Wednesday, March 3, 2010

ரூ.7,030 கோடி 'விவசாய நிழல் பட்ஜெட்'-வெளியிட்டார் ராமதாஸ்

சென்னை: விவசாயத்துக்கு முக்கியத்துவம் தரக் கோரி பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில ஆண்டுகளாக வேளாண் நிழல் பட்ஜெட் வெளியிட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் வேளாண் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளார் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த பட்ஜெட் ரூ.7,030 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமதாஸ் கூறுகையில்,

இந்த பட்ஜெட் ரூ.7,030 கோடி அளவிற்கு திட்ட மதிப்பீடுகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த உற்பத்தியில் வேளாண் பிரிவு முதன்மையானதாக கருதப்பட்டாலும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமல், இரண்டாம் நிலையில் இருக்கும் தொழில் பிரிவிற்கும், மூன்றாம் நிலையிலிருக்கும் சேவைப் பிரிவிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து, அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

உணவிற்குப் பின்தான் 'வசதிகள்' என்ற உண்மையை உணர்ந்து அரசுகள் செயல்படாவிட்டால் உணவுப் பற்றாக்குறையும், ஊட்டச்சத்து பற்றாக்குறையும் ஏற்பட்டு 'உணவு வீக்கத்திற்கு' வழிவகுத்து நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும் குலைத்துவிடும்.

எனவே வேளாண்மையை முதன்மை நிலையில் நிறுத்துவதற்கான முக்கியத்துவத்தை கொடுக்கும் வகையில் இந்த நிதி நிலை அறிக்கையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத்துறை வளர்ச்சி 2 சதவீதம் என்ற அளவிலேயே இருந்து வருகிறது. அதை 4 சதவீத அளவிற்கு உயர்த்தும் வகையில் இந்த நிழல் நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

50 சதவீதத்துக்கு மேல் நிலப்பரப்பில் பருவ மழையை நம்பியிருக்கும் புன்செய் நிலங்கள் கவனிக்கப்படாமல் விடப்பட்டதால் இன்று உணவிலும், ஊட்டச்சத்துகளிலும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதனால் புன்செய் நிலங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவில் உற்பத்தி செய்து, அவற்றை உரிய விலைக்கு கொள்முதல் செய்து, பொது வழங்கல் கடைகள் மூலம் மக்களுக்கு வினியோகம் செய்ய இந்த பட்ஜெட்டில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் நிரந்தர வருமானம் பெற 'உழவர் ஊதியக் குழு' அமைத்து விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் குடும்பம் ஒவ்வொன்றிற்கும் குறைந்தப்பட்சமாக ஆண்டுக்கு ரூ. 25,000 வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் கிடைக்க வழி செய்யப்படும்.

அரசு ஊழியர்களுக்கு ஊதியக்குழு இருப்பதுபோல் விவசாயிகளுக்கு இந்த ஊதியக் குழு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டு அவர்களது ஊதியம் உயர்த்தப்படும்.

நகரங்களில் வீட்டுக்கு ஒரு செடி திட்டத்தை அறிமுகப்படுத்தி அதற்கான செடிகள், விதைகள், இடுபொருட்கள் முதலியவற்றைக் கொடுத்து உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வீட்டைச் சுற்றி இடம் வைத்திருப்பவர்கள் வீட்டுத் தோட்டம் போடுவதற்கும் வசதிகள் செய்து தரப்பபடும்.

நகரங்களில் பால் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த பாலோடு கீரை வழங்கும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

தமிழக சட்டசபைக்கு நியமன எம்எல்ஏக்களாக 2 விவசாயிகளை நியமிக்க வேண்டும். இதன் மூலம் சட்டமன்றத்தில் விவசாயிகளின் கோரிக்கை சரிவர கவனிக்கப்படும் என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: