Sunday, February 12, 2012

மின் வெட்டை கண்டித்து போராட்டம்: ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நாள்தோறும் ஒரு மணி நேரமும், மற்ற மாவட்டங்களில் நாள் தோறும் 2 மணி நேரமும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படுகிறது.

இது தவிர, நாள்தோறும் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படுவதால், தமிழகமே இருளில் மூழ்கியுள்ளது.

தொடர் மின் வெட்டால் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள், விசைத்தறி, பஞ்சாலை, நூற்பாலை உள்ளிட்ட அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்ச முடியாமல் உழவர்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தேர்வு நேரம் நெருங்கிவிட்ட நிலையில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால், உறங்குவதற்குக் கூட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் எப்போது வரும், போகும் என்பதே தெரியாததால், தொழிற்சாலைகளை இயக்க முடியாத நிலை உள்ளது. இதனால் தொழிற்சாலைகளை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தமிழக அரசு கடை பிடித்து வரும் தவறான கொள்கைகள்தான் இந்த மின் வெட்டுக்கு காரணம் ஆகும். மின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கி வந்தது. ஆனால் நிதி நிலையை காரணம் காட்டி வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டதுதான் மின் வெட்டுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கி, தொழில் துறையினருக்கு வழங்கினால் ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் மின் வெட்டால் ஒவ்வொரு நாளும் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு தொழில் உற்பத்தி பாதிக்கப்படுவதாக தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

இது தமிழக பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வெளி மாநிலங்களில் இருந்தும் நடுவன் தொகுப்பில் இருந்தும் மின்சாரத்தை வாங்கி, தமிழ்நாட்டில் மின் வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வேளை மின் வெட்டு தவிர்க்கவே முடியாததாக இருந்தால், அதை முறைப்படுத்த வேண்டும். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விட்டு விட்டு மின்சாரம் வழங்குவதற்கு பதில் தொடர்ந்து 10 முதல் 12 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ம.க. சார்பில் வருகிற 20 ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாக மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இப்போராட்டத்தில் பா.ம.க. நிர்வாகிகளும், அதன் துணை அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: