Friday, March 23, 2012

மாதிரி நிதிநிலை பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் கட்சி

தமிழக அரசின் 2012-2013-ம் ஆண்டுக்கான மாதிரி நிதிநிலை பட்ஜெட்டை பாட்டாளி மக்கள் கட்சி தயாரித்துள்ளது.

இந்த மாதிரி பட்ஜெட்டை நேற்று சென்னையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, ஜெ.குரு எம்.எல்.ஏ., பா.ம.க. சென்னை மாவட்ட அமைப்பாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பா.ம.க. தயாரித்துள்ள மாதிரி பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் குறித்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், ‘’தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும் பா.ம.க. கடந்த 9 ஆண்டுகளாக மாதிரி நிதி நிலை அறிக்கையை முன்வைத்து வருகிறது. இப்போது 10-வது மாதிரி நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளோம்.

நிதி நிலை தயாரிப்பதற்கு முன்பாக தமிழக அரசு கடந்த நிதி நிலை அறிக்கையில் அளிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வளவு? அவை எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது? என்ற முழு அளவிலான நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சட்டமன்றத்தில் வைக்கவேண்டும்.


தற்போது தமிழ்நாட்டில் உள்ள நிதிநிலை குறித்த பொருளாதார ஆய்வு அறிக்கை வெளியிட வேண்டும். பா.ம.க. சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மாதிரி பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு விதை, உரம், உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.


12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கநடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள், கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூலிக்கக் கூடாது. இவற்றை கண்காணிக்க மாவட்டத்திற்கு ஒரு குழு அமைத்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகள் துவக்கப்படும்.


மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் கூடுதல் மின்சாரம் பெறவும், மற்ற மாநிலங்களில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் விலை கொடுத்து வாங்கி, விரைந்து செயல்பட்டு மின் தட்டுப்பாட்டை போக்குவோம்.

உலக அளவில் சிறப்பு பெற்ற காவல்துறை அரசியல் தலையீடு இல்லாமல், சுதந்திரமாக தன்னாட்சி அதிகாரம் பெற்ற துறையாக மாற்றப்படும். மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கேற்ப பெண்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி போன்றவற்றில் 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தமிழகத்தில் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். பாட்டாளி மக்கள் கட்சியின் மதிப்பீட்டின்படி நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய் வரவுகள் ரூ.94,523.94 கோடியாக இருக்கும். கடந்த ஆண்டின் வருவாய் வரவான ரூ.85,685 கோடியைவிட ரூ.8.838.81 கோடி அதிகமாக இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த மாதிரி நிதி நிலை அறிக்கையை நிறைவேற்றுவோம்.



தமிழக அரசு கூடங்குளம் பிரச்சினையில் நன்றாக நாடகம் ஆடி மக்களை ஏமாற்றி உள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறந்தால் தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்காது என்ற மாயதோற்றத்தை தமிழக அரசும், சிலரும் சேர்ந்து உருவாக்கிவருகிறார்கள்.

கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராக போராடுபவர்களை கொச்சைப்படுத்துவது, போராட்டத்தை நசுக்குவது, போராட்டக்காரர்களை கைதுசெய்வது போன்றவை தேவையற்றது. பல்வேறு பிரச்சினைக்கு இதுவழிவகுக்கும்.


இடைத்தேர்தல் தேவையில்லை என்று நாங்கள் ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஒரே ஒரு இடைத்தேர்தலில்தான் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அது எம்.ஜி.ஆர். காலத்தில் என்று நினைக்கிறேன்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நேர்மையாக, நாணயமாக, நாணயம் கொடுக்காமல் நடைபெற்றது என்று யாராவது சொல்ல முடியுமா? பாராளுமன்ற தேர்தலில் 3-வது அணியை உருவாக்க நிச்சயம் முயற்சி செய்வோம்’’ என்று கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: