Monday, March 8, 2010

திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை

தர்மபுரி: இடைத் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசின் காரை துப்பாக்கி ஏந்திய போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட முயன்றதையடுத்து பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பென்னாகரம் அருகே தின்னப்பட்டியில் பிரச்சாரத்துக்கு சென்ற ராமதாஸின் கார் நத்தஹள்ளி பகுதியில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டது.

கார் கண்ணாடிகளை இறக்கிய ராமதாஸ், தன்னை யார் என்று அடையாளப்படுத்தினார். அப்போது சோதனைச் சாவடியில் இருந்த 2 துப்பாக்கி ஏந்திய போலீஸார், காரை சோதனை செய்ய வேண்டும் என கூறினர்.

இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும் அவருடன் மற்ற கார்களில் வந்த தொண்டர்களும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போலீசாரின் செயலை கண்டித்து ராமதாஸ் காரில் அமர்ந்தபடியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அவருடன் இருந்த நூற்றுக்கணக்கான பாமகவினரும் தர்மபுரி-பென்னாகரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நின்றன.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மாவட்ட எஸ்பி சுதாகர், நடந்த நிகழ்ச்சிக்காக ராமதாசிடம் வருத்தம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தனது மறியலை ராமதாஸ் கைவிட்டார்.

இது குறி்த்து பென்னாகரம் தொகுதி பாமக பொறுப்பாளரான எம்எல்ஏ வேல்முருகன் கூறுகையில்,

பிரசாரத்துக்கு வந்த எங்கள் தலைவரின் கார் மட்டும் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது. ஆனால், திமுக முக்கிய நிர்வாகிகள் சென்ற கார்களை போலீசார் எநத சோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை. ராமதாசின் காரை சோதனை செய்து பாமகவுக்கு அவமானத்தை ஏற்படுத்த திமுகவினர் முயற்சி செய்தனர் என்றார்.

திமுகவுக்கு அன்புமணி எச்சரிக்கை:

இந் நிலையில் பென்னாகரத்தில் திமுக-பாமகவினர் இடையே ஏற்பட்ட அடிதடியில் காயமடைந்த இரு பாமகவினர் பென்னாகரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நிருபர்களிடம் பேசுகையில்,

பென்னாகரம் இடைத்தேர்தலில் சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்காமல், வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, செல்போன்களை திமுகவினர் வழங்கி வருகின்றனர். அதை நிறுத்த வேண்டும். இதைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மாவட்ட காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறை அதிகாரிகளும் வேறு இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.

தேர்தல் பணியாற்றி கொண்டிருந்த பாமக நிர்வாகிகள் 11 பேரை திமுகவினர் தாக்கியுள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற திமுகவினர் ஒத்துழைக்க வேண்டும். இல்லாவிட்டால் பாமக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் நடவடிக்கையில் இறங்கும் என்றார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: