Saturday, September 14, 2013

ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால்.... : ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் எண்ணெய் நிறுவனங்கள் ஏழைகளை சுரண்டுவதாகக் கூறியுள்ளார்.   இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’பெட்ரோல் விலையை மீண்டும் ஒருமுறை லிட்டருக்கு ரூ.2.07  உயர்த்தி ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறது மத்திய அரசு. சென்னையில் நேற்றுவரை ரூ.77.48 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இன்று ரூ.79.55 ஆக அதிகரித்துள்ளது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், அமெரிக்க டாலர் மதிப்பும் குறைந்து வருவதால்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.50 வரை குறைக்கப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ரே நேற்று முன்னாள் கூறியிருந்தார். இதனால் பெட்ரோல் விலை கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
செப்டம்பர் முதல் தேதியன்று 114.07 டாலராக இருந்த ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, நேற்றைய நிலவரப்படி 110.61 டாலராக குறைந்திருக்கிறது. அதே போல் டாலர் மதிப்பும், இதே காலத்தில், ரூ.66.13-லிருந்து ரூ.63.07 ஆக குறைந்திருக்கிறது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் விலை 117 டாலராகவும்,  டாலர் மதிப்பு ரூ.66.02 ஆகவும் அதிகரித்துவிட்டதாக கூறி பெட்ரோல் விலையை அதிகரித்துள்ளன. பொய்யான தகவல்களைக் கூறி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது பகல் கொள்ளைக்கு ஒப்பானது ஆகும். ஏழை மற்றும் நடுத்தர மக்களைச் சுரண்டும் இந்தப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.
கடந்த ஜூன் மாதம் தொடங்கி இன்று வரையிலான மூன்றரை மாதங்களில் பெட்ரோல் விலை 7 தவணைகளாக  மொத்தம் ரூ.13.65 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத  விலை உயர்வாகும். கடந்த 2008 ஆம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலைகள் வரலாறு காணாத அளவை எட்டிய போது கூட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.55.07 என்ற அளவில் தான் இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெயின் விலை110 டாலர் என்ற குறைந்த  அளவில் இருக்கும்நிலையில், பெட்ரோல் விலையை அப்போதிருந்த தைவிட 50 விழுக்காடு அதிகமாக நிர்ணயித்திருப்பது ஏற்கத் தக்கதல்ல. வணிக லாபம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவது எண்ணெய் நிறுவனங்களுக்கு அழகல்ல.
எனவே, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, பெட்ரோல் டீசல் விலைகளை நிர்ணயிக்கும் உரிமையை மத்திய அரசு திரும்பபெற வேண்டும்.
ஒவ்வொரு முறை பெட்ரோல், டீசல் விலை உயரும் போதும் அதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அந்த பாதிப்பை போக்க எதையும் செய்யவில்லை.
 கடந்த ஜூன் மாதத்திற்கு பிறகு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டதால் மட்டும் தமிழக அரசுக்கு லிட்டருக்கு ரூ. 2.85 கூடுதலாக வரி வருவாய் கிடைக்கிறது. ஜெயலலிதா நினைத்தால், கூடுதலாக கிடைக்கும் வரி வருவாய் தேவையில்லை என்று கூறி பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 3 வரை குறைக்க முடியும். ஏழை மக்களின் நலனில் ஜெயலலிதாவுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால் மதிப்பு கூட்டு வரியை குறைத்து அதன் மூலம் பெட்ரோல் விலையை குறைக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: