Wednesday, December 23, 2009

பொங்கல் சமயத்தில் இடைத்தேர்தல் கூடாது-பாமக

சென்னை: பொங்கல் பண்டிகையின்போது பென்னாகரத்தில் இடைத் தேர்தல் நடத்துவது மோதல்களுக்கு வழி வகுக்கும். எனவே தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:

திருச்செந்தூர், வந்தவாசி தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக பென்னாகரம் சட்டசபை இடைத் தேர்தலுக்கான அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்த தொகுதியின் உறுப்பினர் மரணமடைந்த 21 நாட்களிலேயே இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி மின்னல் வேகத்தில் ஒரு இடைத் தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, உள்ளூர் மற்றும் மாநில அளவிலான பண்டிகைகள், தேசிய அளவிலான விழாக்கள் குறுக்கிடுகின்றனவா என்பது பரிசீலிக்கப்பட்டு, அதற்கேற்றபடி தேர்தல் அட்டவணை முடிவு செய்யப்படுவது வழக்கம்.

தேர்தல் பிரச்சாரம், வாக்காளர்களை வீடு வீடாக சென்று சந்தித்து ஆதரவு கேட்பது போன்ற தேர்தல் பணிகளில் ஈடுபடுவதில் பண்டிகைகளும், விழாக்களும் தடையாக இருக்கக் கூடாது என்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

ஆனால், போகிப் பண்டிகை, தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாள், திருவள்ளுவர் திருநாள், காணும் பொங்கல் என தமிழர்கள் அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து, ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகை காலத்தில் பென்னாகரம் இடைத்தேர்தலில் உச்சகட்ட பிரச்சாரம் நடைபெற வேண்டிய சூழ்நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது. இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் ஜனவரி 6ம் தேதி முதல் ஒருவார காலத்திற்கு சட்டசபை கூட்டமும் நடைபெற இருக்கிறது. இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலேயே பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல் அட்டவணையை முடிவு செய்து வெளியிட்டிருக்கிறது.

பொதுவாக இடைத்தேர்தல் அட்டவணையை முடிவு செய்வதற்கு முன்பு மாநில அரசிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்பது வழக்கம். பென்னாகரம் இடைத்தேர்தல் தேதியை முடிவு செய்வதற்கு முன்னர் மாநில அரசிடம் கருத்து கேட்கப்பட்டதா?

ஆம் என்றால் தேர்தல் பணியாற்றுகின்ற நாட்களில் தமிழர்கள் ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகைகள் குறுக்கிடுகின்றன என்பதை மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றதா? கருத்து கேட்கவில்லை என்றால், இப்போதும் காலம் கடந்து விடவில்லை.

கருத்து வேறுபாடுகளையும் தனிப்பட்ட கோபதாபங்களையும் மறந்து தமிழர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு கொண்டாடுகின்ற பண்டிகை காலத்தில் மோதல்களை வளர்க்கும் தேர்தலை நடத்துவது உசிதமல்ல என்பதையும், பென்னாகரம் இடைத்தேர்தலை பிப்ரவரி மாதத்தில் நடத்தலாம் என்பதையும் மாநில அரசும், முதலமைச்சரும் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும்.

பாமக இதனை தேர்தல் ஆணையத்திற்கு கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதர அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையத்திடம் இந்த கோரிக்கையை வலியுறுத்திக் கூற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

பலத்தை காட்ட பாமக ரெடி?:

இந் நிலையில் பென்னாகரம் தொகுதியில் தனது பலத்தை நிரூபிக்க அத்தொகுதியில் பாமக போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலில் பாமக போட்டியிடவில்லை, யாருக்கும் ஆதரவும் தெரிவிக்கவில்லை. அதேபோல, அதற்கு முன்பு நடந்த ஐந்து தொகுதி இடைத் தேர்தலிலும் அது யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை, போட்டியிடவும் இல்லை.

இந்த நிலையில் தற்போது பென்னாகரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர் பெல்ட்டில் வரும் தொகுதி பென்னாகரம். இது முன்பு பாமகவின் கோட்டைகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால் தற்போது இத்தொகுதி திமுக வசம் உள்ளது. அதை விட முக்கியமாக அத்தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்து மறைந்த பெரியண்ணன் பாமகவிலிருந்துதான் திமுகவுக்குத் தாவி வந்தார்.

பாமகவைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் குறித்து அது ஒரு கொள்கையுடன் இருப்பதாக அக்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடர்ந்து கூறி வருகிறார்.

ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவர் நீதிமன்றத் தீர்ப்பு காரணமாக மாற்றப்பட்டு அங்கு காலியிடம் ஏற்பட்டால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்தலாம் தனது நிலைப்பாடு நிலைப்பாடு என அவர் கூறிவருகிறார்.

வேறு காரணங்களுக்காக காலி இடம் ஏற்பட்டால் ஏற்கெனவே வெற்றி பெற்ற வேட்பாளரின் கட்சியின் சார்பில் வேறொருவரை உறுப்பினராக நியமிக்கும் முறையைக் கொண்டு வரலாம் எனவும் அவர் யோசனை தெரிவித்து வருகிறார்.

ஆனால் வந்தவாசி தொகுதி பாமகவுக்கு சற்றே சாதகமான தொகுதி. இதுவும் வன்னியர் பெல்ட்டில் உள்ள தொகுதிதான். ஆனால் கொள்கை, கோட்பாடு என்று கூறி வந்தவாசியில் பாமக போட்டியிடாததால் அக்கட்சியினர் பெரும் வருத்தமடைந்தனர்.

இதை உணர்ந்த டாக்டர் ராமதாஸ், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியின்போது, பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சியின் உயர் நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றார். இதன் மூலம் பாமக பென்னாகரத்தில் போட்டியிடும் என்பதை அவர் மறைமுகமாக உணர்த்தினார்.

மேலும், ஒரு வேளை பாமக போட்டியிட்டாலும் கூட அது தனித்துதான் போட்டியிடும் என்றும் கூறியிருந்தார் ராமதாஸ்.

தற்போது பென்னாகரத்திற்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாமகவினர் உற்சாகமடைந்தனர். தொகுதி முழுவதும் இப்போதே தேர்தல் பணிகளை அவர்கள் தொடங்கி வருகின்றனர்.

இந்தத் தொகுதியிலிருந்துதான் பாமக தலைவர் ஜி.கே.மணி இரண்டு முறை சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே இதில் இப்போது வெற்றி பெறுவது கெளரவம் சம்பந்தப்பட்டதாக பாமகவினர் கருதுகின்றனர்.

எனவே இத்தேர்தலையும் புறக்கணிக்காமல் போட்டியிட்டு நமது பலத்தைக் காட்டி விட வேண்டும் என்ற வேகத்தில் பாமகவினர் உள்ளனர். அதே கருத்தில்தான் பாமக தலைமையும் இருப்பதாக தெரிகிறது.

அதேசமயம், இந்தத் தேர்தலில் போட்டியிட்டு வென்றால், அதை வைத்து அடுத்த கூட்டணியில் சேர வாய்ப்பாக அமையும் என்பதும் பாமகவினரின் எண்ணம். தற்போது யாரும் சீந்தாத, சேர்க்க விரும்பாத கட்சியாக மாறிப் போயுள்ளது பாமக என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே பென்னாகரம், பாமகவுக்கு புத்துயிர் அளிக்கும் தேர்தல் என்றால் அது மிகையில்லை.

இதை மனதில் கொண்டு பா.ம.க.​ ஒன்றிய,​​ மாவட்ட நிர்வாகிகள் கடந்த இரு வாரங்களாக பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.​ பா.ம.க.​ ஆதரவு உள்ள பகுதிகளில் அவர்கள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

இதன் அடிப்படையில் வலுவான வேட்பாளரை நிறுத்தி முழு மூச்சாக பிரசாரம் செய்து, பாமகவின் வெற்றியை உறுதி செய்ய அக்கட்சியினர் தீவிரமாக உள்ளனர்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: