Wednesday, March 31, 2010

தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி:ராமதாஸ்

சென்னை: தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி என்பதும், அரசியலில் அதன் பங்களிப்பை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

பென்னாகரம் தொகுதியில் பணத்தின் பக்கம் பலமாக காற்று வீசுகிறது என்ற கணிப்பு மெய்யாகி இருக்கிறது. பணநாயகம் வெற்றி பெற்று, ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்தலில் 13 கட்சிகளின் துணையுடனும், அனைத்து வசதி, வாய்ப்புகளுடனும் ஆளும் கட்சி களமிறங்கியது.

பிரதான எதிர்கட்சியும் 4 கட்சிகளின் துணையுடன் தேர்தலை சந்தித்தது. பாட்டாளி மக்கள் கட்சி மட்டும் தனித்து போட்டியிட்டு மக்களை சந்தித்தது. மற்றவர்களைப் போல பண பலம் இல்லை, மக்கள் ஆதரவு ஒன்றை மட்டுமே நம்பி களம் இறங்கினோம். அந்த நம்பிக்கை வீண்போகவில்லை.

தனியாகப் போட்டியிட்டு 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றிருக்கிறோம். பா.ம.க.வை பொறுத்தவரையில் இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு தோல்வி அல்ல, தார்மீக ரீதியில் மகத்தான வெற்றி ஆகும்.

பா.ம.க.வின் செல்வாக்கு சரிந்துவிட்டது என்ற சில ஆரூடக்காரர்களின் கணிப்பை, பென்னாகரம் வாக்காளர்கள் பொய்யாக்கி இருக்கிறார்கள். தமிழக அரசியல் அரங்கில் பா.ம.க. அசைக்க முடியாத சக்தி என்பதும், அரசியலில் அதன் பங்களிப்பை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும், பென்னாகரத்தில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு பெற்றுள்ள 41 ஆயிரத்து 285 வாக்குகள் உறுதிப்படுத்தியிருக்கிறது.

பீனிக்ஸ் பறவை போல பா.ம.க. எழுச்சியுடனும், உயிர்த்துடிப்புடனும் வீறுகொண்டு எழுந்து நிற்கிறது என்பதையும், மக்கள் மனதில் பா.ம.க. நீங்காத இடத்தை பெற்றிருக்கிறது என்பதையும் இந்த வாக்குகள் எடுத்துக் காட்டுகின்றது.

இத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய பென்னாகரம் வாக்காளர்களுக்கும், இரவு பகல் பாராது, இடையூறுகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு, தேர்தல் பணியாற்றிய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் அடிப்படை தொண்டர்கள் ஆகியோர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேர்தலை வணிகச் சந்தையாக்கும் போக்கு அண்மை காலமாக அதிகரித்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் இந்த ஆபத்தை உணர்ந்து, இதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துபேசி உரிய சட்ட நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ள வேண்டும்.

வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வதற்கான அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டாலொழிய, ஜனநாயகத்தை வீழ்த்தி கொண்டிருக்கும் பணநாயகத்தை ஒழிக்க முடியாது. இதற்கு உரிய சட்டத் திருத்தங்களை கொண்டு வர தேர்தல் ஆணையம் முனைப்புடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் உரத்தக் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: