Monday, January 4, 2016

ஜெயலலிதா வாட்ஸ்-அப் விளம்பரத்திற்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதா?: ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை:

’’சென்னையை வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் தாக்கிய போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற முன்வராத முதலமைச்சர் ஜெயலலிதா, மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யும், தேனும் கலந்து தயாரிக்கப்பட்ட ஓர் உரையை ‘வாட்ஸ்-அப்’பில் படித்தார். உண்மையை குழிதோண்டி புதைத்து விட்டு, அரசியல் லாபம் தேடும் ஒற்றை நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட அந்த உரை இப்போது செல்பேசி மற்றும் தரைவழி தொலைபேசிகள் மூலம் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவின் உரை தொடக்கத்தில் வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக தொலைபேசி அழைப்பு மணி திடீரென ஒலிக்கிறது. எவரேனும் முக்கியமான நண்பர்கள் அழைக்கிறார்களோ என்ற எண்ணத்தில் எடுத்தால், ‘‘ வணக்கம், உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்’’ எனத் தொடங்கி ஜெயலலிதாவின் முழு உரையும் ஒலிக்கிறது. 

தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி தான் என்ற போதிலும் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட செல்பேசி பயன்படுத்துவதால் கிட்டத்தட்ட 10 கோடி செல்பேசி இணைப்புகள் தமிழகத்தில் உள்ளன. இவை தவிர 2 கோடிக்கும் அதிகமான தரை வழி தொலைபேசி இணைப்புகளும் உள்ளன. இந்த அனைத்து தொலைபேசி பயன்பாட்டாளர்களுக்கும் குறைந்தது 5 முறையாவது ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை சென்றடைய வேண்டும் என்று அரசுத் தரப்பில் ஆணையிடப்பட்டிருப்பதால் அடிக்கடி தொலைபேசியில் ‘உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா’ அழைத்து பொதுமக்களை எரிச்சலூட்டுகிறார்.

ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை பிரச்சாரத்தை தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தான் மேற்கொண்டு வருகிறது. 

நோய்டாவில் உள்ள அழைப்பு மையங்கள் மூலம் மேற்கொள்ளப் படும் இந்த பிரச்சாரத்திற்கு மட்டும் ரூ.50 கோடிக்கும் அதிகமான தொகை செலவு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இது முழுக்க முழுக்க மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் பணியாகும். ஆனால், ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரையில் என்ன திட்டம் அல்லது பயனுள்ள தகவல் இருப்பதாக எண்ணி அதை மக்களிடம் கொண்டு செல்ல கோடிக்கணக்கில் வரிப்பணத்தை அரசு செலவிடுகிறது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

மழை - வெள்ளத்தில் சிக்கி மக்கள் தவித்த போது முதலமைச்சரோ, அமைச்சர்களோ திரும்பிக் கூட பார்க்கவில்லை. வீட்டை விட்டுக் கூட வெளியே வராமல் முதலமைச்சர் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். ஆனால், இதையெல்லாம் மறைத்து விட்டு,‘‘ உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன்’’ என்று உருக்கமாக பேசி மக்களை ஏமாற்ற ஜெயலலிதா முயல்கிறார். உண்மையில் மக்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் ஜெயலலிதா சுமக்கவில்லை; மாறாக ஜெயலலிதா அரசின் பாவ மூட்டைகளைத் தான் ஒரு பாவமும் செய்யாத தமிழக மக்கள் தங்களின் தலை மீது சுமந்து கொண்டிருக்கிறார்கள். ‘‘எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள் தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம் தான்’’ என்பது முதலமைச்சர் ஜெயலலிதா பேசும் அடுத்த வசனம். ஒட்டுமொத்த தமிழகத்தையும் ஊழல் செய்து வளைத்து போட்ட முதலமைச்சர் ஜெயலலிதா, எந்த நம்பிக்கையில் தனக்கென தனி வாழ்க்கை எதுவுமில்லை என்று ஏமாற்று வசனம் பேசுகிறார் என்பது விளங்கவில்லை.

இன்றைய சூழலில் ஜெயலலிதாவின் வாட்ஸ்-அப் உரை என்பது முன்கூட்டியே தொடங்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. 

ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக மக்கள் வரிப்பணம் செலவிடப்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இதற்காக செலவிடப்படும் பணத்துடன் இன்னொரு மடங்கு சேர்த்தால் அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவக் கல்லூரியை அமைத்து ஆண்டுக்கு 100 முதல் 150 மருத்துவர்களை உருவாக்கலாம். ஆனால், அதை செய்வதை விடுத்து தனது சொந்த லாபத்திற்காக, செய்யாத தியாகத்தை விளம்பரப்படுத்துவதற்காக மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கும் ஜெயலலிதா தான் தமிழக மக்களின் முதன்மை எதிரி ஆவார். வரும் தேர்தலில் அவரை வீழ்த்துவது தான் தமிழக மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய நன்மையாக இருக்கும்.

அரசின் சொத்துக்களையெல்லாம் தமது சொந்த சொத்துக்களாக ஜெயலலிதா நினைத்துக் கொள்வது  இது முதல் முறையல்ல. நேற்று கூட, அ.தி.மு.க.வின் புதிய மாவட்ட செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களை  கட்சி அலுவலகத்திற்கோ அல்லது தமது இல்லத்திற்கோ அழைக்காமல் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து தான் ஆசி வழங்கியிருக்கிறார். இதற்கு முன்பு கூட அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் தான் அவர் நடத்தினார். அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளில் பெரும்பாலானவற்றை அரசு செலவில்  செய்ததுடன், புகைப்படம் எடுப்பது, பொதுக்குழு குறித்த  செய்திகளை வெளியிடுவது ஆகியவற்றுக்காக தமிழக அரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகளை பயன்படுத்திக் கொண்ட புதிய பொதுவுடைமைவாதி தான் ஜெயலலிதா. 

அ.தி.மு.க.வின் அருவறுக்கத்தக்க இந்த அரசியலை தமிழ்நாட்டு மக்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஊடகங்களை கையில் வைத்துக் கொண்டு உண்மைகளை மூடி மறைத்தாலும், அவை தடைகளை உடைத்துக் கொண்டு வெளியே வரும் காலம் வந்து விட்டது. இதற்கெல்லாம் காரணமான ஜெயலலிதாவை வரும் தேர்தலில் வீழ்த்தி தமிழகத்தை மக்கள் மீட்டெடுப்பது உறுதி!’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: