Tuesday, September 1, 2015

அண்ணாமலை பல்கலை. நிதி நெருக்கடியை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டும்: ராமதாஸ்

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைப் போல அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் மாறினாலும், அது எதிர்கொண்டு வரும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்படவில்லை. இதற்கான தீர்வு உயர்கல்வி மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாக திகழ்ந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில்  நடந்த முறைகேடுகள் காரணமாக கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதைச் சமாளிக்க பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களை நீக்கம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நான், அண்ணாமலை பல்கலைக்கழகத்தைக் காப்பாற்ற அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். அடுத்த சில மாதங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. 

நிர்வாகம் மாறினாலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை போக்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது.

இதனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 12,500 பணியாளர்களுக்கு  வழங்கப்பட வேண்டிய 6 தவணை அகவிலைப்படி நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. 2011&ஆம் ஆண்டு முதல் பணியாளர்களின் விடுப்பு ஒப்படைப்பு பணம் வழங்கப்படுவதில்லை. ஆசிரியர்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக 2012 ஆம் ஆண்டு முதல் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள் இதுவரை ஒரு பதவி உயர்வு கூட பெற முடியாமல் அதே நிலையில் தொடர்கின்றனர். பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்பட வில்லை. இதனால் ஏற்பட்ட நெருக்கடியை தாங்க முடியாமல் இதுவரை 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 45 பேர் ஓய்வு பெற்ற பின் அதற்காக பயன்களை பெறாமல் இறந்து விட்டனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு நடப்பாண்டில் ரூ.110 கோடி நிதி வழங்கியுள்ளது. இதையும் பிற வருவாயையும் சேர்த்து பல்கலைக்கழகத்தின் மொத்த வருமானம் ரூ.350 கோடியாக உள்ளது. அதேநேரத்தில் பல்கலைக்கழகத்தின் ஆண்டு செலவு ரூ.700 கோடியாக உயர்ந்து விட்டது. மேலும், பல்கலைக்கழக பணியாளர்களுக்கும் ஓய்வுதியர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை ரூ.500 கோடியாக அதிகரித்துள்ளது. ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால்  பல்கலைக்கழகத்தின் செலவுகள் ஆண்டுக்கு ரூ.1000 கோடி ஆக உயர்ந்து விடும். இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் நிதி நெருக்கடியை சமாளிக்க அரசு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

1. பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க சிறப்பு நிதியாக ரூ.500 கோடி வழங்க வேண்டும்.

2. அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட் டிலிருந்து பிரித்து அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுடன், அதனுடன் இணைந்த மருத்துவமனையை உயர் சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இதன் மூலம் பல்கலைக்கழக செலவு குறைவதுடன், மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதும் முடிவுக்கு வரும்.
3. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை ஒருமை பல்கலைக்கழகம் என்ற நிலையிலிருந்து இணைவு பெற்ற பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். அதனுடன், கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இணைக்க வேண்டும். 

4. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் அனுமதிக்கப்பட்ட பணியாளர்கள் எண்ணிக்கையை 5456 ஆக உயர்த்த தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கு உடனடியாக நிர்வாக ஒப்புதல் வழங்க வேண்டும். மீதமுள்ள பணியாளர்களை பணி நிரவல் மூலம் மற்ற பல்கலைக்கழகங்களில்  பணியமர்த்தலாம்.

மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சீரமைக்க முடியும். அதுமட்டுமின்றி, அப்பல்கலைக்கழகம் நிதி தன்னிறைவு அடையும் என்பதால் அரசின் உதவி தேவைப்படாது. எனவே, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சரி செய்ய  மேற்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: