Monday, October 6, 2014

ஸ்டிரைக்கில் ஈடுபடும் பள்ளி, பஸ்கள் உரிமங்களை 'எஸ்மா'வை பயன்படுத்தி ரத்து செய்க: ராமதாஸ் ஆவேசம்

சென்னை: வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் பள்ளி, கல்லூரிகள், ஆம்னி பஸ்கள் உரிமங்களை எஸ்மா சட்டத்தின்கீழ் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கேட்டுக்கொண்டுள்ளார்.இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் பணத்தை கொள்ளையடித்ததற்காக தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நாளை வேலை நிறுத்தம் மேற்கொள்ளவிருப்பதாக தனியார் பள்ளிகளும், தனியார் கல்லூரிகளும் அறிவித்துள்ளன. கல்வி நிறுவனங்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கதாகும்.ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கொடுத்ததைக் கண்டித்து சென்னையில் நாளை நடக்கும் போராட்டத்தில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் பங்கேற்க இருப்பதால்தான் பள்ளிகள் மூடப்படுவதாக தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதே காரணத்திற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இக்காரணங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அவர் செய்த ஊழலுக்கான தண்டனை ஆகும். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்காக கல்வித் துறையினர் போராட்டம் நடத்துவது தேவையற்றதாகும். கடந்த காலங்களில் புயலும், மழையும் தாக்கினால் கூட அரசின் ஆணையை மதித்து பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு முன்வராத தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆதரவாக நீதித்துறையை கண்டித்து போராட்டம் நடத்துவது மன்னிக்கவே முடியாத குற்றமாகும்.ஆட்சியாளர்கள் செய்த ஊழலுக்கு ஆதரவாக பள்ளிக் குழந்தைகளை சந்திக்கு இழுப்பதை சகித்துக்கொள்ள முடியாது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டுமே இருக்கும் நிலையில், இந்த அதிகாரத்தை இத்தகைய அமைப்புகளுக்கு கொடுத்தது யார்?இப்போராட்டங்களை தனியார் பள்ளிகளும், கல்வி நிறுவனங்களும் தன்னிச்சையாக நடத்துவதாக ஆளுங்கட்சித் தரப்பில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மை அதுவல்ல.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா கைது செய்யப்பட்ட போதும், தண்டிக்கப்பட்ட போதும் அவருக்காக அனுதாபம் கூட தெரிவிக்க முன்வராத பல்வேறு தரப்பினரும் இப்போது போட்டிப்போட்டுக் கொண்டு போராட்டங்களை நடத்துவதிலிருந்தே இதன் பின்னணியில் நடந்ததை அனைவராலும் யூகிக்க முடியும். ஒருவேளை ஆளுங்கட்சியினரின் தூண்டுதல் இல்லாமல் தனியார் கல்வி நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றன என்றால் அவற்றின் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த 2003 ஆம் ஆண்டில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்ட போது, அதனால் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதாகக் கூறி டெஸ்மா சட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் பேரை தமிழக அரசு நிரந்த பணி நீக்கம் செய்தது.நியாயமான கோரிக்கைக்காக போராட்டம் நடத்தியபோதே ஆசிரியர்கள் மீது அப்போது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இப்போது ஊழலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி மாணவர்களின் கல்வியை சீர்குலைப்போரை தண்டிக்க அரசு தயங்கக் கூடாது.அதுமட்டுமின்றி, 2003 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த கட்டாய மதமாற்றத் தடை சட்டத்தை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஒருநாள் பள்ளிகளை மூடுவதாக அறிவித்தபோது அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்வது, அரசு நிதி உதவியை நிறுத்துவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இப்போதும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு எதிராக அதேபோன்ற எச்சரிக்கையை தமிழக அரசு விடுக்க வேண்டும்.இன்னொருபுறம் ஆம்னி பேரூந்துகள் நாளை வேலைநிறுத்தம் அறிவித்துள்ளன. கடைகளை அடைக்கும்படி வணிகர்களுக்கும் நெருக்கடிகள் அளிக்கப்படுகின்றன. தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நாளை கட்டாயக் கடையடைப்பு செய்யப்படவுள்ளது. இத்தகைய போராட்டங்கள் அனைத்தும் ஜெயலலிதா உத்தமமானவர் என்பதால் அவருக்கு ஆதரவாக தன்னெழுச்சியாக நடப்பது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சி முயலுகிறது.ஆனால் ஆளுங்கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு பணிந்து இத்தகைய போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது தான் உண்மை. நீதித்துறைக்கு எதிராக இவ்வாறு போராட்டங்கள் தூண்டிவிடப்படுவதை நீதிமன்றங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். ஜெயலலிதா மனுக்கள் மீது இவற்றின் அடிப்படையிலேயே முடிவெடுக்க வேண்டும்.ஊழலுக்கு எதிராக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போராட்டம் நடந்த போது மக்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அப்போராட்டத்தை மக்கள் வரவேற்றனர். ஆனால், இப்போது ஊழலுக்கு ஆதரவாக போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும்.எனவே, இவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தேவைப்பட்டால், தமிழ்நாடு இன்றியமையா சேவை பராமரிப்புச் சட்டத்தை பயன்படுத்தி தனியார் பள்ளி, கல்லூரிகளின் அங்கீகாரத்தையும், ஆம்னி பேரூந்துகளின் உரிமங்களையும் ரத்து செய்யக் கூட தயங்கக்கூடாது. இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: