Wednesday, August 7, 2013

தாதுமணல் கொள்ளையை தடுத்த ஆட்சியர் இடமாற்றம் : ராமதாஸ் கண்டனம்

 

கடமையை செய்ததற்காக நியாயமான அதிகாரி ஒருவர் பழி வாங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் வட்டத்திற்குட்பட்ட வைப்பாறு, வேம்பார் உள்ளிட்ட கிராமங்களில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த தாது மணல் குவாரிகளில் ஆய்வு நடத்த ஆணையிட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் அவசர அவசரமாக இடமாற்றம் செய்யப்பட்டு முக்கியத்துவம் இல்லாத பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார். கடமையை செய்ததற்காக நியாயமான அதிகாரி ஒருவர் பழி வாங்கப்பட்டிருப்பது கண்டிக்கத் தக்கது.
விளாத்திக்குளம் வட்டத்தில் 23 ஏக்கரில் மட்டும் கார்னெட் மணலை தோண்டி எடுப்பதற்கான உரிமம் தொழிலதிபர் வைகுந்தராஜனுக்கு சொந்தமான வி.வி. மினரல்ஸ், அவரது சகோதரர் சுகுமாறனுக்கு சொந்தமான பீச் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சியினர் துணையுடன் அப்பகுதியில் உள்ள 200&க்கும் அதிகமான ஏக்கரில் சட்டவிரோதமாக சுரங்கங்களை அமைத்து இந்த இரு நிறுவனங்களும் கார்னெட் எனப்படும் தாது மணலை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளன. இதுதொடர்பாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அதிகாரிகள் குழுவை அனுப்பி சட்டவிரோத மணல் குவாரிகளில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் ஆணையிட்டுள்ளார். அதன்படி அந்தக் குழுவினர் ஆய்வை முடித்து திரும்புவதற்குள்ளாகவே ஆட்சியர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தாது மணல் குவாரிகளின் உரிமையாளர்களில் ஒருவரான வி. வைகுந்தராஜன் தென்கோடி மாவட்டங்களின் அதிகார மையங்களையே ஆட்டிப்படைக்கும் சக்தி கொண்டவர் ஆவார்.
ஆளுங்கட்சித் தொலைக்காட்சியின் உரிமையாளரான இவர் மீது கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்ட போது, இவருக்காக தற்போதைய முதலைமைச்சரும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதா நேரடியாக களமிறங்கி அப்போதைய அரசை எதிர்த்து குரல் கொடுத்தார் என்பதிலிருந்தே இவரின் அரசியல் செல்வாக்கு எப்படிப்பட்டது என்பதையும், இவரை எதிர்த்ததற்கான தண்டனையாகவே மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
நாடு முழுவதும் நடைபெறும் மணல் கொள்ளைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் & மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியின்றி நடத்தப்படும் மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று முன்தினம் தான் உத்தரவிட்டிருந்தது. அதன் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்துவதுடன், சட்டவிரோத மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நேற்று நான் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதே நாளில் தாது மணல் கொள்ளையை தடுக்க முயன்ற அதிகாரியை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்திருக்கிறது. மணல் கொள்ளையை தடுப்பதில் தமிழக அரசின் அக்கறை இந்த லட்சனத்தில் தான் இருக்கிறது.
ஒரு மாநிலத்தின் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதை தடுப்பது தான் அம்மாநில அரசின்  முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ இதற்கு மாறாக செயல்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களுடன் சேர்ந்து கொண்டு, அந்த ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்தது, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுத்ததற்காக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தர்மராஜை பணியிட மாற்றம் செய்தது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தாது மணல் கடத்தலைத் தடுத்தற்காக கல்பனா சாவ்லா விருது பெற்ற மாவட்ட ஆட்சியர் ஜோதி நிர்மலாவை அதிகாரம் இல்லாத பதவியில் முடக்கி வைத்திருப்பது என தமிழக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும்  மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே உள்ளது.
இனியாவது தமிழக அரசு அதன் கடமையை உணர்ந்து, தாது மணல் கடத்தலை தடுக்க முயன்ற மாவட்ட ஆட்சியரின் பணியிட மாற்றத்தை ரத்து செய்து அவரை மீண்டும் அதே பதவியில் அமர்த்த வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் ஆற்று மணல் கடத்தல் மற்றும் தாது மணல் கடத்தல் , இதில் நடந்துள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் மற்றும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து அதிகாரமளிக்கப்பட்ட குழுவைக் கொண்டு விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: