Wednesday, March 24, 2010

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் துவங்கப்பட்டதா?பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் சந்தேகம் :ராமதாஸ்

தர்மபுரி:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, இந்த இடைத்தேர்தலிலும் பிரதானமாக பேசப்பட்டு வருவதால், திட்டம் துவங்கப்பட்டதா, இல்லையா என்ற சந்தேகம், பென்னாகரம் தொகுதி வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத்தடி நீரில் ப்ளோரைடு தன்மை அதிகம் இருப்பதால், இப்பகுதி மக்கள், 'ப்ளோரசிஸ்' நோய் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த மாவட்ட மக்களுக்கு, காவிரி ஆற்றுப்படுகையில் இருந்து மட்டுமே பாதுகாப்பான குடிநீர் வழங்க முடியும் என்றாலும், காவிரி பாய்ந்தோடும் ஒகேனக்கல் பகுதி, கடல் மட்டத்தில் இருந்து பல அடி ஆழத்தில் இருப்பதாலும், உயரத்தில் உள்ள பென்னாகரம், தர்மபுரி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் தொழில் நுட்ப பிரச்னைகள் அதிகம் இருந்தது.

காமராஜர் முதல்வராக இருந்த காலத்தில் இருந்து, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலையே தொடர்ந்தது.ஒவ்வொரு முறையும் சட்டசபை, லோக்சபா தேர்தல் நேரத்தில் மட்டும், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதான வாக்குறுதியாக ஒகேனக்கல் குடிநீர் திட்டம் எதிரொலித்து வந்தது.கடந்த 2006ம் ஆண்டில், 'தி.மு.க., தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும்' என, வாக்குறுதி அளித்து, தற்போது ஜப்பான் பன்னாட்டு வங்கி நிதியுதவியுடன் 1,938 கோடி ரூபாயில் திட்டப் பணிகளின் முதல் கட்ட பணி நடந்து வருகிறது.

இதனால், இடைத்தேர்தல் பிரசாரத்தில், ஒகேனக்கல் குடிநீர் திட்டம் குறித்து பிரதானமாக இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.நேற்று முன்தினம் பிரசாரத்துக்கு வந்த அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, 'ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் துவங்கப்படவில்லை' என பேசினார்.பா.ம.க.,வும், ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டை கூறி வருகிறது.நேற்று முன்தினம் பிரசாரத்துக்கு வந்த துணை முதல்வர் ஸ்டாலின், ஒகேனக்கல் திட்டப் பணிகள் நடந்து வருவதாகவும், அதை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும், நிரூபிக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் தங்கள் கட்சிப் பதவிகளில் இருந்து விலகி கொள்வார்களா, திட்டப் பணிகள் நடக்கவில்லை என்றால் தன்னுடைய பணியை ராஜினாமா செய்வதாகவும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த இடைத்தேர்தலிலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் குறித்து, பிரதானமாக பேசப்பட்டு வருவதால், திட்டம் துவங்கப்பட்டதா, இல்லையா என்ற சந்தேகம், வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நிருபர்களிடம் கூறியதாவது:ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு புதிய ஆபத்து வந்துள்ளது. இதில், பிரச்னை இருப்பதாகவும், பிரச்னை தீர்வுக்கு பின் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனவும், கர்நாடகா, தமிழக தலைமை செயலர்கள் இது குறித்து சந்தித்து பேச வேண்டும் எனவும், கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.நாளை (இன்று) பென்னாகரத்துக்கு வரும் முதல்வர் கருணாநிதி, இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி இரு ஆண்டுகள் கிடப்பில் போட்டதற்கான காரணத்தையும், திட்டத்தில் சிக்கல் இல்லை என்பதையும், இரு மாநில தலைமை செயலர்கள் சந்தித்து பேச வேண்டியது இல்லை என அறிவிக்க வேண்டும். அப்போது தான் திட்டம் குறித்து தெளிவு கிடைக்கும்.இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

ராமதாஸ் பிரசாரத்துக்குஅனுமதி மறுப்பு:பென்னாகரம் பேரூராட்சி பகுதியில் பிரசாரம் செய்ய ராமதாஸ், அன்புமணி இருவரும் திட்டமிட்டிருந்தனர். நேற்று, ஜெயலலிதா வருகையால் பா.ம.க., பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.அதேபோல், இன்று பென்னாகரம் பகுதியில் உள்ள 15 வார்டுகளிலும் ராமதாஸ் பிரசாரம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், முதல்வர் கருணாநிதி வருகையாலும், பொதுக்கூட்டம் நடப்பதாலும் ராமதாஸ் பிரசாரத்துக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.நாளை மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவடைகிறது. பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் அருகே ராமதாஸ் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: