Tuesday, March 30, 2010

தோல்வியிலும் வென்ற பாமக!

பென்னாகரம்: பென்னாகரம் இடைத் தேர்தலில், தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவை, 3வது இடத்திற்குத் தள்ளி பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது பாமக.

இதன் மூலம் பாமக தனது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக் கொண்டுள்ளது.

பென்னாகரத்தில் 2வது இடத்தைப் பிடிக்கப் போவது பாமகவா அதிமுகவா என்ற பட்டிமன்றம் தான் கடந்த 1 மாதமாக தமிழகத்தி்ல நடந்து வந்தது.

பென்னாகரம் வன்னியர் சமூக மக்கள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் இங்கு பாமகவின் செல்வாக்கு சற்று உறுதியாகவே இருந்து வந்தது. ஆனால் கடந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் பாமகவின் நிலையை தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டன.

எனவே பென்னாகரம் தேர்தலில் தங்களை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு பாமகவினர் தள்ளப்பட்டனர்.

அவர்களுடைய இலக்கு வெற்றியாக இருந்தாலும் கூட உண்மையான இலக்கு 2வது இடத்தையாவது பிடித்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது.

பென்னாகரம் தொகுதியில் 1991ம் ஆண்டு தான் முதன்முதலாக பாமகவின் செல்வாக்கு வெளியுலகுக்குத் தெரிய வந்தது. 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 2வது இடத்தைப் பிடித்தது பாமக. அந்தத் தேர்தலில் வென்றது அதிமுகவின் புருஷோத்தமன்.

பின்னர் 1996 தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே.மணி வெற்றி பெற்றார். 2வது இடத்தைப் பிடித்த கட்சி சிபிஐ.

2001ல் நடந்த தேர்தலிலும் பாமகவின் ஜி.கே.மணியே வெற்றி பெற்றார்.

2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது பாமக. அதனால் தொகுதியை திமுகவுக்குக் கொடுத்து விட்டு மேட்டூருக்கு இடம் மாறினார் ஜி.கே.மணி. அத்தொகுதியில், முன்பு பாமகவில் இருந்தவரான பி.என்.பெரியண்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இப்படி பாமகவின் ஆதிக்கமே இத்தொகுதியில் அதிகம் இருந்து வந்த நிலையில் தற்போதைய தேர்தல் சூழல் வேறு மாதிரியாக இருந்தது. லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது. இதனால் பாமக இனி அவ்வளவுதான், வன்னியர்கள் பாமகவை கைவிட்டு விட்டனர் என்ற பேச்சு பலமாக எழுந்தது.

இதை மாற்ற பென்னாகரத்தில் வென்றாக அல்லது 2வது இடத்தையாவது பிடித்தாக வேண்டும் என்ற நிலைக்கு டாக்டர் ராமதாஸ் தள்ளப்பட்டார்.

இதனால்தான் திமுகவுக்கு நிகராக மிக மிக வேகமான முறையில் பாமகவினரின் தேர்தல் பணிகள் இருந்தன.
அதன் உழைப்புக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளி விட்டு 2வது இடத்தைப் பிடித்துள்ளது பாமக.

இதன்மூலம் தனது வலிமையை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது பாமக.

இதை வைத்து வன்னியர் சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தன்னை மீண்டும் வலுப்படுத்திக் கொள்ள பாமக தீவிரமாக களமிறங்கும்.

எனவே பென்னாகரத்தில் பாமக தோற்றிருந்தாலும் கூட அதன் மறு எழுச்சிக்கு இந்தத் தேர்தல் முடிவு பிள்ளையார் சுழி போட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: