Thursday, March 25, 2010

மக்கள் மனதில் பாமகவுக்கே முதலிடம்: ராமதாஸ்

சென்னை: லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு முரண்பாடாக உள்ளது. பாமகவுக்கு அவர்கள் 2வது இடத்தைக் கொடுத்தாலும், மக்கள் மனதில் பாமகவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பென்னாகரம் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தை சேர்ந்த குழுவினர் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என வாக்காளர்கள் முடிவு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணவும், அந்த காரணிகளின் தாக்கத்தால் வாக்காளர்களின் எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யவும் இந்த கள ஆய்வை நடத்தியதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் கண்டறிந்துள்ள காரணிகள் மற்றும் அவற்றால் வாக்காளர்களின் எண்ணப்போக்கில் ஏற்பட போகும் மாற்றத்திற்கும், இவர்கள் கள ஆய்வில் தெரிவித்து இருக்கும் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சமே இந்த இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காரணிகளில் முதன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. வேலையில்லாத திண்டாட்டம் இரண்டாவது காரணியாக ஆய்வறிக்கை கூறுகிறது. இவைதான் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்க போகும் வாக்காளர்களின் எண்ணப்போக்கின் மாற்றங்களை உருவாக்கப்போகின்றன என்று சொல்லி விட்டு அதற்கு நேர் மாறான முடிவை ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

பென்னாகரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்திற்கும், வேலையில்லாத திண்டாட்டத்திற்கும் யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்? 1967-ம் ஆண்டிற்கு பின்னர் தமிழகத்தில் 5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆனாலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. வேலையில்லாத திண்டாடத்தை போக்கவில்லை. தி.மு.க. ஆட்சியின் அலட்சியம் காரணமாகவே காவிரி கரையில் வாழ்கின்ற பென்னாகரம் மக்கள் குடிநீருக்காக இன்றளவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிழைப்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று கொத்தடிமைகளாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மறந்து விட்டா இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு அவர்கள் வாக்களிப்பார்கள்? அப்படி சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக இல்லையா?

குடிநீருக்கு தவியாய் தவிர்ப்பதையும், பிழைப்பிற்காக சொந்த மண்ணை விட்டு வெளியேறி கொத்தடிமைகளாக வெந்து மடிவதையும் மறந்து விட்டு தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள் என்ற முடிவிற்கு கள ஆய்வை நடத்தியவர்கள் எப்படி வந்தார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.

வாக்களிக்க பணம் கொடுப்பது தவறு என்றும், அந்த பணத்தை வாங்குவதும் தவறு என்றும் வாக்காளர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் என்று கள ஆய்வு அறிக்கையின் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்கள். பணம் கொடுப்பதில் தி.மு.க. தான் முன்னணியில் இருக்கிறது என்றும் கண்டறிந்து அறிவித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்றும், எதுவும் செய்ய முடியாமல் ஆணையம் தவித்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு வாக்காளர்கள் தி.மு.க.விற்கு அதிகம் பேர் வாக்களிப்பார்கள் என்றும், இப்போதைக்கு அந்த கட்சி முதலிடத்தில் இருக்கிறது என்ற ஒரு முடிவிற்கு கள ஆய்வு நடத்தியவர்கள் எப்படி வந்தார்கள்? என்பது வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது.

லயோலா கல்லூரி கள ஆய்வு முடிவு தொகுதி மக்களின் உண்மையான எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கவில்லை. உண்மை நிலைக்கும், கள ஆய்வின் முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணமே இந்த தேர்தலில் பிரதான இடத்தை பெற்றிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதுவே முடிவை நிர்ணயிக்கப்போவதில்லை. பணத்தை பெற்றுக்கொண்டுள்ள வாக்காளர்களில் பெரும்பாலானார் தங்களது மனசாட்சியின் படி விரும்புகின்ற கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவில் இருக்கிறார்கள்.

இன்றைய நிலையில் பென்னாகரம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்ற கட்சி பா.ம.க. தான். இரண்டாவது இடமல்ல. வாக்காளர்கள் மனதில் பா.ம.க. முதலிடத்திலேயே இருக்கிறது. அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: