மின் கொள்முதலில் ரூ.415 கோடி இழப்பு: சி.ஏ.ஜி. புகார் பற்றி விசாரணை தேவை என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் மின்சாரத் தட்டுப்பாட்டை சமாளிக்க தனியாரிடமிருந்து குறுகிய கால ஒப்பந்தங்களின்படி மின்சாரம் வாங்கியதில் மின்வாரியத்திற்கு ரூ.415 கோடி இழப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளிலுமே மின்சாரக் கொள்முதலில் ஊழல் நடந்ததை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது.
2013-14 ஆம் ஆண்டில் தமிழக அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் தணிக்கை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. மின்சாரக் கொள்முதலில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. 2010 ஆம் ஆண்டில் தொடங்கி 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை குறுகிய கால ஒப்பந்தங்களின் அடிப்படையில் மின்சாரம் வாங்கியதில் ரூ.109.60 கோடி மின்சார வாரியத்திற்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், அதே அளவு தொகை தனியார் நிறுவனங்களுக்கு லாபமாக கிடைத்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மின்சாரத் தட்டுப்பாடு எவ்வளவு, எந்தெந்த காலத்தில் எவ்வளவு மின்சாரம் தேவைப்படும் என்பதை துல்லியமாக கணக்கிடாமல் ஒரே காலகட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது தான் இந்த இழப்புக்கு காரணம் என்றும் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இழப்பு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது என்பது தான் உண்மை.தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சில புள்ளி விவரங்களின் அடிப்படையில் இதை நிரூபிக்கலாம். உதாரணமாக, பவர் டிரேடிங் கார்ப்பரேசன்(Power Trading Corporation Limited-PTC) என்ற நிறுவனத்திடமிருந்து 2011 ஆம் ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரை 1000 மெகாவாட் மின்சாரம் வாங்க 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த மின்சாரம் போதாது என்று தோன்றியதால் 2011 மார்ச், ஏப்ரல் மாதங்களில் கூடுதலாக 700 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கு 2011 பிப்ரவரியில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. முதல் ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்றும், இரண்டாவது ஒப்பந்தத்தில் ஒரு யூனிட் ரூ.6.75 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
முதல் ஒப்பந்தப்படி 2011 மார்ச் மாதத்தில் ஒரு யூனிட் ரூ.4.76 என்ற விலையில் 2.02 கோடி யூனிட் மின்சாரத்தை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அந்த நிறுவனம் அதில் பாதியளவு, அதாவது 1.18 கோடி யூனிட் மின்சாரத்தை மட்டுமே வழங்கியது. அதேநேரத்தில் யூனிட் ரூ.6.75 என்ற விலையில் 1.37 கோடி யூனிட் வழங்குவதற்கு பதிலாக 2.08 கோடி யூனிட் மின்சாரம் வழங்கியிருக்கிறது. ஒரே நிறுவனத்திடம் இரு விலைகளில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் குறைந்த விலையில் வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை உரிய அளவில் வழங்காமல், அதிக விலைக்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை அதிக அளவில் வழங்கியிருக்கிறது. 2011 ஏப்ரல் மாதத்திலும் இதே நிலை நீடித்தது. இதனால் 2 மாதங்களில் ஒரே ஒரு நிறுவனத்திடம் மட்டும் ரூ. 7.94 கோடி இழப்பு ஏற்பட்டது.
2014 ஆம் ஆண்டு வரை இதே போல் இரு விலைகளில் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டு, அதிக விலையில் கூடுதல் மின்சாரம் வாங்கியதாக கணக்குக் காட்டப்பட்டிருக்கிறது. இந்த வகையில் தான் ரூ.109 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. முதல் ஒப்பந்தப்படி வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை வழங்கி முடித்த பிறகு தான் இரண்டாவது ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் என நிபந்தனை விதிக்கப் பட்டிருந்தால் இந்த இழப்பு ஏற்பட்டிருக்காது. மின் நிறுவனங்களின் தவறுகளால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை ஈடுகட்டவும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டிருக்கிறது. அதாவது குறைந்த விலையில் மின்சாரம் வழங்க ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனங்கள் அதன்படி மின்சாரம் வழங்கத் தவறினால் ஒரு யூனிட்டுக்கு ரூ.1 வீதம் இழப்பீடு வசூலிக்க முடியும். அந்த வகையில் தனியார் நிறுவனங்கள் குறித்த காலத்தில் வழங்காத 264.90 கோடி யூனிட்டுகளுக்கு ரூ.280.37 கோடி இழப்பீடு வசூலித்திருக்க வேண்டும். ஆனால், ஒரு பைசா கூட இழப்பீடாக வசூலிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, 2011 நவம்பர் முதல் 2012 ஜூன் வரையிலான காலத்தில் ஒப்பந்தப்படி மின்சாரம் வழங்காததற்காக தனியார் நிறுவனங்களிடம் இழப்பீடாக வசூலிக்கப்பட்ட ரூ.36 கோடி காரணமின்றி திரும்பத் தரப்பட்டு விட்டது.
மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களில் சில தி.மு.க. ஆட்சியிலும், பல அ.தி.மு.க. ஆட்சியிலும் கையெழுத்திடப்பட்டவை. அதனால் அதில் நடந்த ஊழலுக்கு இரு கட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், வழங்கப்படாத மின்சாரத்திற்காக இழப்பீடு வசூலிக்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. அரசுக்கு தான் இருந்தது. அந்த அரசு தான் இழப்பீட்டை வசூல் செய்திருக்க வேண்டும். ஆனால், மின் நிறுவனங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு இடையிலான பேரங்கள் காரணமாக இழப்பீடு வசூலிக்கப்படவில்லை; இழப்பீட்டை வசூலிக்காமல் இருந்ததற்காக ஆட்சியாளர்களுக்கு பொருளாதாரப் பயன்கள் கிடைத்தன என்பதே உண்மை. இதுதவிர தனியார் நிறுவனங்கள் வழங்கும் மின்சாரத்திற்கான கடன் உத்தரவாதக் கடிதத்தை மின்சார வாரியம் தராததால் சில நிறுவனங்கள் மின்சாரம் தர மறுத்து விட்டன. அதே மின்சாரத்தை வேறு நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து வாங்கியதால் கூடுதலாக அரசுக்கு ரூ.25.64 கோடி இழப்பு ஏற்பட்டதாக தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உடன்குடி மின்திட்டம் தொடர்பாக பெல் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்டிருந்த கூட்டாண்மை ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் ரூ.21.64 கோடியும், நீர் மின் நிலையங்களில் மின்னுற்பத்தி கருவிகளை அமைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரூ.29.79 கோடியும் இழப்பு ஏற்பட்டன. இந்த இழப்புகள் தவறுதலாக ஏற்பட்டவை கிடையாது; இவை தி.மு.க., அ.தி.மு.க. அரசுகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப் பட்டவை என்பதால் இவற்றை ஊழலாகத் தான் கருத வேண்டும். எனவே, இந்த இழப்புகள் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இழப்புக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment