Thursday, May 14, 2015

குழந்தை தொழிலாளர் முறையை சட்டபூர்வமாக்க அரசு முயல்வதா? பா.ம.க. கண்டனம்

 

குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் குலத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற வகையில் செய்யப்படவிருக்கும் திருத்தம் மிகவும்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குழந்தைத் தொழிலாளர்கள் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மேற்கொள்ளவுள்ள திருத்தங்கள் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கு மாறாக ஊக்குவிக்கும் தன்மை கொண்டவையாகும். ஆபத்தான இம்முடிவை அரசு கைவிட வேண்டும்.

1986ஆம் ஆண்டின் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின்படி 14 வயதுக்கும் குறைவான குழந்தைகளை எந்த தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது; 14 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளை  ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தக்கூடாது. அவ்வாறு ஈடுபடுத்தினால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை அபராதமும், 3 மாதங்கள் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனையும் அளிக்கப்பட வாய்ப்புள்ளது. இச்சட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள திருத்தத்தின்படி 14 வயது வரையுள்ள குழந்தைகளை குடும்பத் தொழிலில் ஈடுபடுத்த முடியும்; அதுமட்டுமின்றி வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்யவும் முடியும். குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் குறைந்தபட்சத் தண்டனை 3 மாதத்திலிருந்து 6 மாதமாகவும், அதிகபட்சத் தண்டனை  ஓராண்டிலிருந்து இரு ஆண்டுகளாகவும் அதிகரிக்கும் வகையில் இச்சட்டம் திருத்தப்படவிருக்கிறது. அதேபோல் அபராதத் தொகையும் அதிகபட்சமாக ரூ. 50,000 வரை அதிகரிக்க வகை செய்யப்படுகிறது.

குழந்தைத் தொழிலாளர் சட்ட விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதமும், தண்டனையும் அதிகரிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதாகும். அதேநேரத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அவர்களின் குலத் தொழிலில் ஈடுபடுத்தலாம் என்ற வகையில் செய்யப்படவிருக்கும் திருத்தம் மிகவும்  மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். பள்ளி நேரத்திற்குப் பிறகோ, விடுமுறை நாட்களிலோ மட்டும்  தான் குழந்தைகளை அவர்கள் பெற்றோர்கள் செய்யும் தொழிலில் ஈடுபடுத்த சட்டத் திருத்தம் வகை செய்கிறது என்ற போதிலும் இது குழந்தைகளின் படிப்பை கடுமையாக பாதிக்கும். 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளாக இருந்தாலும் அவர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய பிறகு வீட்டுப்பாடம் செய்யவும், ஓய்வு எடுக்கவும் வேண்டியிருக்கிறது. இத்தகைய சூழலில் அவர்களை பெற்றோர்களின் தொழில்களில் ஈடுபடுத்த அனுமதித்தால், அது அவர்களின் வீட்டுப்பாடம், விளையாட்டு மற்றும் ஓய்வை பாதிக்கும்.

இன்றைய காலத்தில் பள்ளிகளில் விளையாட்டு என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. எனவே பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகள் ஓய்வு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் விளையாடுவது தவிர்க்க முடியாதது ஆகும். அவ்வாறு இருக்கும்போது பள்ளியில் இருந்து திரும்பிய பின்னர் விளையாடி, கடுமையாக வேலை செய்துவிட்டு, அதன்பின் வீட்டுப்பாடங்களை செய்யும் போது இயல்பாகவே படிப்பு மீது குழந்தைகளுக்கு கோபமும், வெறுப்பும் ஏற்படும். இதனால் குழந்தைகள் ஒருகட்டத்தில் படிப்பை நிறுத்திவிட்டு பணி செய்யத் தொடங்கி விடுவார்கள். அறிவார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  மத்திய அரசின் இலக்குகளை எட்டுவதற்கு  இச்சட்டத்திருத்தம் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும்.
குழந்தைகளை பெற்றோரின் தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு  சட்டப்படியாக அனுமதி அளிக்கும் பட்சத்தில் அது குழந்தைத் தொழிலாளர் முறையை ஊக்குவிப்பதாக அமைந்துவிடும். குலக்கல்வி முறை இந்தியாவில் மீண்டும் தலைதூக்குவதற்கே இது வழி வகுக்கும். இலவசக் கட்டாய கல்வி பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு கடந்த 5 ஆண்டுகளாக குழந்தை தொழிலாளர் முறை படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில்  மத்திய அரசு கொண்டு வரவுள்ள சட்டத்திருத்தம் கல்வி உரிமை சட்டத்தின் நோக்கத்தை சிதைத்து விடும்.
எனவே, குழந்தைத் தொழிலாளர் முறை தடுப்புச் சட்டத்தில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தங்களில்  குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் வகையிலான பிரிவுகளை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: