Thursday, March 11, 2010

பென்னாகரம்: வேலு இயக்கத்தில் டிராமா போடும் திமுக- ராமதாஸ்

தர்மபுரி: அமைச்சர் வேலு இயக்கத்தில் திமுக மிகப் பெரிய நாடகத்தை பென்னாகரத்தில் அரங்கேற்றி நடத்திக் கொண்டிருக்கிறது. பென்னாகரத்தை போர்க்களமாக மாற்றி வெற்றியைத் தட்டிப் பறிக்க முயன்று வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார்.

தர்மபுரியில் அவர் இதுதொடர்பாக அளித்த பேட்டி...

தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களம் என வர்ணிக்கப்படுகிறது. இடைத்தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதி போர்க்களமாக மாற்ற முயற்சி நடந்து வருகிறது. பா.ம.க.,வினரை கோபப்படுத்தி, ஆத்திரம் மூட்டி, தாக்குதல் நடத்தி, காயப்படுத்தி, பல்வேறு குற்றப்பிரிவுகளில் பொய் வழக்கு பதிவு செய்து, பின் கைது செய்து தேர்தல் பணிகளில் பா.ம.க.,வினரை முடக்கிட வேண்டும் என, திட்டமிட்டு நாடகம் அரகேற்றப்பட்டு வருகிறது.

இந்த நாடகத்தின் இயக்குனராக தி.மு.க., தொகுதி தேர்தல் பொறுப்பாளர், தி,மு.க.வின் புதிய வரவாக வந்துள்ள, புதிய கோடீஸ்வரர் அமைச்சர் வேலு செயல்பட்டு வருகிறார். மாவட்டத்தில் சில அதிகாரிகளை கையில் வைத்து கொண்டு குறிப்பிட்ட டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்களை நடிக்க வைத்து கொண்டிருக்கிறார். சோதனை சாவடிகளில் அமைதியான முறையில் வாகன சோதனை நடத்துவது தவறில்லை.

திமுக கார்களுக்கு மட்டும் சல்யூட்...

சமூக விரோதிகள், ஆயுதங்கள் செல்கிறதா, தேர்தல் சட்ட விதிமுறைக்கு எதிராக வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஆளுங்கட்சி வாகனங்கள் சோதனை செய்வதில்லை; சுதந்திரமாக சோதனை சாவடிகளை கடந்து செல்கிறது. தி.மு.க., வாகனங்கள், "சல்யூட்' அடுத்து அனுப்பி வைக்கப்படுகிறது. பா.ம.க., வாகனங்கள் சோதனை என்ற பெயரில் வாகனங்களை முடக்க செய்கின்றனர்.

அன்புமணி சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யாமல் காக்க வைத்து, பா.ம.க.,வினர் ஆத்திரம் அடைய செய்து பின் தடியடி நடத்தியுள்ளனர். சம்பவம் நடந்த சோதனை சாவடியில் நேற்று அமைச்சர் வேலு கார் சோதனை செய்யப்பட்டதாக ஒரு நாடகம் நடந்துள்ளது. அதோடு, சட்டத்தின் முன் அமைச்சர் முதல் அனைவரும் சமம் என, அமைச்சர் வேலு உபதேசம் வேறு செய்துள்ளார்.

இது வரை எத்தனை முறை வேலு மற்றும் தி.மு.க., அமைச்சர்கள் தொகுதிக்குள் சென்றுள்ளார்கள்; அவர்கள் வாகனங்கள் எல்லாம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? என்பதை வீடியோ ஆதரத்தோடு எங்களுக்கு காட்டி அதிகாரிகள் நடுநிலையுடன் நடப்பதை தெளிவு படுத்த வேண்டும்.

மூட்டை மூட்டையாக பணம்...

தொகுதியில் பல இடங்களில் வேட்டி, சேலைகள், வாக்காளர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் பணம் கொடுக்க மூட்டைகள் எப்படி தொகுதிக்குள் வந்தது. சிலவற்றை நாங்கள் பிடித்து கொடுத்துள்ளோம். சில இடங்களில் அதிகாரிகள் கணக்கு காட்ட பிடித்துள்ளனர். இது போன்று பிடிக்கப்பட்ட பொருட்கள் எப்படி தொகுதிக்குள் சென்றது.

பத்திமரன்அள்ளியில் ஒரு வீட்டில் ஒன்றரை கோடி ரூபாய் பணம் மூட்டைகள் இருந்துள்ளது. போலீஸாருக்கு தகவல் சொன்னால் இரு போலீஸார் மட்டுமே அங்கு வந்தனர். உயர் அதிகாரிகள் வரவில்லை. அந்த வீட்டில் 3 லட்ச ரூபாயை தீயில் போட்டு எரித்ததாக சொல்கின்றனர்.

மணிக்காரன்கொட்டாயில் இரண்டு சூட்கேஸில் இருந்த பணம் குறித்து தகவல் தெரிவித்து, டி.எஸ்.பி., வந்தும் அந்த பணத்தை மக்கள் முன்னிலையில் வேறு இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நிலைக்குழு அமையுங்கள்...

தேர்தல் நடத்தை விதிமுறையில் ஒவ்வொரு தொகுதியிலும் மாவட்ட அளவில், தொகுதி அளவில் நிலைக்குழு அமைக்க வேண்டும் என விதி உள்ளது. பென்னாகரம் தொகுதியில் நிலைக்குழு அமைக்கப்படவில்லை. நிலைக்குழு அமைக்கப்பட்டால், உள்ளூர் பிரச்னைக்கு தலைமை தேர்தல் கமிஷன் அளவில் சென்று புகார் செய்ய வேண்டியது இல்லை.

தேர்தலை நியாயமான முறையில் நடத்திட எஸ்.பி., மற்றும் தாசில்தார் டியூக் பொன்ராஜ் ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும். குறைந்த பட்சமாக பணி இடமாற்றமாவது செய்திட வேண்டும்.

திருச்செந்தூர் தொகுதியில் தேர்தலை நியாயமான முறையில் நடத்திய எஸ்.பி.யை போன்ற நேர்மையான அலுவலர்களை நியமிக்க வேண்டும். பா.ம.க.,வினர் தேர்தலை அமைதியாக நடத்த முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

எங்களை ஆத்திரமூட்டக் கூடாது...

எங்களை ஆத்திரமூட்டும் வகையில் நடத்த கூடாது. நேற்று முன்தினம் நடந்த தடியடி சம்பவம், "என் கவுண்டர்' நிகழ்வு போல் போலீஸார் நடத்தியுள்ளனர். போலீஸார் நடுநிலை யுடன் செயல்பட வேண்டும். காவல் துறை அமைச்சர் வேலுவின் ஏவல் துறையாக செயல்பட கூடாது. தொகுதியில் பதிவு எண் இல்லாமல் சுற்றும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம் தோறும் பண மேளா...

நேற்று முன்தினம் இரவு தி.மு.க.,வினர் கிராமங்கள் தோறும் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும், பண மேளா நடத்தியுள்ளனர். வாக்காளர்களுக்கு முதல் கட்டமாக 1,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாம், மூன்றாம் கட்டம் என பணம் கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

அமைச்சர் அன்பரசுக்கு தி.மு.க.,வில் ஒதுக்கப்பட்ட தேர்தல் பணிக்கான அதிர்நத்தம், தென்னப்பள்ளம் ஆகிய கிராமங்களில் 1,000 ரூபாய் மற்றும் வேட்டி, சட்டை, பேண்ட், சர்ட் பேக்கேஜ் செய்து கொடுத்துள்ளனர்.

நேற்று அதிகாலை வரையில் எல்லா கிராமங்களிலும் பணம் அன்பளிப்பு பொருட்கள் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றார் ராமதாஸ்.

1 comment:

Subu said...

இப்ப லேட்டஸ்டு நிலமை என்னாண்ணே ...அதை சொல்லிபோடுங்க !! ஆவலா காத்துக்கிட்டு இருக்கோமில்ல

மேலும் :

http://manakkan.blogspot.com/2010/03/blog-post_29.html

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: