Tuesday, March 2, 2010

பாமக எம்எல்ஏக்களுக்கு கொலை மிரட்டல்!:

இந் நிலையில் பாமக எம்எல்ஏவுக்கு பாதுகாப்பு தரக் கோரி காவல்துறை மற்றும் உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

பென்னாகரம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம், வேட்டி, சேலை வினியோகிக்கப்படுவதாக அரசியல் கட்சிகள் பரஸ்பரம் புகார் கூறி வருகின்றன.

இந் நிலையில் பாமக எம்எல்ஏவும் அக் கட்சியின் தேர்தல் பணிக்குழுத் தலைவருமான வேல்முருகன், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு கடந்த வாரம் ஒரு புகார் அனுப்பினார்.

அதில், பென்னாகரம் தொகுதியில் ஒரே இரவில் அதிகாரிகள் உதவியுடன் 32,000 குடும்பங்களுக்கு, வேஷ்டி, புடவை, ஜாக்கெட், துண்டு, மற்றும் ரூ. 3,000 வழங்கப்பட்டது என்று கூறியிருந்தார்.

மேலும், இதுபோன்ற புகார்களை அனுப்புவதால், என் மீது கோபம் கொண்டவர்கள், என்னை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்கள். எனவே, எனக்கு போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் என்றும் தனது மனுவில் கோரியிருந்தார்.

இது குறித்து நரேஷ் குப்தா நிருபர்களிடம் கூறுகையில்,

பாமக அளித்த புகாரைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோரை விசாரணை அறிக்கை அனுப்புமாறு ஞாயிற்றுக்கிழமையன்று அறிவுறுத்தியிருந்தேன். கலெக்டர் விடுப்பில் சென்றிருந்ததால், தேர்தல் நடத்தும் அலுவலர் மகேஸ்வரி ரவிகுமார் தான் அறிக்கையை அனுப்பியுள்ளார்.

அதேபோல எஸ்பி சுதாகரும் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், பல இடங்களில் வேஷ்டி, சேலைகள் கொடுப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அனுப்பியுள்ள அறிக்கையில், மாதேஹல்லி கிராமத்தி திமுக பிரமுகரிடமிருந்து 35 வேஷ்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வல்லூர், சேக்காடு, ஒண்டிக்கோட்டை கிராமங்களில் இருந்தும் வேஷ்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் பாப்பாரப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பென்னாகரம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட இடத்தில் இருந்தும் வேஷ்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

பென்னாகரத்தில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 8 கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பாமக எம்.எல்.ஏ. வேல்முருகனுக்கும் அதே அளவில் பாதுகாப்பு தருமாறு போலீசாருக்கு கடிதம் எழுதவுள்ளேன்.

தேர்தலின்போது மத்திய படை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. காவல்துறையினர் நேர்மையாகவும், நடுநிலையாகவும் செயல்பட்டால் இடைத் தேர்தலுக்கு மத்திய பாதுகாப்புப் படை தேவைப்படாது.

நேர்மையாகவும், நடுநிலையாகவும், நெருக்கடிக்கு பணியாமலும் தேர்தல் பணிகளை போலீசார் மேற்கொள்வதை உள்துறை செயலாளரும், டிஜிபியும் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றார் குப்தா.

புதுச்சேரி பாமக எம்எல்ஏவுக்கும் கொலை மிரட்டல்:

இந் நிலையில் புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதி பாமக எம்.எல்.ஏ அனந்தராமன், பொன்னகரத்தில் பாமக வேட்பாளருக்காக இடைத்தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந் நிலையில் அவரது வீட்டுக்கு வந்துள்ள ஒரு கடிதத்தில், ஒரு ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி உங்களை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளது. எனவே நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

அந்த தபாலில் அனுப்புனர் முகவரியில் எஸ். முருகன் நோணாங்குப்பம் என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி. வர்மாவிடம் அனந்தராமன் புகார் அளி்த்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: