Sunday, October 11, 2015

திருநெல்வேலியில் பா.ம.க-வின் தென் மண்டல அரசியல் மாநாடு



ஒரு பைசா ஊழல் இல்லாத, ஒரு கைப்பிடி இயற்கை வளக் கொள்ளை இல்லாத தமிழகத்தை உருவாக்க பாட்டாளி மக்கள் கட்சியை ஆட்சியில் அமர்த்துவோம் 

இந்தியாவின் முதன்மை மாநிலமாக உருவாகியிருக்க வேண்டிய தமிழ்நாட்டின் இன்றைய நிலை பரிதாபத்திற்குரியதாக மாறியிருக்கிறது. முன்னேற்றத்திற்கு அடிப்படையான அனைத்து வளங்களும் ஆட்சியாளர்களால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகின்றன என்பது தான் வருத்தம் தரும் உண்மை ஆகும்.

தமிழகத்தின் மக்கள் அனைவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்  என்பது தான் மக்கள் நலன் விரும்பும் ஓர் அரசின் அடிப்படைக் கடமையாகும். இதற்காக வேளாண் வளர்ச்சி மிகவும் அவசியமாகும். நல்ல உற்பத்தித்திறன் கொண்ட விவசாயத்துறை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. அதேபோல், வளர்ச்சிக்குத் தேவைப்படும் பிற காரணிகளான தரமான, தடையற்ற குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய மின்சாரம், சிறப்பான மனித வளம், நல்ல தலைமை ஆகிய எதுவுமே தமிழகத்தில் இல்லாதது தான் வளர்ச்சியில் பின்தங்கியதற்கு முக்கியக் காரணமாகும்.

இது ஒருபுறமிருக்க, இன்னொரு புறம் இயற்கை வளங்கள் திட்டமிட்டு கொள்ளையடிக்கப் படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் ரூ.60 லட்சம் கோடி மதிப்புள்ள தாது மணலும், ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள கிரானைட் கற்களும், ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள ஆற்று மணலும் கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. இந்த கொள்ளையை தடுக்க தமிழக ஆட்சியாளர்கள் துரும்பைக் கூட கிள்ளிப்போடவில்லை. மாறாக, இந்த இயற்கை வளக் கொள்ளைகளை வெளிக்கொண்டு வருவதற்காக நடத்தப்படும் விசாரணையை முடக்குவதில் தான் தமிழக அரசு ஆர்வம் காட்டுகிறது.

தமிழகத்தின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியிலும், அதை சார்ந்த ஆறுகளிலும் தடையில்லாமல் மணல் கொள்ளை நடக்கிறது. கொள்ளையடிக்கப்படும் மணல் கேரள மாநிலத்திற்கு கடத்தப்படுகிறது. மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை ஆணையிட்ட பிறகும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதைத் தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களே மணல் கொள்ளைக்கு ஆதரவளித்துக் கொண்டிருப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியதாகும்.

வறுமை ஒழிக்கப்பட வேண்டுமானால் உள்ளடக்கிய வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டும். அதற்காக வேளாண்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும்; உற்பத்தித்துறை மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கான நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் ஒட்டுமொத்த தொழில் உற்பத்தியில் 60 விழுக்காடு சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும், 15%  கோவை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தொழிற்சாலைகள்  ஏற்படுத்தப்பட்டால் தான் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் பெருகும். குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சொல்லிக்கொள்ளும் படியாக ஒரு தொழிற்சாலை கூட அமைக்கப்படவில்லை. நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட போதிலும் அங்கு இதுவரை எந்த தொழிற்சாலைகளும் தொடங்கப்படவில்லை.  இதற்குக் காரணம் போதிய கட்டமைப்பு வசதிகளை திமுக, அதிமுக அரசுகள் ஏற்படுத்தாதது தான்.

தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் வளர்ச்சியடைந்த ஒரே விஷயம் ஊழல் தான். எங்கும் ஊழல்... எதிலும் ஊழல் என்பது தான் ஆட்சியாளர்களின் தாரக மந்திரமாக உள்ளது. இன்னொருபுறம்  தெருவுக்குத் தெரு மதுக்கடைகளை திறந்து மக்களைக் கெடுப்பதில் தற்போதைய தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரமபத விளையாட்டின் பாம்புகளைப் போல தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்  தமிழகத்தை வளர்ச்சியில் கீழ் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தி தமிழகத்தின் வளர்ச்சி என்ற ஏணியில் பயணம் செய்ய வைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

கடந்த 50 ஆண்டுகளில் நடந்தவை எதுவும் நல்லதாக இல்லாத நிலையில், இனி நடப்பவையாவது நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் தான், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை பா.ம.க. எதிர்கொள்ளவிருக்கிறது.

மது, ஊழலை ஒழித்து, இயற்கை வளக் கொள்ளையை தடுத்து, அனைவருக்கும் தரமான மருத்துவம் மற்றும் கல்வியை வழங்கி, விவசாயத்தை லாபகரமான தொழிலாக்கி,  வறுமை இல்லாத, அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த தமிழகத்தை அமைக்கும் திறன் மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்களுக்கு  மட்டுமே இருப்பதாக  பா.ம.க. நம்புகிறது. எனவே, மருத்துவர் அன்புமணி இராமதாசு அவர்கள் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க.வின் தென் மண்டல அரசியல் மாநாடு உறுதி ஏற்கிறது; அனைத்து தரப்பு மக்களின் ஆதரவைக் கோருகிறது. 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: