Sunday, September 22, 2013

இலங்கை பிரச்சனைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர்: ராமதாஸ்



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை வடக்கு மாநில அவைக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு  அதிக இடங்களை வென்று, ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது.
இலங்கைப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்ததுடன், நான்கு லட்சம் தமிழர்களை அகதிகள் என்ற பெயரில் ஆடு மாடுகளைப் போல கொட்டடியில் அடைத்து வைத்து சிங்கள அரசு கொடுமைப் படுத்தியது. போருக்குப் பிறகும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. வடக்கு மாநிலம் முழுவதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. தமிழர்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை இருந்தது. இதற்காக இலங்கை மீது நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி வருகிறது. இதைத் தடுக்கும் நோக்குடனும், ஜனநாயகத்தில் தமக்கு நம்பிக்கை உள்ளது என்ற மாயத் தோற்றத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துவதற்காகவும் இந்தத் தேர்தலை  இராஜபக்சே அரசு நடத்தியது.
தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நாளில் இருந்தே அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த வேட்பாளர்கள் மீதும், அவர்களின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப் பட்டன. வாக்குப்பதிவு நாளன்றும் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டனர். இந்த அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. வடக்கு மாநிலத்தில் உள்ள 36 இடங்களில் 28 இடங்களை அந்தக் கட்சி பெற்றிருக்கிறது. வடக்கு மாநிலத்தை சிங்கள மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன், சில தமிழ் துரோகிகளை விலைக்கு வாங்கிய போதிலும் இராஜபக்சே கட்சியால் வெறும் 7 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக பதிவான சுமார் 5 லட்சம் வாக்குகளில் 80 % வாக்குகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்றுள்ளது. இந்தத் தேர்தல் வெற்றிக்காக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கை வடக்கு மாநிலத்தைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1976 ஆம் ஆண்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் தமிழீழ கோரிக்கை மீதான வாக்கெடுப்பாகவே நடைபெற்றுள்ளன. அப்படி நடந்த அனைத்து தேர்தல்களிலுமே தமிழ் கட்சிகள் தான் வென்றுள்ளன. முதன்முறையாக இந்தத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த காரணத்திற்காக தமிழீழம் தேவையில்லை; அதிகாரப்பகிர்வு போதும் என்ற முழக்கத்துடன் போட்டியிட்டனர். ஆனாலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் அது தமிழீழக் கோரிக்கைக்கு வலு சேர்த்து விடும் என்பதால், அக்கூட்டமைப்பை முறியடிக்க வேண்டும் என  இராஜபக்சே கட்சி பிரச்சாரம் செய்தது. ஆனால், இராசபக்சே கட்சிக்கு படுதோல்வியை பரிசாக கொடுத்திருப்பதன் மூலம் இலங்கை பிரச்சினைக்கு தமிழீழமே தீர்வு என்பதை ஈழத் தமிழர்கள் மீண்டும் உறுதி செய்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலுக்குப் பிறகு வெற்றிகளை மட்டுமே குவித்து வந்த இராஜபக்சே கட்சியை முதல்முறையாக படுதோல்வியடையச் செய்திருப்பதன் மூலம் தமிழர்கள் தங்களின் தமிழீழக் கோரிக்கையில் எவ்வளவு உறுதியாக உள்ளனர் என்பதை உலக சமுதாயம் உணர்ந்து கொள்ள முடியும். 

எனவே, இலங்கை வடக்கு மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஈழ மக்களின் இந்த உணர்வுகளை மதித்து செயல்பட வேண்டும். அதேபோல் இலங்கை அரசும் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு வட மாநிலத்திலிருந்து இராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். இத்தேர்தல் முடிவு தமிழீழ கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி என்பதால், ஈழத் தமிழர்களின் இந்த விருப்பத்தை ஐ.நா. மூலம் நிறைவேற்ற இந்தியாவும், உலக நாடுகளும் முன்வர வேண்டும்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: