தை பிறக்கும்... நல்ல வழி பிறக்கும் மாற்றம் வரும்... முன்னேற்றம் வரும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழர் திருநாளான பொங்கல் பெருவிழாவையும், தமிழ் புத்தாண்டையும் உற்சாகத்துடன் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள தமிழ் சொந்தங்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அறுவடைத் திருநாளான பொங்கலை இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் வெவ்வெறு பெயர்களில் கொண்டாடி மகிழ்ந்தாலும், அத்திருநாளை உருவாக்கியவர்கள் தமிழர்கள் தான். அதனால் தான் இத்திருநாளுக்கு தமிழர் திருநாள் என்ற பெயர் உருவானது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இத்திருநாளில் தமிழர் அனைவரும் வீடுகளில் தோரணம் கட்டி,புத்தாடை அணிந்து, புது நெல் குத்தி, புதுப் பானையில் பொங்கலிட்டு மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ வேண்டும்.
பொங்கல் கொண்டாட்டத்தின் அடையாளங்களான கரும்பு, சர்க்கரைப் பொங்கல், வாழைப்பழம் உள்ளிட்ட அனைத்துமே இனிப்பை பிரதிநிதித்துவப் படுத்துபவை ஆகும். ஆனால், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த ஆண்டு கசப்பே பரிசாகக் கிடைத்திருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு போதிய இழப்பீடு அறிவிக்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவில் அறிவிக்கப்பட்ட இழப்பீடும் கிடைக்குமா? என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. உழவர்களைப் போலவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரும் தமிழக அரசால் கைவிடப்பட்ட நிலையில் தவிக்கின்றனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்..... அதேபோல், இந்த தமிழ் புத்தாண்டு இனிமையான மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் தமிழக மக்களுக்கு கொண்டு வரும். ஒரு சொட்டு மது இல்லாத, ஒரு பைசா ஊழல் இல்லாத, கல்வி மற்றும் சுகாதாரச் செலவு இல்லாத, குடிசைகள் இல்லாத, வறுமையில்லாத, வளம் நிறைந்த, அறிவு செறிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட முதலமைச்சரின் தலைமையில் புதியதோர் தமிழகம் விரைவில் உருவாகப்போவது உறுதி. அதற்காக உழைக்க இந்த தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளில் தமிழர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment