Sunday, September 13, 2015

நேதாஜி குறித்த ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்! : ராமதாஸ்

 

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை;
’’உலகில் உடைக்கப்படாத மர்மங்களில் முதன்மையானது இந்திய விடுதலைக்காக படை அமைத்து போராடிய சுபாஷ் சந்திரபோசின் இறுதிக்காலம் ஆகும். இந்த மர்மத்திற்கு விடை காணும் முயற்சிகளின்  தொடக்கமாக நேதாஜி பற்றிய 64 ஆவணங்கள் வரும் 18 ஆம் தேதி கொல்கத்தாவில் வெளியிடப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இந்திய விடுதலை அறவழியில் சாத்தியமாகாது; ஆயுத வழியில் தான் சாத்தியமாகும் என்பதில் உறுதியாக இருந்தவர் நேதாஜி. இதற்காக பல்வேறு வெளிநாடுகளுக்குச் சென்று படைகளையும் திரட்டினார். 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இவரைப் பற்றி எந்த தகவலும் இல்லை. 18.08.1945 அன்று நேதாஜி பயணித்த விமானம் தைவான் நாட்டில் விபத்தில் சிக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் & செப்டம்பர் மாதங்களில் தங்களது நாட்டில் விமான விபத்து எதுவும் நடக்கவில்லை என்று தைவான் கூறிவிட்டது.

 பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதி முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும் அவர் விமான விபத்தில் உயிரிழக்க வில்லை என்பதை உறுதி செய்தது. நேதாஜி ரஷ்யாவில் வாழ்ந்தார் என்றும், சீனத்தில் வாழ்ந்தார் என்றும் செய்திகள் உலவின. உத்தரப்பிரதேசத்தில் பகவான்ஜி என்ற பெயரில் 1985 ஆம் ஆண்டு வரை துறவியாக வாழ்ந்து மறைந்தார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இவற்றில் எதையும் உறுதி செய்ய முடியவில்லை. நேதாஜி குறித்த மர்மம் 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. 

இந்திய மண்ணை மீட்க வேண்டும் என்பதற்காக பல நாடுகளுக்குச் சென்று படை திரட்டிய ஒரு தலைவர் எந்த மண்ணில் வாழ்ந்தார், எந்த மண்ணில் மறைந்தார் என்பதைக் கூட வரலாற்றில் பதிவு  செய்யாமல் இருப்பது அந்த தலைவருக்கு செய்யப்படும் அவமரியாதை ஆகும். லட்சக்கணக்கான இளைஞர்கள் நேதாஜியை தங்களின்  முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் கொண்டிருந்தனர்; இப்போதும் இளைஞர்களைக் கவர்ந்த புரட்சியாளர்கள் வரிசையில் நேதாஜிக்கு இடம் உண்டு. ஆனால்,  அவரது இறுதிக்காலம் குறித்த தகவல்களை மத்திய அரசு திட்டமிட்டே மறைப்பது சரியல்ல. 

நேதாஜியின் உறவினர்களை நேரு அரசு உளவு பார்த்ததாக சில ஆண்டுகளுக்கு முன் தகவல்கள் வெளியாயின. இத்தகைய சூழலில் நேதாஜி குறித்த ஆவணங்கள் மறைக்கப் படுவது பல யூகங்களை ஏற்படுத்துகிறது.

மேற்கு வங்க அரசு வெளியிடவிருக்கும் 64 ஆவணங்கள் மூலம் நேதாஜியின் இறுதிக் காலம் தொடர்பான சில உண்மைகள் வெளியாகும் என்ற போதிலும், அனைத்து மர்மங்களும் விலகும் என எதிர்பார்க்க முடியாது. மத்திய அரசிடம் இருக்கும் ஆவணங்களின் மூலம் தான் இந்த மர்மங்களை போக்க முடியும். நேதாஜி தொடர்பாக தங்களிடமுள்ள ஆவணங்களை மேற்கு வங்க அரசால் வெளியிட முடியும் போது, மத்திய அரசால் ஏன் வெளியிட முடியாது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நேதாஜி குறித்த உண்மைகளை வெளியிட வேண்டிய கடமை நரேந்திர மோடி அரசுக்கு அதிகமுள்ளது.

பிரதமராவதற்கு முன்பே குஜராத் முதலமைச்சர் என்ற முறையில் கொல்கத்தா சென்ற மோடியை  09.04.2013 அன்று நேதாஜியின் உறவினர்கள் சந்தித்து நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிட  உதவும்படி கோரினர். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நேதாஜி குறித்த ஆவணங்கள் வெளியிடப்படும் என்று அப்போதைய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் வாக்குறுதி அளித்தார். கடந்த மே மாதம் 9 ஆம் தேதி நேதாஜி குடும்பத்தினர் பிரதமரை தில்லியில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து, தங்களின்  கோரிக்கைகள் குறித்து நினைவூட்டிய போது, ‘‘ இதை மக்களின் கோரிக்கை என்று கூறாதீர்கள்... நாட்டின் கடமை என்று கூறுங்கள் (do not call this a people’s demand. It is the nation’s duty)’’ என்று கூறி அக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அதன்பின் 4 மாதங்கள் ஆன பிறகும் அதற்காக எந்த நடவடிக்கைடையும் மத்திய அரசு மேற்கொள்ளாதது வருத்தமளிக்கிறது.

நேதாஜி குறித்த ஆவணங்களைக் கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப் பித்தபோது, நேதாஜி பற்றிய தகவல்களை வெளியிட்டால் பல நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்படும் என்று கூறி, அவற்றை வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. வெளியுறவு விஷயங்களைக் காரணம் காட்டி ஒரு தேசத் தலைவர் குறித்த உண்மைகள் மறுக்கப்படுவதை ஏற்க முடியாது. எனவே, நேதாஜி பற்றி தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும்.’’

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: