Monday, June 16, 2014

அ.தி.மு.க. ஆட்சியில் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது: ராமதாஸ்



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போதெல்லாம் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படும் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது. இம்முறையும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை வழங்காமல் துரோகம் செய்து வருகிறது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் அரசுக்கும் இடையே 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட வேண்டும் என்பது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விதியாகும். கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என மாற்றப் பட்டது. 2006 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பா.ம.க. அளித்த அழுத்தம் காரணமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த தி.மு.க. ஆட்சியில் இரு முறை புதிய ஊதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கடந்த ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட 11 ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், புதிய ஊதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 01.09.2013 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், அதன்பின் கிட்டத்தட்ட ஓராண்டாகியும் 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துக்கழக ஊழியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை. முந்தைய ஆட்சியில் நடைமுறைப்படுத்தியதைப் போன்றே 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் ஊதிய ஒப்பந்தம் என்ற நிலையை ஏற்படுத்த தமிழக அரசு முயல்கிறதோ என்ற ஐயம் தொழிலாளர்களிடையே நிலவுகிறது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட உரிமைகளை வழங்குவதிலும் போக்குவரத்துக் கழக ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தான் அ.தி.மு.க. அரசு நடத்துகிறது. போக்குவரத்துத் தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 01.06.2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை அதற்கான நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. அதேபோல், அரசு ஊழியர்களுக்கு 01.01.2014 முதல் 10% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுவிட்ட போதிலும், அது போக்குவரத்து ஊழியர்களுக்கு இன்னும்  அறிவிக்கப்படவில்லை.
தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களில் மின்வாரிய ஊழியர்களுக்கும், போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கும்  மட்டும் தான் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு  அறிவிக்கப்படும்போதே, பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட வேண்டும். இந்த உரிமையை பல ஆண்டுகால போராட்டத்திற்குப் பிறகே போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பெற்றுள்ளனர். ஆனால், அரசு ஊழியர்களுக்கும், மின்வாரியப் பணியாளர்களுக்கும்  அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு 6 மாதங்களாகியும் போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு மட்டும் இன்னும் வழங்காமல் தாமதப்படுத்துவது மிகப்பெரிய அநீதி; இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அதேபோல் ஓய்வு பெற்ற போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பயன்களை கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்காமல் அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருக்கிறது. இதனால், தங்களது வாரிசுகளின் திருமணம், உயர்கல்வித் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல்  ஓய்வூதியர்கள் அவதிப்படுகின்றனர். விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வுகால சேமநல நிதி போன்ற சலுகைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் அத்தியாவசியத் சேவைகளில் ஒன்றான போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற மறுப்பது நியாயமா? என்பதை தமிழக அரசு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
போக்குவரத்து ஊழியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அவர்களுடன் 12ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சை உடனடியாக தொடங்கவேண்டும். ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும் வரை இடைக்கால நிவாரணமாக மதம் ரூ.3,000 வழங்க வேண்டும். 01.01.2014 முதல் வழங்கப்பட வேண்டிய 10% அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிப்பதுடன், கடந்த ஆண்டில் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும். ஓய்வூதியப் பயன்கள் உள்ளிட்ட உரிமைகளையும் காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல்களைத் தவிர்க்க போக்குவரத்து ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்க  வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: