’’உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தரும் தேயிலையை உற்பத்தி செய்யும் விவசாயிகள், அதற்கு உரிய விலை கிடைக்காததால் உற்சாகமிழந்து சோர்ந்து கிடக்கின்றனர். அவர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக அரசோ இன்னும் உறக்கத்தை களைய மறுக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடியில் சுமார் 65,000 சிறு மற்றும் குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த 16 ஆண்டுகளாகவே தேயிலை சாகுபடி கடுமையான சோதனைகளை எதிர்கொண்டு வருகிறது. சர்வதேச சூழலைக் காரணம் காட்டி உள்ளூர் சந்தையில் பசுந்தேயிலையின் விலை மிகவும் குறைவாகவே இருக்கும் வகையில் சில சக்திகள் பார்த்துக் கொள்கின்றன. ஒரு கிலோ பசுந்தேயிலையை உற்பத்தி செய்ய ரூ.17.35 செலவு ஆவதாக பெங்களூரில் உள்ள இந்திய தோட்ட மேலாண்மை நிறுவனம் கணக்கீடு செய்திருக்கிறது. வேளாண்மை விளைபொருட்களுக்கு கொள்முதல் விலை செய்வதற்கான முறையை எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரைத்திருக்கிறது.
ஒரு வேளாண் விளைபொருளை சாகுபடி செய்வதற்காக ஆகும் செலவுடன் விவசாயிகளின் லாபமாக 50% சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது தான் அந்த பரிந்துரையாகும். அதன்படி பார்த்தால் சாகுபடி செலவு 17.35 ரூபாயுடன் லாபமாக ரூ. 08.68 சேர்த்து பசுந்தேயிலைக்கான கொள்முதல் விலையாக கிலோவுக்கு ரூ.26.03 நிர்ணயிக்க வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலை.
ஆனால், தேயிலை விலை முறையாக நிர்ணயிக்கப்படாததால் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கவில்லை. கடந்த 16 ஆண்டுகளாக தொடரும் இந்த அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த12.10.2012 அன்று அளித்த தீர்ப்பில்,‘‘பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் சிறு& குறு தேயிலை உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அவர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் பசுந்தேயிலைக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். தேயிலை கொள்முதல் விலையை நிர்ணயிக்க இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கம் நடத்திய ஆய்வின் முடிவுகளை எடுத்து கொள்ளலாம் அல்லது புதிய ஆய்வை நடத்திக் கொள்ளலாம்’’ என ஆணை
யிட்டது. ஆனால், உயர்நீதிமன்றத்தின் இந்த அறிவுரையை தமிழக ஆட்சியாளர்கள் காற்றில் பறக்கவிட்டனர். பசுந்தேயிலைக்கு அரசு அல்லது தேயிலை வாரியம் தான் விலை நிர்ணயிக்க வேண்டும். ஆனால், இதற்காக தனிக் குழு அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வமற்ற வகையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு பொருளுக்கு சாகுபடி செலவு அடிப்படையில் தான் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால், உள்ளூர் சந்தையில் தேயிலைத் தூள் என்ன விலைக்கு ஏலம் விடப்படுகிறதோ, அதில் ஐந்தில் ஒரு பங்கு தான் பசுந்தேயிலைக்கான விலை என்று நிர்ணயிக் கப்படுகிறது. அந்த வகையில் தேயிலைத் தூள் ரூ.60க்கு விற்பனை செய்யப்படுவதால் பசுந்தேயிலையின் விலையாக ரூ.12 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஒரு கிலோ பசுந்தேயிலையை சாகுபடி செய்ய ரூ.17.35 செலவாகும் நிலையில், அதை ரூ.12&க்கு மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிப்பது பெரும் துரோகமாகும்.
தேயிலை வாரியத்தில் சிறு & குறு தேயிலை விவசாயிகளை உறுப்பினர்களாக நியமித்திருந்தால், அவர்கள் தேயிலை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் வகையில் செயல்பட்டிருப்பார்கள். ஆனால், தேயிலை நிறுவனங்களுக்கு ஆதரவானவர்களை வாரிய உறுப்பினர்களாக நியமிப்பதால் அவர்கள் விவசாயிகளின் நலனை விட தேயிலை நிறுவனங்களின் நலனுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். அதன்பயனாகத் தான் பசுந்தேயிலை அடிமாட்டு விலைக்கு வாங்கப்படுகிறது. தேயிலை விவசாயி என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அவர்கள் நலனில் அக்கறை இருந்தால் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண முயற்சி செய்திருக்க வேண்டும். ஆனால், அதற்காக ஒரு சிறு துரும்பைக் கூட ஜெயலலிதா தலைமையிலான அரசு அசைக்கவில்லை. இந்நிலை நீடித்தால் தேயிலை விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகிவிடும்.
எனவே, இந்த பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பசுந்தேயிலைக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வரும் 11&ஆம் தேதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நீலகிரியில் தொடர்முழக்கப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தை நான் தலைமையேற்று நடத்த உள்ளேன். நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தியாளர்சங்க நிர்வாகிகளும், விவசாயிகளும் இப்போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.’’
No comments:
Post a Comment