி 7- ந்தேதி இறுதி தீர்ப்பு வெளியிடப்பட்டது.

ஆனால் 5 1/2 ஆண்டுகள் ஆகியும் கெஜட்டில் வெளியிடவில்லை. சாதாரணமாக டெல்டா மாவட் டங்களில் குறுவை சாகுபடி 4 லட்சம் ஏக்கரும், சம்பா சாகுபடி 12 லட்சம் ஏக்கரிலும் நடைபெறும். ஆனால் சுதந்திர தின உரையில் தமிழக முதல்-அமைச்சர், வறட்சியே நிலவவில்லை. மக்கள் வளமான வாழ்வு வாழ்கிறார்கள் என்று பொய்யான தகவலை கூறுகிறார்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 22 மாவட்டங்களில் தென் பருவ மழை 50 சதவீதத்துக்கும் குறைவாக பெய்துள்ளது. இவைகளை வறட்சி மாவட் டங்களாக அறிவிக்க வேண்டும், விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். கர்நாடக, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மத்திய அரசு வறட்சி நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை வழங்கியுள்ளது. அதோடு பம்பு செட்டுகளுக்கு 500 லிட்டர் டீசலையும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது.

ஆனால் இங்கே வறட்சியே இல்லை என்று முதல்வர் கூறுகிறார். முதல்-அமைச்சருக்கு சரியான தகவலை அதிகாரிகள் கொடுக்க தவறிவிட்டனர். திராவிட ஆட்சியில் 46 ஆண்டுகளாக காவிரி பொய்த்து போனதற்கு இந்த 2 திராவிட கட்சிகளும்தான் மூல காரணம். 1924-ல் போடப்பட்ட காவிரி நதி நீர் ஒப்பந்தத்தை 1974-ல் புதுப்பிக்க அப்போதைய முதல்வர் கருணாநிதி தவறிவிட்டார். அதன்பிறகு வந்த எம்.ஜி.ஆரும், தவறவிட்டார்.

தமிழகத்தில் புரட்சி என்ற வார்த்தைக்கு பஞ்சமில்லை.  ராஜசேகர ரெட்டி நீர்பாசன திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கி புரட்சி ஏற்படுத்தினார். காவிரியில் தண்ணீர் அதிகமாக வந்து வெள்ளம் ஏற்பட்டால் கடலுக்கு வீணாக 200 டி.எம்.சி. தண்ணீர் செல்கிறது. இதனால் தண்ணீரை சேமிக்க புதிய அணை கட்டினார்களா, மின்சார உற்பத்தி, பொது சுகாதாரம் திட்டங்கள் இல்லை. உரம் விலை 3 மடங்கு கூடியுள்ளது. ஆட்சியாளர் களுக்கு கவலை எல்லாம் டாஸ்மாக் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என்பதில்தான் உள்ளது’’என்று கூறினார்.

அவர் மேலும்,  ‘’வாக்காளர்களை தேர்தல் நேரத்தில் விலை கொடுத்து வாங்குகிறார்கள். வருகிற அக்டோபர் 2- ந்தேதிக்குள் பூரண மதுவிலக் கை அமல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் டிசம்பர் 17- ந்தேதி உண்மையிலேயே டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவோம். இந்த போராட்டம் கடுமையாக இருக்கும். தமிழகத்தில் மணல், கிரானைட் தொழிலை அரசே ஏற்று நடத்தினால் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும்.

ஜனாதிபதிக்கு கிடைக்கும் வசதி சாதாரண ஏழை குடிமகனுக்கும் கிடைக்க வேண்டும். டெசோ மாநாடு தேவையில்லாதது. கருணாநிதி செய்த துரோகத்தை உலக தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள். திராவிட கட்சிகளுடனும், தேசிய கட்சிகளுடனும் இனி கூட்டணி கிடையாது. இதே போல் ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க தயாரா சவால் விடுகிறேன். தி.மு.க. கட்சி முடிந்து விட்டது. அ.தி.மு.க. முடிவுறும் தருவாயில் உள்ளது. இதனால் தமிழகத்தில் மிக பெரிய வெற்றிடம் ஏற்பட்டு உள்ளது. இதை எந்த கட்சி நிரப்ப போகிறது.   இதனால் தான் பா.ம.க. புதிய அரசியல், புதிய நம்பிக்கை என்ற ஆவணத்தை வெளியிட்டோம். இதில் பல வளர்ச்சி திட்டங்களை சொல்லி இருக்கிறோம்.

நல்ல வரவேற்பு உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக பட்ஜெட் போட்டு வருகிறோம், 5 ஆண்டுகளாக விவசாயத்துக்கு தனி பட்ஜெட் போட்டு இருக்கிறோம். இந்த பட்ஜெட் மாதிரியை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி இருக்கிறோம். தமிழகத்தில் சமச்சீர் கல்வியை பா.ம.க. போராடி வந்து கொண்டு உள்ளது. எனவே நல்ல திட்டங்களை உருவாக்குவதில் பா.ம.க. வை மிஞ்ச முடியாது’’ என்று கூறினார்.

அன்புமணி ராமதாஸ் கடிதம் : தமிழக அரசு பதில்



தமிழகத்தில் குட்கா, பான்மசாலாவுக்கு தடை செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, தடை செய்வ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாகத் தெரிவித்துள்ளது என பசுமைத் தாயகம் கூறுகிறது.

Tuesday, August 14, 2012

அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம்: ராமதாஸ்


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


தமிழக மக்களின் நலன் சம்மந்தப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் தமிழக அரசு தொடர்ந்து அக்கறையும், பொறுப்புமின்றி செயல்பட்டுவருகிறது. இதனால் சமுதாய உரிமைகளும், சமூக நீதியும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருப்பதுடன், இளைஞர் சமுதாயம் சீரழியும் ஆபத்தும் உருவாகியுள்ளது.

இந்த ஆபத்துகளை முறியடிப்பது குறித்தும், தமிழகம் எதிர்கொண்டுள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்தும் விவாதிப்பதற்காக மாநில அளவிலான அனைத்து சமுதாய தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளது. சென்னை தியாகராயர் நகர் தணிகாசலம் சாலையில் உள்ள ஹோட்டல் இராஜ்பேலஸ் விடுதியில் நடைபெறவிருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஓராண்டிற்குள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை உறுதிசெய்யும்படி கடந்த 2010ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருந்தது. ஆனால் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமலேயே 69% இடஒதுக்கீடு தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால், அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. இதனால் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்தும், அதை முறியடிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் நடத்தப்பட்டுவரும் சமூக, பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதால் அதை இரத்து செய்துவிட்டு, புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு மட்டும் நடத்தப்படவேண்டும் இளைஞர் சமுதாயம் சீரழிவதை தடுக்க தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூடி முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட யோசனைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

Monday, August 13, 2012

பா.ம.க. சார்பில் இடஒதுக்கீடு போராட்டம்: ராமதாஸ் பேச்சு



பா.ம.க. சார்பில் செப்டம்பர் 17ந் தேதி இடஒதுக்கீடு போராட்டம் நடைபெறும் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பா.ம.க சார்பில், புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்பதின் விளக்க பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ், கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ம.க. இனிமேல் தி.மு.க., அ.தி.மு.க.வோடு கூட்டு சேராது. தனித்தே போட்டியிடும். நாம் கூறுவது போல் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் தனித்தே போட்டியிடுவோம் என்று கூறத்தயாரா? மது வேண்டுமா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
செப்டம்பர் 17-ந்தேதி தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெறும். டிசம்பர் 17-ந்தேதி மதுக்கடைகளுக்கு பூட்டு போடும், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். மதுராந்தகம் ஏரியை தூர் வார வேண்டும் என்று வலியுறுத்தி நானே முன்னின்று தூர் வாரும் மண்ணை தலையில் சுமந்து போராட்டத்தில் குதிப்பேன். இவ்வாறு கூறினார்.

Saturday, August 11, 2012

டாஸ்மாக் கடை முன் பாய் விரித்து படுத்து நூதன போராட்டம்: பா.ம.க. நிர்வாகி கைது






பாளையங்கோட்டை மேலப்பாளையம் சந்தை முக்கு ராஜா நகர் விலக்கு பகுதியில் பாருடன் கூடிய அரசு மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுக்கடை பொது இடத்தில் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவ - மாணவிகளுக்கு இடையூறாக இருந்து வருவதாக கூறி, அவற்றை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களிலும் ஈடுபட்டார்கள். இந்நிலையில் ராஜாநகர் விலக்கில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் நூதன போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி அந்த மதுக்கடையின் முன்பு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாய் விரித்து படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவரும், பா.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளருமான வியனரசு தலைமை தாங்கினார். ம.தி.மு.க.வை சேர்ந்த அகஸ்டின் மற்றும் கிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் 4 பேரையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மேலப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசேகரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Wednesday, August 8, 2012

இந்தி படிக்காத மாணவர்கள் இரண்டாம் தரமானவர்களா? ராமதாஸ் கேள்வி

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் தமிழ் உள்ளிட்ட பிறமாநில மொழிகளிலும் தயாரித்து வழங்கப்படவேண்டும் என பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் 4 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் 45 வேளாண்மை சார்ந்த கல்வி நிறுவனங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் சேருவதற்கான அனைத்திந்திய  நுழைவுத்தேர்வுகளின் (அஐஉஉஅக்எ) வினாத்தாள்களை தமிழில் தயாரித்து வழங்கும் திட்டம் இல்லை என்று தகவல்பெறும் உரிமைச்சட்டத்தின் படி கோரப்பட்ட வினாவிற்கு இந்நிறுவனம் பதிலளித்துள்ளது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத்தேர்வுகள் கடந்த 2000மாவது ஆண்டு வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டுவந்தன. 2001ஆம் ஆண்டில் முதன்முதலாக இந்தியிலும் வினாத்தாள் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆங்கிலம் தெரியாத, இந்தி மொழி பேசும் மாணவர்கள் கூட இத்தேர்வுகளில் எளிதாக வெற்றிப்பெறமுடிகிறது. 2012ஆம் ஆண்டு நடைபெற்ற நுழைவுத்தேர்வுகளில் மொத்தமுள்ள 5832 இடங்களில் 1412 இடங்களை இந்தி வினாத்தாட்களை கொண்டு நுழைவுத்தேர்வு எழுதிய மாணவர்கள் பிடித்துள்ளனர்.

கோவை வேளாண் பல்கலைக்கழத்திலிருந்து 92 இடங்களும், சென்னையில் உள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திலிருந்து 6 இடங்களும், மத்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்டு, அனைத்திந்திய நுழைவுத்தேர்வுகளின் மூலமே  அவை நிரப்பப்படுகின்றன. ஆனால் வினாத்தாட்கள் தமிழில் வழங்கப்படுவதில்லை என்பதால் இவற்றில் ஓர் இடம் கூட தமிழகத்தை சார்ந்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை அளிக்கும் உண்மையாகும். மற்ற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளிலும் இந்தி மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.


இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்ட 9 இந்திய மொழிகள் மட்டுமே பயிற்று மொழிகளாக உள்ளன. அவ்வாறு இருக்கும்போது அனைத்திந்திய அளவில் நடைபெறும் பொதுநுழைவுத்தேர்வுகளுக்கான வினாத்தாட்களை இந்த 9 மொழிகளிலும் தேவைக்கேற்ப தயாரிக்காமல் இந்தியில் மட்டும் தயாரிப்பது மற்ற மொழி பேசும் மாணவர்களுக்கு , குறிப்பாக தமிழ் பேசும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் ஆகும். இதன்மூலம் இந்தி படிக்காத மாணவர்களை இரண்டாம் தர மாணவர்களாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 இலட்சம் பேர் எழுதுகின்றனர். இவர்களில் 75 விழுக்காட்டினர், அதாவது 6 இலட்சம் பேர் தமிழ் வழியில் படித்தவர்கள் ஆவர். பொதுநுழைவுத் தேர்வுக்கான வினாத்தாட்கள் தமிழில் தயாரிக்கப்படாததால் இந்த மாணவர்களுக்கு உயர்கல்வி  வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற, அனைத்திந்திய அளவில் நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வுகளுக்கான வினாத்தாட்களை தமிழ் மொழியிலும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தவேண்டும்.

Monday, August 6, 2012

ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு ஆதரவானவர்களே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறார்கள் : ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ’’சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள 60 நீதிபதிகள் பணியிடங்களில் 8 இடங்கள் காலியாக உள்ளன.

மேலும் இரு நீதிபதிகள் விரைவில் ஓய்வு பெற இருப்பதால், அதனால் ஏற்படும் காலி இடங்க ளையும் சேர்த்து நிரப்புவதற்காக தகுதியுடைய 10 பேரின் பட்டியல் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு வன்னியர்கள் உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 20 இடங்கள் வன்னியர் களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போதுள்ள நீதிபதிகளில் ஒரே ஒருவர் மட்டுமே வன்னியர் ஆவார்.

தமிழ்நாட்டில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த கட்சிக்கு ஆதரவான வழக்குறை ஞர்கள் மட்டு மே உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் படுகிறார் கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே எழுப்பப்பட்டு வருகிறது.

நீதிபதிகள் நியமனத்தில் சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண் டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிறகாவது நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து சமுதாயங்களையும் சேர்ந்த தகுதியுடைய வழக்கறிஞர்களுக்கும், தலைமை நீதிபதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

இதற்கு வசதியாக நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்யவேண்டும். அதற்கு முன்பாக சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக 10 நீதிபதிகளை தேர்வு செய்யும்போது வன்னிய சமுதாயத்தை சேர்ந்த 3 பேருக்காவது வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’’ என்று கூறப் பட்டுள்ளது.

Sunday, August 5, 2012

மதுரையைப் போல் கிருஷ்ணகிரி கிரானைட் குவாரிகளிலும் முறைகேடு நடந்துள்ளது: ராமதாஸ்


 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் தர்மபுரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர்,    ‘’மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள கிரானைட் குவாரிகளில் ரூ. 16 ஆயிரம் கோடிக்கு முறைகேடு நடந்து இருப்பதாக மதுரை மாவட்ட முன்னாள் கலெக்டர் சகாயம் கூறி உள்ளார். அதுபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் நிறைய முறைகேடுகள் நடந்து இருக்கின்றன. இதை கண்காணித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கிரானைட குவாரிகள், மணல் குவாரிகள், ஜல்லி குவாரிகள் ஆகியவற்றை முறைப்படுத்தி உரிய கட்டணம் வசூலித்தால் ஆண்டு ஒன்றுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வரை வருமானம் வர வாய்ப்பு உள்ளது. வருமானத்துக்குத்தான் டாஸ்மாக் கடையை நடத்துகிறோம் என்று சொல்லும் அரசு குவாரிகளை முறைப்படுத்தினால் அதன் மூலம் வரும் வருமானத்தால் டாஸ்மாக் கடையை மூடி விடலாம்.


வருகிற டிசம்பர் மாதம் டாஸ்மாக் கடைகளுக்கு நிரந்தரமாக பூட்டு போடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். நேரமும், தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து இருந்தால் மாணவ- மாணவிகள் உயிரிழப்பு சம்பவங்கள் நடந்து இருக்காது. மாணவர் உயிரிழந்தால் ஒரு லட்சம் நிதி கொடுப்பது போதாது. இந்த நிதி உதவியை உயர்த்த வேண்டும்.

ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முடக்க காநாடக அரசு சதி செய்து வருகிறது.

இந்த சதியை முறியடிக்க தமிழக அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும். சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு என்ற எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை தமிழக அரசு விரைவாக எடுக்க வேண்டும்’’ என்று  கூறினார்.

Wednesday, August 1, 2012

ரெட்டி சகோதரர்களை மிஞ்சிய மதுரை கிரானைட் ஊழல்: சிபிஐ விசாரணை கோரும் ராமதாஸ்

சென்னை: கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களின் இரும்பு தாது சுரங்க ஊழலை மிஞ்சும் அளவிற்கு மதுரையில் கிரானைட் ஊழல் நடைபெற்று இருக்கக்கூடும் என்று தெரிகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் சட்டவிரோதமாக குவாரி அமைத்து கிரானைட் கற்கள் வெட்டி கடத்தப்பட்டதில் அரசுக்கு சுமார் ரூ. 16,338 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி அமைக்க உரிமம் பெற்றவர்கள் ஆளும் கட்சியினரையும், அதிகாரிகளையும் அனைத்து வகைகளிலும் குளிர்வித்து, அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கிரானைட் கற்களை வெட்டி கடத்துவதாக நீண்ட நாட்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
ஆனால் தற்போது அரசு புறம்போக்கு நிலங்கள், பொது நடைபாதைகள், தலித்துகளுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் போன்றவற்றையும் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் ஆக்கிரமித்து கிரானைட் கற்களை வெட்டி எடுத்திருக்கிறார்கள் என்றும், இதைத் தடுக்க வேண்டிய வருவாய்த்துறை, கனிம வளத்துறை அதிகாரிகளே பயந்துக் கொண்டும், பணம் பெற்றுக்கொண்டும் இந்த கடத்தலுக்கு துணை போயிருக்கிறார்கள் என்றும் மாவட்ட கலெக்டரே குற்றம் சாட்டியிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
மாவட்ட கலெக்டர் வெளியிட்ட தகவல்களை வைத்து பார்க்கும்போது ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பெரும் அரசியல் புயலை ஏற்படுத்திய ரெட்டி சகோதரர்களின் இரும்பு தாது சுரங்க ஊழலை மிஞ்சும் அளவிற்கு கிரானைட் ஊழல் நடைபெற்று இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
முந்தைய ஆட்சியில் மேலூர் பகுதியில் நடைபெறும் கிரானைட் ஊழல் பற்றி அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார்.
சட்டப்பேரவை தேர்தலின்போதும் கிரானைட் ஊழலை முன்வைத்து பிரசாரம் செய்தார். அதிமுக அரசு பதவி யேற்ற பின்னர் மேலூர் கிரானைட் ஊழல் தொடர்பாக திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வெளியிட்ட அப்போதைய தொழில்துறை அமைச்சர், இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால் அதன் பின்னர் இந்த பிரச்சனை கிணற்றில் போட்ட கல்லாவிட்டதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை. மாநிலத்தின் நிதி நெருக்கடியை போக்குவதற்காக மக்கள் தலையில் ரூ. 20,000 கோடி வரிச்சுமை, குடும்பங்களை சீரழிக்கும் மது விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் தமிழக அரசு, கண்ணுக்கு தெரிந்து நடைபெறும் கிரானைட் ஊழலையும், அதனால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
இந்த ஊழலை தடுத்து அரசின் வருவாயை பெருக்குவதற்காக அனைத்து குவாரிகளிலும் தமிழ்நாடு கனிமவள நிறுவனம் மூலமாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து விற்பனை செய்ய வேண்டும்.
அரசுக்கு ரூ. 16,338 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய கிரானைட் ஊழலில் உயர் அதிகாரிகளுக்கும், பெரும் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: