Saturday, March 31, 2012

மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்- வைகோ , ராமதாஸ்

சென்னை: மின்சார கட்டண உயர்வ திரும்பப் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ மற்றும் ராமதாஸ் ஆகிய தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறுகையில், "மின் கட்டண உயர்வு குறித்து, மின்சார ஒழுங்கு முறை ஆணையம், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திய போது, அதில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். கருத்துக் கேட்புக் கூட்டங்கள் வெறும் கண்துடைப்புக்காகவே நடத்தப்பட்டது என்பது இப்போது புலனாகிறது.

தமிழ்நாட்டில் சராசரி நடுத்தரக் குடும்பங்களின் மின்சார நுகர்வு இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் ஆகும். தற்போதைய கட்ட ணம் 201 யூனிட் முதல் 600 யூனிட் வரை ரூ. 2.20. ஆனால், அறிவிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு 500 யூனிட்டுக்கு மேல் ரூ. 5.75. இதற்கு அரசு மானியமும் கிடையாது.

எனவே இரண்டு மாதங்களுக்கு 600 யூனிட் பயன் படுத்தும் சராசரிக் குடும்பம் மின் கட்டணமாக ரூ. 2,130 அதிகம் செலவிட வேண்டும். பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு என்று மக்கள் மீது சுமையை ஏற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். தமிழக மக்கள் தலையில் பேரிடியாகத் தாக்கி உள்ள மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வற்புறுத்துகிறேன்," என்று கூறியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் ரூ.7,874 கோடிக்கு மின்சாரக் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியிருக்கிறது. இதன் மூலம் தமிழக மக்களின் தலையில் தாங்க முடியாத சுமை சுமத்தப்பட்டிருக்கிறது. மின்சார வாரியத்திற்கு ரூ.53 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதை சரிசெய்யவே இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருப்பதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

இழப்புகளை ஈடுசெய்ய மக்களை தண்டிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. ஏற்கனவே மின்வெட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள், இந்த கட்டண உயர்வால் அடியோடு முடங்கி, ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்படும். மின்கட்டண உயர்வின் தொடர் விளைவுகளால் விலைவாசியும் கடுமையாக உயரும். மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும்.

மின் கட்டண உயர்வை எதிர்த்து டெல்லியில் உள்ள மத்திய மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும். மின் கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் ஏப்ரல் 4-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலங்கள் முன்பு தொடர் முழுக்க போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: