Friday, October 31, 2014

புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்து மதுவை ஆறாக ஓட வகை செய்ய அரசே முயல்வது நல்லதல்ல : ராமதாஸ்

புதிய மது ஆலைகளுக்கு அனுமதி அளித்து  மதுவை ஆறாக ஓட வகை செய்ய  அரசே முயல்வது நல்லதல்ல : ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 6800 மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு 54 கோடி லிட்டர் மது வகைகளையும், 25 கோடி லிட்டர் பீர் வகைகளையும் அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு வாணிபக் கழகம் (டாஸ்மாக்) விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தின் மது தாகத்தைப் பூர்த்தி செய்ய 11 மது ஆலைகளும், 7 பீர் உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 6 மது ஆலைகளும், 4 பீர் ஆலைகளும் கடந்த 10 ஆண்டுகளில் தொடங்கப்பட்டவை ஆகும்.

தமிழகத்தில் எந்தக் கட்சி ஆட்சி நடைபெறுகிறது என்பதைப் பொறுத்து இந்த ஆலைகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுவின் அளவு மாறுபடும்.

மது தயாரிப்பு ஆலைகளில் சென்னை வளசரவாக்கத்தை தலைமை அலுவலகமாகக் கொண்ட மோகன் புரூவரிஸ் நிறுவனத்தின் மது ஆலையும், பீர் ஆலையும் நிதி பிரச்சினைகள் காரணமாக அண்மையில் மூடப்பட்டன. அதேபோல், கோவை மாவட்டம் மாவுத்தம்பதியில் செயல்பட்டு வந்த இம்பீரியல் ஸ்பிரிட்ஸ் மற்றும் ஒயின் நிறுவனம் என்ற பெயரிலான மது ஆலையும் இதே காரணத்திற்காக சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டன.

இந்த இரு நிறுவனங்களிடமும் இருந்து டாஸ்மாக் கடைகளுக்கு ஆண்டுக்கு 9 கோடி லிட்டர் மது வகைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதுதவிர குறிப்பிடத்தக்க அளவில் பீர் வகைகளும் மோகன் பீர் ஆலையிடமிருந்து அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றன.

இரு மது ஆலைகளும், ஒரு பீர் ஆலையும் மூடப்பட்டதால், அவை தயாரித்து வந்த 31 மது வகைகளும், 5 பீர் வகைகளும் இப்போது அரசு மதுக்கடைகளில் கிடைப்பதில்லை. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்ட போதும், காவிரி நீரை வழங்க கர்நாடகா மறுத்ததால் தமிழக அரசு, இப்போது இந்த மதுவகைகள் கிடைக்காததால் கவலைப்பட்டு கலங்கி நிற்கிறது.

இதனால், மது விற்பனை எந்த வகையிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதே அளவிலான மது மற்றும் பீர் வகைகளை கூடுதலாக தயாரித்து வழங்கும்படி மற்ற மது ஆலைகளுக்கு அரசு ஆணையிட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்த மது வகைகளை நிரந்தரமாக தயாரித்துத் தருவதற்கு வசதியாக தமிழகத்தில் புதிய மது ஆலைகளை தொடங்குவதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக சிலரிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று பரிசீலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் தமிழக அரசின் முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

கேரளத்தைப் பின்பற்றியும், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை பல்வேறு தருணங்களில் அளித்த தீர்ப்பை மதித்தும் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி வரும் நிலையில், புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளித்து மதுவை ஆறாக ஓட வகை செய்ய அரசே முயல்வது நல்லது அல்ல.

பொருளாதாரப் பிரச்சினைகளால் மது ஆலைகள் மூடப்பட்டிருந்தால், அதை தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரு மது ஆலைகள் மூடப்பட்டதால் 17 விழுக்காடு மது உற்பத்தியும், ஒரு பீர் ஆலை மூடப்பட்டதால் 10 சதவீதம் பீர் உற்பத்தியும் குறைந்துள்ள நிலையில் அதற்கு இணையாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அரசு குறைத்திருந்தால் அது பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருந்திருக்கும்.

அதைவிடுத்து, அதிக மதுவை உற்பத்தி செய்யும் வகையில் புதிய மது ஆலைகளைத் திறக்க அரசு அனுமதித்தால், அது தமிழகத்தை மிக வேகமாக அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

எனவே, மக்களின் நலனையும், தமிழகத்தின் நலனையும் கருத்தில் கொண்டு புதிய மது ஆலைகளை தொடங்க அனுமதி அளிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்; தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை படிப்படியாக மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: