Saturday, May 23, 2015

ஜெயலலிதா தண்டிக்கப்பட வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

 

தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது. விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஜெயலலிதா ஐந்தாவது முறையாக பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். பதவியேற்பு விழாவில் ஜெயலலிதாவின் வசதி கருதி பல குழப்பங்களும், அவமதிப்புகளும் அரங்கேற்றப் பட்டிருக்கின்றன. விதிகளையும், மரபுகளையும் கேலிக்கூத்தாக்கும் இச்செயல்கள் கண்டிக்கத்தக்கவை.

புதிய அமைச்சரவை பதவியேற்கும்போது முதலில் முதலமைச்சரும், அதன்பின் மரபுசீர் வரிசைப்படி அமைச்சர்களும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றுக் கொள்வது தான் வழக்கம். ஆனால், நேற்றைய பதவி ஏற்பு விழாவில் முதலமைச்சர் பதவியேற்ற பிறகு, மீதமுள்ள 28 அமைச்சர்களும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் 14 அமைச்சர்கள் வீதம் மொத்தமாக பதவியேற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காட்சியைப் பார்க்கும்போது பள்ளிக் குழந்தைகள் மொத்தமாக நின்று வாய்ப்பாடு ஒப்பிப்பதைப் போன்று இருந்தது. அமைச்சர்கள் பதவியேற்பு உறுதிமொழியை படிப்பதும், ரகசியக் காப்பு உறுதிமொழி ஏற்பதும் மிகவும் முக்கியமான நிகழ்வுகள் ஆகும். இதற்கென தனி மரபு தமிழகத்தில் காலம்காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு 10 நிமிடங்களில் அமைச்சர்களின் பதவியேற்பை நிறைவு செய்திருக்கிறார். ஒவ்வொரு அமைச்சரும் என்ன உறுதிமொழி ஏற்றார்கள்? என்பது கூட மற்றவர்களுக்கு தெரியாத வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டிருக்கிறது. பதவியேற்பைக் கூட முறைப்படி செய்ய முடியாத அளவுக்கு என்ன அவசரம்? என்று தெரியவில்லை.

பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய விழாவில் தேசிய கீதத்தின் முதல் இரு வரிகள் மட்டுமே இசைக்கப்பட்டது. ஜெயலலிதாவின் அவசரத்திற்காக தேசியகீதத்தைக் கூட இரு வரிகளுடன் நிறுத்திக்கொள்ள துணிந்திருக்கிறார்கள். இது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயலாகும். இது சட்டப்படி சரியா... தவறா? என்பது ஒருபுறமிருக்க  ஜெயலலிதா ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பள்ளிக்கூடங்களிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ இனி தேசிய கீதம் இரு வரிகளுடன் நிறுத்தப்பட்டால் அதை கண்டிக்கும் தார்மீக உரிமை  தமிழக அரசுக்கு நிச்சயமாக இல்லை. தேசிய கீதத்தை முழுமையாக இசைத்து, அனைத்து அமைச்சர்களும் தனித்தனியாக பதவியேற்றிருந்தால் விழா முடிய கூடுதலாக  30 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும்.

ஆனால், அந்த அளவுக்குக் கூட பொறுமைகாக்க முடியாத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு அவசர பணி என்ன இருந்தது? என்பது தெரியவில்லை. இத்தனைக்கும் பதவியேற்பு முடிவடைந்த பிறகு   தலைமைச்செயலகத்திற்கு கூட ஜெயலலிதா செல்லவில்லை. ‘‘ மக்களுக்காக உழைப்பதே எனது லட்சியம். ஒருநாளைக்கு மொத்தமுள்ள 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைக்கிறேன்’’ என்று  ஜெயலலிதா கூறிக்கொள்வார். ஆனால், பதவியேற்பு விழாவில் கூட         அரை மணி நேரம் கூடுதலாக அமர்ந்திருக்க முடியாமல் அவசரம் அவசரமாக  வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்ததை பார்க்கும்போது தான் தெரிகிறது அவர்  மக்களுக்காக எப்படி உழைக்கிறார் என்பது?

புதிய முதலமைச்சராக பதவியேற்ற பிறகு இன்று தலைமைச் செயலகம் செல்லும் அவர் அம்மா உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். கடந்த 7 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டிருந்த 500க்கும் அதிகமான புதிய பேரூந்துகள், மெட்ரோ ரயில் திட்டம், சென்னை மாநகராட்சிக் கூடுதல் கட்டிடம் ஆகியவற்றின் தொடக்க விழாக்கள் அடுத்தடுத்த நாட்களில் நடக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. காரணமே இல்லாமல் ஒத்திவைக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைக் கூட்டமும்  விரைவில் தொடங்கவிருக்கிறது. இதன்மூலம் பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. மக்களுக்காக, மக்களின் வரிப்பணத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் எப்போதோ திறப்பு விழாவிற்கு  தயாராகி விட்டாலும், ஜெயலலிதா என்ற தனி மனிதருக்காக அவை முடக்கி வைக்கப்பட்டிருந்தன என்பது இப்போது அம்பலமாகி விட்டது. மக்களுக்கு ஜெயலலிதா தரும் மரியாதை இவ்வளவு தான்.
தமிழகத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்ற உணர்வுடன் செயல்படுவதற்கு பதிலாக தனக்கு சேவை செய்வது தான் தமிழ்நாட்டின் கடமை என்ற மனப்போக்கில் ஜெயலலிதா செயல்படுவது கண்டனத்துக்குரியது. விதிகளையும், மரபுகளையும், மக்களையும் மதிக்காமல் அவமதிக்கும் ஜெயலலிதா சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் விரைவில் தமிழ்நாட்டு மக்களால் தண்டிக்கப்படுவார். இன்னும் ஓராண்டுக்குள் இது நடப்பது உறுதி. இவ்வாறு கூறியுள்ளார். 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: