Sunday, September 2, 2012

இந்தியா வரும் ராஜபக்சவை கடுமையான வார்த்தையால் எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: இந்தியாவுக்கு வருகை தர உள்ள இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை மிகக் கடுமையான வார்த்தைகளால் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழ்வதற்கு தனித் தமிழீழம் அமைப்பது தான் ஒர் தீர்வு என்ற முழக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட இலங்கை அரசு, அண்மைக் காலமாக போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களையும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் போராளிகளையும் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் சிங்களப் படையினர் அவர்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாகவும், இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாத தமிழ்ப்பெண்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் இனத்தை அடியோடு அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடன் திட்டமிட்டு இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றது இலங்கை அரசு. தமிழகத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ்ப்பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. வரும் 21ந் தேதி இந்தியா வரும் இலங்கை அதிபர் இராஜபக்சேவை கடுமையான வார்த்தைகளால் பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி இம்மாதம் 10ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 21வது கூட்டத்திலும் இதுகுறித்து பிரச்சினை எழுப்பி இலங்கையை உலக நாடுகள் கண்டிக்கவும், எச்சரிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: