Sunday, October 25, 2015

எல்லை தாண்டி மீன் பிடித்தால் 15 கோடி தண்டமா? இலங்கையை அடக்க வேண்டும்! : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:
’’இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்து ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.  இதற்காக இலங்கை மீன்பிடி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவிருப்பதாகவும் இலங்கை கூறியுள்ளது. இலங்கை அரசின் இந்த முடிவு அதன் ஆணவப் போக்கையே காட்டுகிறது; இது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கும் போது சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது, கொடூரமாக தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 800-க்கும் அதிகமான தமிழக மீனவர்கள்  இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியிருக்கின்றனர். இவற்றுக்கெல்லாம் முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகத் தான் இந்தியா - இலங்கை கூட்டு ஆணையம் அமைக்கப்பட்டு  இரு தரப்பு சிக்கல்கள் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. தில்லியில் கடந்த 22.01.2013 அன்று அப்போதைய இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகியோர் முன்னிலையில்  நடந்த இந்த ஆணையத்தின் கூட்டத்தில்,‘‘எல்லை தாண்டி வந்து மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது எத்தகைய சூழலிலும் பலப்பிரயோகம் செய்யக்கூடாது. மீனவர்களை மனிதாபிமானத்துடன் நடத்தப்படும் போக்கு தொடர வேண்டும்’’ என ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து 18.01.2015 அன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரா தில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசிய போது, இரு நாட்டு மீனவர்களும்  எல்லை தாண்டி மீன்பிடிக்கும் விஷயத்தில் மனிதநேய அணுகுமுறை தொடர வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, இச்சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து இருநாட்டு மீனவர் அமைப்புகளும் பேச்சு நடத்தி முடிவு செய்வார்கள் என்று தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறு இருக்கும்  போது எந்த அடிப்படையில், எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.15 கோடி வரை அபராதம் விதிக்கும் முடிவுக்கு சிங்கள அரசு வந்தது? அதற்கானத் தேவை என்ன? என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

உலக அளவில் கடைபிடிக்கப்படும் மரபுகளின்படி பார்த்தால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதாக கூறுவதே அபத்தம் ஆகும். குறுகிய கடல் எல்லை கொண்ட பகுதிகளில் ஒரு நாட்டு மீனவர்கள் இன்னொரு நாட்டின் எல்லைக்குச் சென்று மீன் பிடிப்பது அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், நாடுகளின் கடல் எல்லை தெளிவாக வரையறுக்கப்படுவதற்கு முன்பாகவே காலம் காலமாக மீன் பிடித்து வரும் மீனவர்களின் உரிமையை புதிதாக வரையறுக்கப்படும்  எல்லைகளால் பறிக்க முடியாது. இதை பன்னாட்டு நீதிமன்றங்கள் பல முறை உறுதி செய்திருக்கின்றன.

இத்தகைய சூழலில், தமிழக மீனவர்களுக்கு கோடிக் கணக்கில் அபராதம் விதிக்கப்போவதாக  இலங்கை அரசு கூறுவது இந்தியாவை சீண்டிப் பார்க்கும் செயலாகும். மீனவர்கள் பிரச்சினையில் இந்தியாவை இலங்கை சீண்டுவது இது முதல் முறையல்ல. 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ‘‘நீடித்த வளர்ச்சிக்கான இயற்கை வளங்களை எப்படி பாதுகாப்பது?’’ என்ற தலைப்பிலான மாநாட்டில் பேசிய அப்போதைய இலங்கை அதிபர் இராஜபக்சே, ‘‘தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லையில் புகுந்து மீன் வளங்களையும், கடல் செல்வங்களையும் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களை பன்னாட்டு கடல் சட்டப்படி கைது செய்து 20 ஆண்டுகள் சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார். அதன்பிறகு தான் மீனவர்களை கைது செய்து 3 மாதங்கள் சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது போன்ற செயல்களில் இலங்கை ஈடுபட்டு வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இலங்கை அரசின் புதிய முடிவு சட்டமாக்கப்பட்டால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்படும். அதுமட்டுமின்றி, இலங்கை அரசின் மிரட்டல் போக்கை இனியும் அனுமதிக்கக்கூடாது.  தமிழக மீனவர்கள் சிங்களப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதும், தாக்கப்பட்ட போதும் அது குறித்து இராமேஸ்வரம் பகுதி காவல்நிலையங்களில் மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். அவற்றின் அடிப்படையில் அடையாளம் தெரியாத சிங்களப்படையினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட கடற்படை வீரர்களையும், அவர்களின் தளபதிகளையும் கைது செய்து ஒப்படைக்கும்படி இண்டர்போல் (INTERPOL) மூலம் இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

 மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக இம்மாதம் 31 ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசவுள்ளார். அப்போது தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை பாதுகாக்கவும், இலங்கை அரசை அடக்கவும்  நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்த வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: