Friday, October 24, 2014

உள்ளூர் வானொலி மூலம் இந்தியை திணிக்கும் முடிவை கைவிட வேண்டும் : ராமதாஸ்

 
 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை
’’தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 3 மண்டல வானொலி நிலையங்களில் வர்த்தக ஒலிபரப்பு என்ற பெயரில் இந்தியை திணிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த வானொலி நிலையங்களில் தினமும் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகவுள்ளன.

அனைத்திந்திய வானொலியின் தலைமை இயக்குனர் கடந்த 06.08.2014 அன்று அனைத்து மண்டல வானொலி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். கோப்பு எண் 13/20/2014&றி-மிமிமி/125 என்ற அந்த சுற்றறிக்கையில் அனைத்து மண்டல வானொலிகளில் ஒலிபரப்பாகும் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலி நிலையங்கள் மூலமாக மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அதன்படி சென்னை வானொலி நிலையத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் கடந்த 20.10.2014 அன்று தமிழகத்தில் உள்ள தருமபுரி, நாகர்கோவில் ஆகிய உள்ளூர் வானொலி நிலையங் களுக்கும், புதுச்சேரியில் உள்ள காரைக்கால் வானொலி நிலையத்திற்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 26.10.2014 ஞாயிற்றுக்கிழமை முதல் தினமும் 7 மணி நேரம் சென்னை மண்டல வானொலியின் வர்த்தக ஒலிபரப்பை உள்ளூர் வானொலிகள் மறு ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதேபோன்று இந்தியா முழுவதும் உள்ள 86 உள்ளூர் வானொலி நிலையங்களிலும் மண்டல வானொலி நிலையங்கள் மூலம் நாளை மறுநாள் முதல் தினமும் 7 மணி நேரத்திற்கு வர்த் தக ஒலிபரப்பை விரிவுபடுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

உள்ளூர் வானொலி நிலையங்களின் தயாரிப்புச் செலவை குறைக்கவும், விளம்பர வருவாயை அதிகரிக்கவும் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அனைத்திந்திய வானொலி நிலைய அதிகாரிகள் தரப்பில் காரணம் கூறப்படுகிறது. ஆனால், இந்நடவடிக்கையின் உண்மையான நோக்கம் அனைத்து மாநிலங்களிலும் இந்தியைப் பரப்புவது தான் என்று நம்புவதற்கு உறுதியான காரணங்கள் உள்ளன. தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள உள்ளூர் வானொலிகள் சென்னை வானொலி நிலையத்தின் வர்த்தக ஒலிபரப்பு நிகழ்ச்சிகளை மறுஒலிபரப்பு செய்ய வேண்டும் என கூறப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது அவை தமிழ் நிகழ்ச்சிகளாகத் தானே இருக்க வேண்டும்; இதை மறு ஒலிபரப்பு செய்வதில் என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப்போகிறது? என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்படலாம்.

சென்னை மண்டல வானொலி நிலையம் மூலம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான 7 மணி நேர வர்த்தக ஒலிபரப்பில், 10 மணி முதல் 12 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் 4 மணி வரையிலும் மொத்தம் 3 மணி நேரம் மட்டுமே தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. அதேநேரத்தில் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5 மணி வரையிலும் மொத்தம் 4 மணி நேரம் இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன. இதன்மூலம் ஒவ்வொரு நாளும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து உள்ளூர் வானொலிகளிலும் 4 மணி நேரத்திற்கு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தியை திணிக்க இதைவிட மோசமான கொல்லைப்புற வழி எதுவும் இருக்க முடியாது.

ஆங்கிலேயர் காலத்தில் கூட தமிழர்கள் மீது ஆங்கிலம் இந்தளவுக்கு வலிந்து திணிக்கப் பட்டதில்லை. ஆனால், மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தான் இந்தியா என்பதைப் போலவும், மற்ற மொழி பேசும் மாநிலங்கள் எல்லாம் அதன் காலணி மாநிலங்கள் என்பது போலவும் கருதிக் கொண்டு இந்தி திணிக்கப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்கள் மூலம் இந்தித் திணிப்பு, பல்கலைக்கழகங்கள் மூலம் இந்தித்திணிப்பு, ஆசிரியர்  குரு உத்சவ் ஆக கொண்டாட வேண்டும்; பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்பதன் மூலம் சமச்கிருதத் திணிப்பு என்று தமிழ்நாட்டு மக்கள் மீதான கலாச்சார மற்றும் மொழித் திணிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. தூய்மையை வலியுறுத்துவதற்கான தூய்மை இந்தியா என்ற திட்டம் கூட ‘ஸ்வாச் பாரத்’ என்ற இந்தி வார்த்தைகளின் மூலம் தான் பரப்பப்படுகிறது. வலிந்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் இந்த அணுகுமுறை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காரைக்கால் வானொலி நிலையம் தொடங்கப்பட்ட போது செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, புதுவையில் பேசப்படும் மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட வேண்டும். ஆனால், தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படும் நேரத்தைக் குறைத்துவ ிட்டு, இந்தி நிகழ்ச்சிகளை ஒலிபரப்புவதை ஏற்க முடியாது. 

அதேபோல், தருமபுரி, நாகர்கோவில் வானொலி நிலையங்களிலும் அந்தந்த பகுதிகளில் பேசப்படும் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு இந்தி நிகழ்ச்சிகள் ஒலிபரப்படவுள்ளதால் அப்பகுதிகளில் வாழும் மக்கள் கொதிப்படைந்திருக்கின்றனர். இந்த மூன்று உள்ளூர் வானொலி நிலையங்களுக்கும் தலா 50 லட்சம் நேயர்கள் உள்ளனர். அவர்களின் விருப்பத்திற்கு மாறாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வது சரியல்ல. எனவே, மக்களின் உணர்வுகளை மதித்து உள்ளூர் வானொலிளில் வர்த்தக ஒலிபரப்பு மூலம் இந்தியை திணிக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: