Saturday, January 9, 2016

சென்னையை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை: அன்புமணி ராமதாஸ் பேட்டி

இயற்கை பேரழிவில் இருந்து சென்னை நகரத்தை பாதுகாப்பது மற்றும் சென்னையை சிறந்த மாநகரமாக பராமரிப்பது பற்றிய விரிவான திட்டங்கள் அடங்கிய ‘‘நாம் விரும்பும் சென்னை’’ என்ற புதிய செயல்திட்ட கையேடு ‘பசுமை தாயகம்‘ சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. 

சென்னையில் இதனை வெளியிட்டு பேசிய பா.ம.க.வின் முதல்–அமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ்,

இயற்கை சீற்றத்தில் இருந்து சென்னையை பாதுகாக்க நிரந்தர தீர்வு என்ன? புதிய திட்டங்களை உருவாக்குவது எப்படி? என்பது பற்றிய செயல் திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டு உள்ளோம்.

இதை மக்கள் மத்தியில் ஒரு பிரசார இயக்கமாக கொண்டு சென்று அவர்களின் கருத்துக்களையும் நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து அடுத்த மாதம் இறுதி அறிக்கையை வெளியிடுவோம். சென்னையில் பெரும் மழை, பெரு வெள்ளம் ஏற்படுவது புதிதல்ல. சராசரியாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி பெரும்மழை பெய்துதான் வருகிறது.

கடந்த 2005–ம் ஆண்டு இதேபோல் பெரும் மழை பெய்தது. அப்போதும் முதல்வராக இருந்த ஜெயலலிதா சென்னையை பாதுகாக்க தொலைநோக்கு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்தார். ஆனால் 10 ஆண்டுகள் கழித்து அதே போல் பெரும்மழையும், பேரழிவும் ஏற்பட்டது.

ஆனால் இதை தடுப்பதற்கு அவர்கள் கொண்டு வந்து நிறைவேற்றிய திட்டங்கள் என்ன? பெருமை மிக்க சென்னையில் முதல் பிரச்சினை நிர்வாக பிரச்சினை தான். மாவட்ட கலெக்டர், மாநகர நிர்வாகம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை என்று பல நிர்வாக பிரிவுகள் இருந்தும் அவைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை.

கால நிலை மாற்றத்தால் இனிவரும் காலங்களில் இயற்கை சீற்ற பாதிப்புகள் அதிகரிக்கலாம். தற்போது ஏற்பட்ட பேரழிவு ஒரு செயற்கை பேரழிவுதான். ஏரிகளில் நீர்மட்டத்தை முன்கூட்டியே குறைக்க வில்லை. ஆறுகள் கடலில் கலக்கும் முகத்துவாரங்கள் முறையாக தூர்வாரப்பட்டு ஆழப்படுத்தப்படவில்லை.

கடந்த 2010–ம் ஆண்டிலேயே சென்னையில் வெள்ளம் பாதிக்கும் பகுதிகள் கண்டறியும் திட்டம் உருவாக்கப்பட்டு பல்வேறு பரிந்துரைகள் கொடுக்கப்பட்டன. அதில் எதையும் நிறைவேற்றவில்லை.

சென்னையில் மிகப்பெரிய கால்வாய், பக்கிங்காம் கால்வாய், 30 மீட்டர் அகலமும், 10 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த கால்வாய் ஆந்திராவின் பெத்தகஞ்சம் என்ற இடத்தில் தொடங்கி சென்னை நகர், மரக்காணம் வழியாக சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் வரை நீள்கிறது. ஆனால் இந்த கால்வாயின் இப்போதைய நிலையை எண்ணி பாருங்கள். பள்ளிக் கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டு வருகிறது.

பக்கிங்காம் கால்வாய் தண்ணீரை நேரடியாக கடலில் வடியும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். ஆறு மற்றும் கால்வாய் வழித்தடங்களை மீட்டெடுக்க வேண்டும். குப்பைகள் அகற்றுவதற்கு, சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு உரிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். இவையெல்லாவற்றுக்குமான தீர்வுகளை நாங்கள் நிபுணர்களுடன் கலந்து இந்த அறிக்கை வாயிலாக மக்களுக்கு வழங்குகிறோம். சென்னையை பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். இவ்வாறு கூறினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: