Friday, February 17, 2012

பா.ம.க., தலைமையிலான அணிகள்

சேலம்: ""சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு, 2,000 ரூபாய் வரை ஏலம் விட்டு வருகின்றனர். இடைத்தேர்தல் வைப்பதை, பா.ம.க., விரும்பவில்லை. எந்த கட்சியின், எம்.எல்.ஏ., இறந்தாரோ, அந்த கட்சியை சேர்ந்தவரையே தேர்தல் ஆணையம் மூலம் வேட்பாளராக அறிவித்து, எம்.எல்.ஏ., பதவி வழங்கிட வேண்டும். இதனால், இடைத்தேர்தலில் தேவையில்லாத பண விரயம் தடுக்கப்படும் என, பா.ம.க., வலியுறுத்தி வருகிறது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

சேலத்தில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், திராவிட கட்சிகளின் ஆட்சிச் சீர்கேட்டிலிருந்து, தமிழ்நாட்டை மீட்டெடுத்து ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான செயல்திட்டமாக, "புதிய அரசியல் புதிய நம்பிக்கை' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதில், பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, தமிழரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் ராமதாஸ் கூறியதாவது: கடந்த, 45 ஆண்டுகளாக திராவிட கட்சிகளினால் தமிழகம் சீர்கெட்டுள்ளது. திட்டமிடாததால், மின் வெட்டு பிரச்னைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஆட்சியில் அமர்ந்தவுடன் அடுத்த தேர்தல் பற்றியும், ஓட்டு வாங்குவது குறித்தும், மக்களுக்கு இலவசங்கள் அளிப்பது பற்றியே சிந்திக்கின்றனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மூன்று மாதத்தில் மின் வெட்டை சீர் செய்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால், மின் வெட்டு பிரச்னைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. மின்சாரத்தின் மூலம் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் ஓடாத நிலையில், அதை மக்களுக்கு இலவசமாக அளித்து வருகின்றனர். நெய்வேலியில், 2, 490 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்துக்கு வெறும், 30 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வழங்குகின்றனர். கூடுதலாக நெய்வேலியில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். மின் வெட்டை கண்டித்து, வரும் 20ம் தேதி, பா.ம.க., சார்பில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் போராட்டம் நடத்தப்படும். சென்னையில் அன்புமணி, திருச்சியில் நான், சேலத்தில் ஜி.கே.மணி தலைமையில் மின் வெட்டு போராட்டம் நடத்தப்படும்.

பெரியார் பல்கலையில் ஊழல் நடந்துள்ளது. கல்வி நிறுவனங்களில் நடக்கும் ஊழலை கண்காணிக்க, விசாரிக்க தனி குழு அமைக்க வேண்டும். வரும் 27ம் தேதி ஜெனிவாவில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின், 19வது கூட்டம் நடக்கிறது. இதில் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் இலங்கையில் நடந்த போர் குற்றம் மீது விசாரணை நடத்திட தீர்மானம் கொண்டு வருகிறது. இதற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். போர் முடிந்து மூன்று ஆண்டு கடந்தும், இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, அரசியல் பகிர்வில் இலங்கை அரசு அக்கறை காட்டவில்லை. ஐ.நா., சபையில் கொண்டு வரும் தீர்மானத்தின் மீது விசாரணை நடத்தி, இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.

சங்கரன் கோவில் இடைத்தேர்தலில், பா.ம.க., போட்டியிடவில்லை. இடைத்தேர்தலில் ஓட்டுக்கு தலா, 2,000 ரூபாய் வரை ஏலம் விட்டு வருகின்றனர். பென்னாகரத்தில் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., 100 கோடி ரூபாய் வரை செலவழித்தது. ஒரு பைசா கூட செலவழிக்காமல் பா.ம.க., 75 ஆயிரம் ஓட்டுகளை பெற்று, தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை, "டெபாஸிட்' இழக்க வைத்தது. இடைத்தேர்தல் நடத்துவதால் பண விரயமாகிறது. இதை தடுத்திட எந்த கட்சி எம்.எல்.ஏ., இறந்தாரோ, அந்த கட்சியை சேர்ந்தவரையே தேர்தல் ஆணையம் வேட்பாளராக அறிவித்து, எம்.எல்.ஏ., பதவி வழங்கிட வேண்டும் என, பா.ம.க., வலியுறுத்தி வருகிறது. தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன் மாறி மாறி கூட்டணி அமைத்தோம். கொள்கை ரீதியாக, பா.ம.க., தனித்தே இருந்ததே தவிர, திராவிட கட்சிகளுடன் தேர்தல் சமயத்தில் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத்து கொண்டோம். இனி வருங்காலத்தில், பா.ம.க., தனித்தே போட்டியிடும். சட்டசபை, பாராளுமன்ற தேர்தலில், பா.ம.க., தலைமையிலான அணிகள் சார்பில் தனித்து போட்டி என்பதில் மாற்று கருத்து இல்லை என்றார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: