Thursday, October 2, 2014

அதிமுகவினர் நடத்துவது போராட்டமே அல்ல; அது ஒரு கேலிக்கூத்து என காவல்துறை கருதுகிறதா?: ராமதாஸ்


பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் குடும்பங்களை ஆதரவற்றவர்களாக்கி வரும் மது அரக்கனை ஒழித்து, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் இன்று பா.ம.க. சார்பில் எனது தலைமையில் அறப்போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்ப ட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதியளிக்க மறுத்ததால் கடைசி நேரத்தில் போராட்டத்தை கைவிட நேர்ந்தது.

தமிழகத்தின் இன்றைய முதன்மைத் தேவை மதுவிலக்கு தான்.  இத்தகைய உன்னத நோக்கத்தை வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்திற்கு அனுமதி தர காவல்துறையினர் தயாராக இல்லை. இதற்காக காவல்துறை அதிகாரிகள் கூறிய காரணம் போராட்டம் நடத்துவதற்குரிய சூழல் தமிழகத்தில் இல்லை என்பது தான். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிகழ்வுகளையும், போராட்டத்திற்கு அனுமதி மறுப்பதற்காக காவல்துறை கூறும் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் குழந்தைகளுக்கு கூட சிரிப்பு வந்து விடும். தமிழகத்தில் காவல்துறையின் நடவடிக்கைகள் அப்படித்தான் இருக்கின்றன.

வருவாய்க்கு மீறிய வகையில் சொத்துக் குவித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிகழ்வுகளால் இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் மற்ற நாடுகளிலும் தமிழகத்திற்கு மிகப்பெரிய அவப்பெயரும், தலைகுனிவும் ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நீதிக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துள்ளன. ஆனால், நீதிக்கு எதிராகவும், ஊழலுக்கு ஆதரவாகவும் ஆளுங்கட்சியினரே போராட்டம் நடத்தும் கொடுமை தமிழகத்தில் இப்போது தான் அரங்கேறுகிறது.

சென்னை அண்ணா சாலையில் கடந்த 30 ஆம் தேதி 18 இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தியுள்ளனர். சென்னையில் அனுமதிக்கப்பட்ட 3 இடங்களைத் தவிர வேறு எங்கும் போராட்டம் நடத்தினால் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருந்த போதிலும், அ.தி.மு.க.வினரின் போராட்டத்தைத் தடுக்க காவல்துறை முன்வரவில்லை; மாறாக ஆளுங்கட்சியினரின் போராட்டத்திற்கு பாதுகாப்பு அளித்ததுடன், அவர்களுக்கு தேவையான மற்ற உதவிகளையும் செய்தனர். இப்படிப்பட்ட காவல்துறை தான் நியாயமான காரணத்திற்காக போராட அனுமதி கேட்டால், போராட்டம் நடத்துவதற்கான சூழல் இப்போது இல்லை என்று கூறுகிறது. 

ஒருவேளை அ.தி.மு.க.வினர் நடத்துவது போராட்டமே அல்ல; அது ஒரு கேலிக்கூத்து என சென்னை காவல்துறை கருதுகிறது போலிருக்கிறது.

ஒருகாலத்தில் ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானதாக கருதப்பட்ட தமிழ்நாடு காவல்துறையின் இன்றைய நிலைமை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. எஃப்.வி. அருள், வி.ஆர். லட்சுமிநாராயணன் போன்றவர்கள் தமிழக காவல்துறை தலைவர்களாக இருந்த போது காவல்துறைக்கு தனி மரியாதை இருந்தது. 

அந்த காலத்தில் காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தது; குற்றம் செய்வோருக்கு அச்சுறுத்தலாக இருந்தது. ஆனால், இப்போது குற்றம் செய்யும் ஆளுங்கட்சியினருக்கு பாதுகாப்பாகவும், மக்களுக்கு அச்சுறுத்தலாகவும் திகழும் அளவுக்கு காவல்துறை தரம் தாழ்ந்துவிட்டது.

நீதித்துறையை எதிர்த்து கடந்த ஐந்து நாட்களாக அ.தி.மு.க.வினர் நடத்தும் வன்முறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் போராட்டங்களால் அப்பாவி பொதுமக்களுக்கு சொல்லொனாத் துயரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பேரூந்துகளை எரித்த சிலரைத் தவிர இந்த போராட்டம் மற்றும் வன்முறைகளுக்கு காரணமானோரை காவல்துறை இதுவரை கைது செய்யவில்லை. 

வேலைவாய்ப்பு கோரி அறவழியில் போராட்டம் நடத்திய பார்வையற்றவர்களை கைது செய்து சென்னையிலிருந்து 100 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள சுடுகாட்டில் நள்ளிரவில் இறக்கிவிட்டு தவிக்கவிட்ட மனிதநேயமற்ற காவல்துறையினர், இப்போது வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க.வினரை கைது செய்யத் தயங்குவதில் இருந்தே அவர்களின் பணி அக்கறையையும் நடுநிலையையும் அறிந்து கொள்ள முடியும். நீட்டிக்கப்பட்ட பதவிக்கால மும் அடுத்த மாதத்துடன் முடிவடையவிருக்கும் நிலையில், அடுத்து ஆலோசகர் பதவி ஏதேனும் கிடைக்குமா? என எதிர்பார்க்கும் அதிகாரிகளின் தலைமையில் செயல்படும் காவல்துறையிடம் இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

தமிழ்நாடு இப்போது மிகவும் மோசமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது. ஊழல் செய்ததற்காக சிறை தண்டனை அனுபவிக்கும் தலைமை, ஆட்சிப்பணியை கவனிப்பதைவிட அதிக நேரத்தை பெங்களூர் சிறைச்சாலைக்கு பயணம் செய்வதிலும், தொலைக்காட்சிகளுக்கு முன்னால் தலைமையின் படத்தை வணங்குவது மற்றும் கண்ணீர் விடுவதிலும் செலவிடும் புதிய முதல்வர், உண்ணாவிரதம் இருப்பதற்காக ஆட்களைத் திரட்டும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என மக்களை கவனிக்க ஆள் இல்லாமல் தமிழக ஆட்சித் தலைமை தடுமாறிக் கொண்டிருக்கிறது.

இந்த நேரத்தில் நிர்வாகத் துறையினரும், காவல்துறையினரும் தங்களின் கடமையை உணர்ந்து செயல்பட்டால் தான், பொருளாதார வளர்ச்சியில் ஏற்கனவே கடைசி இடத்திற்கு சென்று விட்ட தமிழகத்தை அதைவிட அதலபாதாளத்திற்கு சென்று விடாமல் தடுக்க முடியும். இதை உணர்ந்து ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக இல்லாமல், மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தமிழக காவல்துறை செயல்பட வேண்டும். எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிப்பதை விடுத்து, நீதிக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: