Wednesday, February 29, 2012

டாஸ்மாக் கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பு: சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும்: ராமதாஸ்

டாஸ்மாக்' கடைகளில் விற்பனை நேரம் அதிகரிப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுகுறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


மது விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன், மாநிலம் முழுவதும் உள்ள மதுக்கடைகளை கூடுதலாக 2 மணி நேரம் திறந்துவைக்கும்படி தமிழக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மக்கள் நலனுக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.


மக்கள் நலனில் அக்கறை கொண்ட எந்த அரசும், மது குடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்காது. ஆனால் தமிழகத்தை ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் தங்களின் இலவசத் திட்டங்களுக்கு நிதி திரட்டித்தரும் கற்பகத்தரு'வாக மதுக்கடைகளை கருதுகின்றன. எனவே இலவச திட்டங்கள் அதிகரிக்கும் போதெல்லாம், மதுவிற்பனையையும் அதிகரிக்கின்றன. இதனால் 2003 ம் ஆண்டில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடியாக இருந்த மது விற்பனை வருமானம், தற்போது சுமார் ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது.


2003 ம் ஆண்டில் மதுக்கடைகளை அரசுடைமையாக்கிய அப்போதைய அரசு, காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 16 மணி நேரத்திற்கு மதுக்கடைகளை திறந்து வைத்திருந்தது. இதை எதிர்த்தும், தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய போராட்டங்கள், எடுத்த முயற்சிகள் ஆகியவற்றின் பயனாக முந்தைய ஆட்சியில் மதுக்கடைகளின் விற்பனை நேரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது.


ஆனால், தற்போதைய அ.தி.மு.க. அரசு, மதுக்கடைகளை காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்து வைக்கும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது பொறுப்புள்ள அரசுக்கு அழகல்ல. மதுக்கடைகளை மூடி, தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வரும் நிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது மக்களை அவமதிக்கும் செயலாகும். மதுக்கடைகளின் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் அதிகரிப்பதை ஆட்சியாளர்கள் சாதனையாக கருதக்கூடாது.


தெருவுக்குத் தெரு, மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பதால், இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. லட்சக்கணக்கான குடும்பங்கள் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மதுக்கடைகள் திறந்திருக்கும் நேரத்தை அதிகரிப்பது தமிழ்நாட்டில் குடும்ப வாழ்க்கை, சட்டம் ஒழுங்கு, கலாச்சாரம் ஆகியவை சீரழிவதற்கு வழிவகுக்கும். எனவே, மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை அதிகரிக்கும் முடிவை கைவிட்டு, படிப்படியாக மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை குறைத்து, முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.


இல்லாவிட்டால், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.


இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: