Monday, September 3, 2012

இஸ்ரோவில் கேரளத்தினர் ஆதிக்கம்.. தமிழர்களுக்கு உரிய அங்கீகாரம் இல்லை: ராமதாஸ்

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) கேரள அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இங்கு பணிபுரியும் தமிழர்களின் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நாகர்கோவிலில் பாமக சார்பில் மது ஒழிப்பு விழிப்புணர்வு கண்காட்சி நடக்கிறது. இந்த கண்காட்சியை திறந்து வைத்து ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
தமிழகத்தை இன்று மது அரக்கன் சீரழித்து கொண்டிருக்கிறான். அவனிடம் இருந்து நாட்டை பாதுகாக்க பாமக போராடி வருகிறது. கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
குமரி மாவட்டத்தில் 148 டாஸ்மாக் கடைகள் உள்ளன. ஒரு நாளைக்கு ரூ.1 கோடிக்கு மது விற்பனை நடக்கிறது. கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் இங்கு ரூ.584 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இந்த ஆண்டு இதனை ரூ.600 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கேரள அதிகாரிகளின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. இதனால் இங்கு பணிபுரியும் தமிழர்களின் ஆராய்ச்சிகளுக்கும், கண்டுபிடிப்புகளுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை.
இலங்கைத் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பாஆமக ரம்பம் முதலே குரல் கொடுத்து வருகிறது. இப்போது இவர்களுக்காக கருணாநிதி நடத்திய டெசோ மாநாட்டால் எந்த பலனும் இல்லை. அவர் கண் துடைப்புக்காகவே இந்த மாநாட்டை நடத்தினார். இலங்கை தமிழர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை.
இந்தியாவில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி கொடுக்க கூடாது. தமிழக மக்களின் எதிர்ப்பை மத்திய அரசு புரிந்து நடக்க வேண்டும்.
இந்தியாவுக்கு ராஜபக்சேவை அழைத்திருக்கும் பாஜகவுக்கு எங்கள் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்.
குமரி மாவட்ட மீனவர்கள் கேரள துறைமுகங்களில் மீன் பிடிக்க படகுகளில் சென்றால் அங்கு உபயோக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கேரள மீனவர்கள் குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் துறைமுகத்தை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களிடம் தமிழக அரசு கட்டணம் வசூலிப்பது இல்லை.
நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பாராளுமன்றத்தை பாஜக முடக்குவது சரியல்ல. அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த முன் வரவேண்டும். அதில் திருப்தி ஏற்படவில்லை என்றால் மக்கள் மன்றத்தில் தெரிவித்து போராட வேண்டும். அதை விடுத்து நாடாளுமன்றத்தை முடக்குவதை ஏற்க முடியாது என்றார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: