பென்னாகரம்: தோல்வி பயம் காரணமாகத் தான் முதல்வர் கருணாநிதி பென்னாகரத்துக்கு பிரச்சாரம் செய்ய வருகிறார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பென்னாகரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ்,
1962ல் காங்கிரஸ் பணம் கொடுத்து ஓட்டு வாங்கியது என்று அண்ணா பிரசாரம் செய்து திமுகவை வளர்த்தார். ஆனால் இன்று அண்ணாவை தலைவராக கொண்டு இருக்கும் கலைஞர் தலைமையிலான திமுகவினர் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிப்பதோடு நின்று விடுகிறது. தொகுதியில் விதிமுறைக்கு மீறி நடப்பவைகளை கண்டிப்பதில்லை.
பென்னாகரம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் திமுக தலைவருக்கு ரூ. 50 லட்சம் செலவில் பிரமாண்டமான ஏப்பாடுகளை செய்கிறார்கள். ஆனால் பென்னாகரத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ. 10 லட்சத்துக்கு மேல் செலவு செய்யக்கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
திமுகவில் சேர வேண்டும் என்று பாமக தொண்டர்களை மிரட்டி வருகிறார்கள். ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தால் பாமகதான் வெற்றி பெறும்.
தோல்வி பயத்தில்தான் முதல்வர் கருணாநிதி பென்னாகரத்துக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வருகிறார் என்றார் ராமதாஸ்.
ஒகேனக்கல் திட்டம்-ராமதாஸ் 'கிடுக்கிப்பிடி':
இந் நிலையில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கருணாநிதி பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தர்மபுரி- கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது.
கடந்த 1998ம் ஆண்டே இதற்கான தடையில்லாச் சான்றிதழை மத்திய அரசு அளித்திருந்தாலும், தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு வந்தது.
இரண்டாண்டுகளுக்கு முன்பு முதல்வர் கருணாநிதி இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தியபோது கர்நாடகாவில் பிரச்சனை வெடித்தது.
ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம் என கர்நாடக கட்சிகள் வரிந்துகட்டிக் கொண்டு கிளம்பின. அப்போது கர்நாடக சட்டசபைத் தேர்தல் நடந்து கொண்டிருந்ததால் கர்நாடக கட்சிகள் இவ்விவகாரத்தை பயன்படுத்தின.
இதற்கு பதிலடியாக தமிழகத்தில் உள்ள அமைப்புகளுடன், நடிகர்களும் ஒன்றாக சேர்ந்து, ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும் என உண்ணாவிரதம் இருந்து, நட்சத்திர போராட்ட களேபரங்கள் நடந்தேறின.
அப்போது இவ்விவகாரத்தில் தலையிட்ட முதல்வர் கருணாநிதி தேர்தல் முடியட்டும், பொறுமையாக இருங்கள். அப்புறம் பார்த்துக் கொள்கிறேன் எனக்கூறி தற்காலிமாக பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனால் அதன் பின்னர் நீண்டநாட்களாக மறக்கடிக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தற்போது பென்னாகரம் இடைத்தேர்தலை ஒட்டி மீண்டும் அரசியல் கட்சிகளுக்கு ஆயுதமாக சிக்கியுள்ளது.
கடந்த வாரம் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் கர்நாடகத்தில் எதிர்ப்புக் குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது.
முதல்வர் கருணாநிதியின் அன்பு சகோதராக வர்ணிக்கப்படும் கர்நாடக முதல்வர் எதியூரப்பா, ஒகேனக்கல் திட்டத்தில் பிரச்னை உள்ளது. அதை சரி செய்யாமல் திட்டத்தை நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம். இதுபற்றி தமிழகத்துடன் பேசுவோம் என்று கூறியிருந்தார்.
ஜப்பான் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு ரூ.1,938 கோடி செலவில் திட்டப் பணிகள் நடந்து வருவதாக துணை முதல்வர் ஸ்டாலின் கூறினாலும், பிரதான திட்டப் பணிகள் துவங்கும் சமயத்தில் கர்நாடகா தரப்பில் முட்டுக்கட்டை விழாமல் இருக்காது என்றே கருதப்படுகிறது.
கர்நாடகாவின் எதிர்ப்பை சமாளித்து, கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை உரிய முறையில் தொடங்கி நடத்துவது என்பது தமிழக அரசுக்கு சவாலாகவே அமையும்.
இந்த சூழலிலை பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு மிக லாவகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஒகேனக்கல் திட்டத்தை தாமதப்படுத்தி, தர்மபுரி மாவட்ட பென்னாகரம்வாசிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் வறட்சி நிலையை ஏற்படுத்தியதற்கு திமுகவே காரணம் எனக் கூறி வாக்காளர்களை உசுப்பேற்றி உள்ளார்.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸும் இதே அஸ்திரத்தை தன் பாணியில் கையாளத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெங்களூர் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கர்நாடகமும், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழ்நாடும், காவிரி தண்ணீரில் அவரவருக்கான பங்கீட்டிலிருந்து நிறைவேற்றி கொள்ளலாம் என பல ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
இந்த ஒப்பந்தம் ஏற்பட்டவுடனேயே கர்நாடக அரசு, வேகவேகமாக பெங்களூர் குடிநீர் திட்டத்தை தொடங்கி நிறைவேற்றியது. ஆனால், தமிழக அரசு மட்டும் ஒகேனக்கல் திட்டத்தை நீண்டகாலமாக கிடப்பில் போட்டு விட்டது.
பெங்களூர் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் நிறைவேற்றத் தொடங்கியிருந்தால், இந்நேரமும் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட மக்களின் தாகம் தீர்ந்திருக்கும்.
ஜப்பான் நாட்டில் இருந்து நிதி உதவி வரவேண்டும் என்று தமிழக அரசு காலம் கடத்தியது. அதன் விளைவாக இன்றைக்கு காவிரி கரையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் தண்ணீருக்காக தவித்து நிற்கிறார்கள்.
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான உடன்பாடு கையெழுத்தான 10 ஆண்டுகள் கழித்து திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அப்போதாவது போர்க்கால அடிப்படையில் திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், இடைப்பட்ட 2 ஆண்டு காலத்தில் திட்டத்தை நிறைவேற்றி முடித்திருக்கலாம்.
பென்னாகரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு முதல்வர் கருணாநிதி வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வரை நடந்த இடைத் தேர்தல்களின் போதெல்லாம் பிரசாரத்திற்காக செல்லாத முதல்வர், பென்னாகரத்தில் மட்டும் பிரசாரம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது.
அவர் வருவதற்கு முன்பாக அவரது அன்பு சகோதரர் எதியூரப்பா சொல்வதை போல, ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு வார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அறிவிப்பு செய்ய வேண்டும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் இடையில் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தையும், அதற்கு யார் காரணம்? என்பதையும் அவர் பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்.
எவ்வளவு தான் கொட்டிக் கொடுத்தாலும், மனச்சாட்சியின்படி வாக்களிப்போம் என்ற உறுதியான முடிவிற்கு பென்னாகரம் வாக்காளர்கள் வந்திருக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் நல்ல தீர்ப்பு வழங்கி, ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் ஆண்டு கணக்கில் காலம் கடத்தியவர்களுக்கு சரியான பாடம் புகட்ட தயாராக இருக்கிறார்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
Tuesday, March 23, 2010
'தோல்வி பயம் காரணமாக பென்னாகரம் வரும் கருணாநிதி'-ராமதாஸ்
Subscribe to:
Post Comments (Atom)
காப்புரிமை(Copyrights)
--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------ Users Visited:
No comments:
Post a Comment