Monday, August 29, 2011

அதிகாரம் இல்லை என்ற ஜெயலலிதாவின் பேச்சு வேதனை தருகிறது- டாக்டர் ராமதாஸ்

சென்னை: கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதலமைச்சர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள முதல்வர் ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் கருணை மனுக்களும் குடியரசு தலைவரால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர்களை தமிழக முதல்வர் காப்பாற்றுவார் என்று ஒட்டுமொத்த தமிழகமும் நம்பிக்கொண்டிருக்கிறது.

ஆனால், கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அதை மாற்றுவதற்கு முதல்வர் என்ற முறையில் தமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறி தமது கடமையிலிருந்து விலகிக் கொள்ள ஜெயலலிதா முயன்றிருக்கிறார். இது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.

3 பேரின் தூக்கு தண்டனை தொடர்பாக தமிழகச் சட்டப் பேரவையில் விளக்கமளித்த முதல்வர், 1991ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தை காரணம் காட்டி, இம்மூவரையும் தம்மால் காப்பாற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியிருப்பது வெறும் கடிதம் மட்டுமே. அந்தக் கடிதத்தைவிட அதிகாரம் படைத்த அரசியல் சட்டத்தில், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்தாலும், அவர் மீண்டும் ஆளுநரிடம் கருணை மனு தாக்கல் செய்யலாம். அதன்மீது மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று ஆளுநர் முடிவெடுக்கலாம்'' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான அதிகாரத்தை ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் வழங்கும் அரசியல் சட்டத்தின் 161ஆவது பிரிவு தீர்ந்து போகாத இறையாண்மை கொண்டது என்றும், ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்ததாலேயே, அவரின் கருணை மனுவை மீண்டும் ஆய்வு செய்யும் அதிகாரம் மாநில ஆளுநரிடமிருந்து பறிக்கப்படாது என அரசியல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி ஆந்திரத்தைச் சேர்ந்த பூமய்யா, கிருஷ்ட கவுடு ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசு தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 1976ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ""ஒருவரின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்துவிட்டதாலேயே, சம்மந்தப்பட்டவரின் 2ஆவது கருணை மனுவை பரிசீலிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கோ அல்லது ஆளுநருக்கோ இல்லாமல் போகாது'' என்று உறுதிபடத் தெரிவித்திருக்கிறது. இந்த கருத்தை அரசியல் சட்ட வல்லுநர்கள் பலரும் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே இந்த மூவரின் சார்பிலும் ஆளுநரிடமும், முதல்வரிடமும் அளிக்கப்பட்டுள்ள கருணை மனுக்கள் மீது முதலமைச்சர் அவர்கள் அமைச்சரவையைக் கூட்டி சாதகமான முடிவை எடுக்க முடியும்.

கேரளத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சி.ஏ. பாலன் என்பவரின் கருணை மனுக்களை குடியரசு தலைவரும், ஆளுநரும் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், 1957ஆம் ஆண்டில் கேரள சட்ட அமைச்சராக பொறுப்பேற்ற வி.ஆர். கிருஷ்ணய்யர், அப்போதிருந்த மத்திய அரசிடம் போராடி அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். இதையெல்லாம் முன்னுதாரணமாகக் கொண்டு மூவரின் உயிரையும் காப்பாற்ற முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சட்டப்படியான உரிமைகள் ஒருபுறம் இருக்க, இம்மூவரையும் காக்க அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளையும் முதல்வர் மேற்கொள்ள இயலும்.

இலங்கை இனப்படுகொலைக்கு காரணமானவர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி பெருமை தேடிக் கொண்ட முதல்வர் அவர்கள், இம்மூவரின் தூக்கு தண்டனையையும் இரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் அனுப்பி வைக்க வேண்டும்.

மூவரின் உயிரையும் காப்பாற்ற வேண்டும் என்று முதல்வர் அவர்கள் மனது வைத்தால், அதை சாதிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: