Thursday, June 12, 2014

நான் கூறியதும், ராமதாஸ் கூறியதும் தவறாக இருந்தால் முதல் அமைச்சரே பதில் சொல்லியிருப்பாரே? கலைஞர்


திமுக தலைவர் கலைஞர் 12.06.2014 வியாழக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

கேள்வி :- மின்சாரம் பற்றி டாக்டர் ராமதாஸ் விடுத்த அறிக்கைக்கும் - செம்மொழி பற்றி தாங்கள் விடுத்த அறிக்கைக்கும் முதலமைச்சர் பதில் கூறாமல், அமைச்சர்கள் பதில் சொல்லியிருக்கிறார்களே? 

கலைஞர் :- அதிலிருந்தே நான் கூறியதும், டாக்டர் ராமதாஸ் கூறியதும் உண்மை என்று உங்களுக்குப் புரியவில்லையா? நாங்கள் கூறிய செய்திகள் தவறாக இருந்தால், முதல் அமைச்சரே பதில் சொல்லியிருப்பாரே? உண்மை அவருக்கும் புரிந்தபடியால்தான், தான் பதில் அறிக்கை விடுக்க விரும்பாமல், இரண்டு அமைச்சர்களைப் பிடித்துப் பதில் சொல்ல வைத்திருக்கிறார். அமைச்சர்களும் விதியே என்று எதிர்க்கட்சிகளைத் தாக்கி அறிக்கையும் 
விடுத்திருக்கிறார்கள். எது உண்மை என்பதை மக்களே அறிவார்கள்! 

கேள்வி :- எப்படியோ இந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்சார ஒழுங்கு முறை ஆணையத் திற்கு புதிய தலைவர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டு விட்டாரே? 

கலைஞர் :- தி.மு. கழக ஆட்சியில் தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத் தலைவராக நியமனம் பெற்ற திரு. கபிலன், கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரியில் ஓய்வு பெற்ற பிறகு, இரண்டரை ஆண்டு காலமாக அந்தப் பதவியிலே யாரும் நியமிக்கப்படவில்லை. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக மின் தொடரமைப்புக் கழக இயக்குநராக இருந்த அக்ஷய் குமாரை அரசு நியமித்துள்ளது. 

நியமிக்கப்பட்ட நிலையில் புதிய தலைவரின் பதவிக்கு சிக்கல் எழுந்துள்ளதாக ஏடுகளில் செய்தி வந்திருக்கிறது. ஒழுங்குமுறை ஆணையம் நீதிமன்ற அந்தஸ்தில் செயல்படுவதாலும், பாரபட்சமற்ற முறையில் செயல்பட வேண்டுமென்பதாலும், நீதித் துறையைச் சேர்ந்தவர்தான் இந்தப் பதவியிலே நியமிக்கப்பட வேண்டுமென்று நீதிமன்றத்திலே தொழில் துறையினர் முறையிட்டுள்ளார்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒழுங்கு முறை ஆணைய புதிய தலைவராக எஸ். அக்ஷய் குமார் அமைச்சர் முன்னிலையில் பதவியேற்றிருக்கிறார். பதவியேற்ற மறுநாளே, அவருடைய நியமனத்திற்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா 27-5-2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 1ஆம் தேதி முதல் மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்று செய்த அறிவிப்பு என்ன ஆயிற்று? 

கலைஞர் :- 27ஆம் தேதி அறிக்கையிலே மட்டும்தான் ஜெயலலிதா அப்படி அறிவித்தாரா? ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வருவதற்கு முன்பு சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட போதே அ.தி.மு.க. ஆட்சிக்கு வருமானால் மூன்றே மாதங்களில் மின்வெட்டே இல்லாமல் செய்வோம் என்று கூறித்தான் ஆட்சிக்கு வந்தார். அதற்குப் பிறகு பல முறை முதலமைச்சர் ஜெயலலிதாவும், மின் துறை அமைச்சரும் மின்வெட்டே இல்லாமல் செய்திடுவோம் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் மின் வெட்டுதான் நிறுத்தப்படவில்லை. 

முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், “பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 2 ஆயிரத்து 500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியிருந்தார். அதற்கான விளக்கத்தை நான் தெரிவித்திருந்தேன். நான் மட்டுமல்ல; பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் 7-6-2014 அன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஜூன் 3ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மின்வெட்டு தொடங்கி விட்டது என்றும், மாவட்டங்களில் 4 முதல் 6 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்றும் தெரிவித்ததோடு, முந்தைய தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட மின்திட்டங்களும், கூட்டு முயற்சி மின் திட்டங்களும் தற்போது நிறைவடைந்ததால் மின் உற்பத்தி தற்போது அதிகமாகி யிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும், அதே நேரத்தில் அதற்குத் தக்க பதில் இல்லாத நிலையிலும்தான் முதலமைச்சர் ஜெயலலிதா, அந்தத் துறையின் அமைச்சரைக் கொண்டு அறிக்கை விடச் சொல்லியிருக்கிறார். 

ஜெயலலிதா தலைமையிலான அரசு கடந்த மூன்றாண்டுகளில் எடுத்த தீவிரமான நடவடிக்கைகளின் விளைவாக, 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்தவுடன், இந்தப் புதிய மின் உற்பத்தி நிறுவு திறனுக்கான மின் திட்டங்கள், எங்கெங்கே - எந்தெந்தத் தேதியில் இவர்களுடைய ஆட்சியினால் தொடங்கப்பட்டன என்று விளக்கிடத் தயாரா என்று நான் கேட்டதற்கு இன்றுவரை முதலமைச்சரோ, இன்று அறிக்கை விடுத்துள்ள அமைச்சரோ எந்தவிதமான பதிலும் கூறவில்லை. 

தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களிலிருந்துதான் இந்த 2,500 மெகாவாட் மின்சாரம் தற்போது கிடைக்கத் தொடங்கியிருக்கிறதே தவிர, ஜெயலலிதாவினால் புதிதாகத் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்ட மின் திட்டங்கள் எதுவும் இதுவரை தொடங்கப்படவும் இல்லை, அதிலிருந்து தற்போது மின்சாரம் கிடைக்கவும் இல்லை. மின்துறை அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தித் திட்டங்களை முதல் அமைச்சர் ஜெயலலிதா முடுக்கி விட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியைத் தொடங்கி 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவுதிறன் உருவாக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார். இதிலிருந்தே, தற்போது கூடுதலாகக் கிடைக்கும் 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி, தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். கழக ஆட்சியில் இந்தத் திட்டங்கள் தொடங்கப்படாவிட்டால் இந்த 2,500 மெகாவாட் மின் உற்பத்தி கிடைத்தே இருக்காது. அதற்காக கழக ஆட்சிக்கு நன்றி கூற வேண்டியவர்கள், இந்த ஆட்சியினர். 

முதலமைச்சர் அறிக்கையிலும், துறையின் அமைச்சர் அறிக்கையிலும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து 3,330 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்ய, அதுவும் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு மின்சாரம் வாங்கும்போது, டெண்டர் கோரப்பட்டதா? என்ன விலை? அதுவும் ஒரே நேரத்தில் 15 ஆண்டுகளுக்கு நீண்ட கால ஒப்பந்தம் போடப்பட்டதன் மர்மம் என்ன? 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டால், அதுவரை தமிழக அரசின் சார்பில் மின் உற்பத்தித் திட்டங்களே தொடங்க மாட்டார்களா? இது பற்றிய விவரங்களை மீண்டும் மீண்டும் கேட்டு இந்த அரசினர் அதற்கு மட்டும் பதிலளிப்பதில்லையே; என்ன காரணம்? இனியாவது பதிலளிப்பார்களா? 

இன்று (12-6-2014) வெளிவந்துள்ள “தினமலர்” நாளேட்டில் முதல் பக்கத் தலைப்புச் செய்தியே, “தனியாரிடம் 3,330 மெகாவாட் மின் கொள்முதலில் சிக்கல்! மின் வழித்தட இணைப்புப் பணி கால தாமதம்” என்ற தலைப்பிலே விரிவாக எழுதியிருக்கிறார்கள். அதில் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததில், இம்மாதம் 1,000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனால் மின் வழித்தடம், வர்த்தகப் பயன்பாட்டிற்கு வராததால், மின்சாரம் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். எனது கேள்விக்குத் தான் பதில் இல்லை என்றாலும், ஏடுகள் எழுதியிருப்ப தற்குப் பதில் என்ன? எனக்குப் பதிலளிக்க விரும்பாவிட்டாலும், பா.ம.க. நிறுவனர், அமைச்சரின் அறிக்கைக்குப் பதிலாக 10 கேள்விகளை விவரமாகக் கேட்டிருக்கிறார். அதற்காவது அரசினர் பதில் அளிப்பார்களா? 

ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் மின்வெட்டே இருக்காது என்று முதல் அமைச்சர் அறிக்கை விடுத்தார். நேற்று “தினமலர்” பத்திரிகையின் முதல் பக்கச் செய்தி என்ன தெரியுமா? “சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சிக்கு சிக்கல்; இரவில் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மின் தடை” என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்திக்காவது பதில் கூறுவார்களா? 

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: