பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1988 ஆம் ஆண்டின் மோட்டார் வாகனச் சட்டத்திற்கு மாற்றாக சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சட்டத்தை எதிர்த்து நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்வதாக அனைத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
இந்த மசோதாவை பா.ம.க. கடுமையாக எதிர்ப்பதாகவும், இதை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்தும் போராட்டங்களை பா.ம.க. ஆதரிக்கும் என்றும் கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அறிவித்திருந்தேன். இந்த நிலையில் வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் இப்போராட்டம் பற்றி இன்று செய்தியாளர்கள் என்னிடம் கேட்ட போது, போராட்டத்தில் பா.ம.க. பங்கேற்காது என்று தவறுதலாக கூறிவிட்டேன். நாளைய வேலைநிறுத்தத்தில் பா.ம.க. பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். உலகிலேயே அதிக அளவில் சாலை விபத்து நடக்கும் நாடு என்ற அவப்பெயரை இந்தியா பெற்றுள்ள நிலையில், சாலைப் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாலை பாதுகாப்பு குறித்து இந்த சட்டத்தில் உள்ள சில அம்சங்களை பா.ம.க. ஆதரிக்கிறது. ஆனால், பெரும்பாலான அம்சங்கள் சாலைப்பாதுகாப்பைக் காரணம் காட்டி மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை பறிக்கும் வகையிலும், அனைத்து சேவைகளையும் தனியாருக்கு தாரை வார்க்கும் வகையில் இருப்பதாலும் இந்த மசோதாவை பாட்டாளி மக்கள் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்
No comments:
Post a Comment