Thursday, May 14, 2015

மீண்டும் நிலம் எடுத்தல் அவசர சட்டம்: ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்குவதா? ராமதாஸ் கண்டனம்

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாமல் திணறிவரும் மத்திய அரசு, இதற்கான அவசர சட்டத்தை 3&ஆவது முறையாக பிறப்பிக்க முடிவு செய்திருப்பதாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வீரேந்தர் சிங் தெரிவித்திருக்கிறார். உழவர்களின் நலனுக்கு எதிரான மத்திய அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

 முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை & நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தில்’ சில குறைகள் உள்ள போதிலும், அவற்றில் உழவர்களுக்கு சாதகமாக பல்வேறு பிரிவுகள் இடம் பெற்றிருந்ததால் அனைத்துத் தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்தச் சட்டத்தில் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தங்களைச் செய்து கடந்த திசம்பர் மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதே, அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தேன். மற்ற கட்சிகளும், மக்களும் அவசரச் சட்டத்திற்கு எதிராக பொங்கி எழுந்தபோதிலும் அதை அரசு பொருட்படுத்தவில்லை.
ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததால் அவசரச் சட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் நிறைவேற்றப் பட்டது. ஆனால், மாநிலங்களவையில் இச்சட்டத்தை நிறைவேற்ற முடியாததால் கடந்த ஏப்ரல் மாதத்  தொடக்கத்தில் 2&ஆவது முறையாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனாலும், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரின் இரண்டாம் பகுதியிலும் இதற்கான சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. மாறாக எதிர்க்கட்சிகளுக்கு பணிந்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்காக இச்சட்ட மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் என்னென்ன திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிந்துரைக்கிறதோ, அவற்றை செய்து மசோதாவை நிறைவேற்றுவது தான் சரியானதாக இருக்கும். 

ஆனால், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாத மத்திய அரசு, இம்மாத இறுதிக்குள் இரண்டாவது அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன் மூன்றாவது அவசரச் சட்டத்தை பிறப்பிக்கத் துடிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். அவசரச் சட்டம் என்பது நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட முடியாத காலத்தில், தவிர்க்க முடியாத சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான தற்காலிக ஏற்பாடு ஆகும். முதல்முறையாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம் காலாவதி ஆவதற்கு முன்பாகவே, அதற்கு மாற்றான சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அரசு நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதற்குத் தேவையான ஆதரவு இல்லாததால்  நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை திருத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டிருக்க வேண்டும். அதைவிடுத்து, இரண்டாவது  முறையாகவும் நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற முடியாத அரசு 3&ஆவது முறையாக அவசரச்சட்டம் எனும் கொல்லைப்புற வழியை தேர்ந்தெடுத்திருப்பது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கக் கூடிய, நாடாளுமன்ற நடைமுறையை சிறுமைப்படுத்தக் கூடிய  செயலாகும். இதை குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது.

நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டால்  அது உழவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்திவிடும். இந்தியாவில் அரசுக்கு சொந்தமாகவும், பயன்படுத்தப்படாத தரிசு நிலங்களாகவும் சுமார் 5 கோடி ஏக்கர் நிலங்கள் உள்ள நிலையில், புதிதாக நிலங்களைக் கையகப்படுத்த எந்த தேவையும் இல்லை. எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு வீண் பிடிவாதம் காட்டாமல், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள மசோதா இயற்கையாக அதன் முடிவை அடைய அனுமதிக்க வேண்டும். மாறாக மீண்டும் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பிப்பதற்குத் துடிக்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: