Sunday, March 28, 2010

தீய சக்தி என்று பாமக மீது பழிபோடுவதா - கருணாநிதிக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: தீயசக்தி, தீவிரவாத சக்தி என்று பாமக மீது பழி போடுவதா என்று டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பல இடைத்தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த இடைத்தேர்தல்களின் போது ஏற்படாத கோபமும், ஆத்திரமும் பென்னாகரம் இடைத்தேர்தலையொட்டி கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக பாமக மீது அவருக்கு ஆத்திரமும், வெறுப்பும் கொந்தளித்திருக்கிறது. கருத்து கணிப்பில் பாமக இரண்டாவது இடத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை கூட கருணாநிதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

தீய சக்திகள், தீவிரவாத சக்திகள் என்றும், வன்முறைக்கான தூண்டுகோல், அராஜக ஆட்டம் போட திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள் என்றெல்லாம் பாமக மீது பழி சுமத்தியிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் பாமக எத்தகைய தீய செயலில் ஈடுபட்டு இருந்தது? எத்தகைய தீவிரவாத செயல்களை அரங்கேற்றியிருக்கிறது? எத்தனை வன்முறை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளது? எத்தனை அராஜக ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கிறது? பட்டியலிட முடியுமா முதலமைச்சரால்?

தொலைபேசியில் நான் பேசியதற்கும், பின்னர் பென்னாகரத்தில் நான் பேசியதற்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு என்று ஆச்சரியப்பட்டதாகவும், பின்னர் அந்த ஆச்சரியத்தை போக்கியது கடந்தகால எனது நடவடிக்கைகளும், அறிக்கைகளும், பேச்சுகளும் என்று கருணாநிதி கூறிஉள்ளார்.

'சட்டசபை நுழைவு சாரமற்றது; அதிகார பீடம் வெறும் ஆர்ப்பாட்டம்; பட்டங்கள் வெறும் பகல் வேஷம்; மந்திரிப் பதவி முதலானவை மாயாஜாலம்; அரசியல் வித்தை' என்று ஆரம்பத்தில் முழக்கமிட்ட திமுக பின்னர் அதிகார பீடம் ஏறவும், மந்திரி பதவிகளை பிடிக்கவும் எத்தகைய வழிமுறைகளையெல்லாம் கையாண்டு வந்திருக்கிறது?

யார், யாருடன் அணி சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தால் ஆச்சரியத்தில் அனைவரின் கண்களும் விரியும்!

திமுகவில் இதுபற்றி யாராவது கேட்டால், ஆதரித்தாலும் உறுதியாக ஆதரிப்போம். எதிர்த்தாலும் உறுதியாக எதிர்ப்போம் என்று அதற்கு விளக்கம் தருவார்கள். திமுகவிற்கு பொருந்தும் இந்த இலக்கணம் மற்ற கட்சிகளுக்கு பொருந்தாதா?

பண்போடும், அன்போடும், அமைதி காக்கும் மனத்தெம்போடும் வெற்றி ஒன்றை மட்டுமே நாட்டம் கொண்டு தீயசக்திகளுக்கு இடம் கொடாமல் கருமமே கண்ணாயினார் என்ற முதுமொழிக்கு ஏற்ப பணியாற்றி, ஜனநாயகத்தை அலுங்காமல், குலுங்காமல் காத்திட வேண்டும் என்று உடன்பிறப்புகளுக்கு கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இந்த தேர்தலில் பண்போடும், அன்போடும் அவர்கள் எப்படியெல்லாம் பணியாற்றினார்கள் என்று நாம் விவரிக்க தேவையில்லை' என்று கூறியுள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: