இனிவரும் தேர்தல்களில் ஓட்டுக்காக மக்கள் பணம் வாங்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–
இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் குடியுரிமைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது வாக்குரிமை ஆகும். நம்மை ஆட்சி செய்யும் நல்ல அரசை தேர்வு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விலை மதிப்பற்ற அந்த உரிமையை பணத்திற்காக விற்பது நமது எதிர்காலத்தையும், குழந்தைகளையும் விற்பதற்கு சமமாகும்.வாக்களிக்க பணம் வாங்குவது தான் ஊழலின் ஊற்றுக்கண்ஆகும். வாக்குக்காக பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் கொடுத்த பணத்தை ஒன்றுக்கு பத்தாக எடுக்கத் துடிக்கும்போது தான் ஊழல் தொடங்குகிறது. எனவே ஊழலை ஒழிக்க வேண்டும் என விரும்புவோர் ஓட்டுக்கு பணம் பெறுவதை நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஏழை மக்களில் 78 விழுக்காட்டினரிடம் ஓட்டு விலைக்கு வாங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 பணம் செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்ட உண்மை அமெரிக்கா வரை பரவி விக்கிலீக்சில் வெளியாகி உலகம் முழுவதும் நமக்கு அவப்பெயரை பெற்றுத்தந்தது. இவ்வளவுக்குப் பிறகும் ஓட்டுக்கு பணம் தருவதை தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் நிறுத்துவதாக தெரியவில்லை. ஓட்டுக்கு பணம் தருவதும், பெறுவதும் அரசியல் புற்று நோயாக பரவி வருகிறது.
ஓட்டுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த நிலையை மாற்ற மக்களால் மட்டுமே முடியும். இதற்காக, வரும் மக்களவைத் தேர்தலிலும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட வாங்கக்கூடாது என்று தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து வாக்காளர்களும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment