Saturday, January 4, 2014

வீட்டின் முன்பகுதியில் ‘எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்தை எழுதி தொங்கவிடுங்கள்: ராமதாஸ் பேச்சு



திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் வ.உ.சி. திடலில் சனிக்கிழமை மாலை மாநில இளம்பெண்கள் அணி துணை செயலாளர் பொன்.மகேஸ்வரி தலைமையில் நடந்தது.
மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம்பெண்கள் அதிக விதவைகளாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மதுதான். மதுவை குடிக்க சொல்கிற கட்சிகளை அப்புறப்படுத்தும் காலம் வந்தாச்சு. இதையெல்லாம் மாற்றும் முழுபொறுப்பு பெண்களிடம் உள்ளது.
தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்கள் கொடுக்கிற பணத்தை வாங்கிவிட்டு கவுரவத்தையோ, நட்பையோ விற்றுவிடாதீர்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும், ‘எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்தையும், மானம், மரியாதையுடன் வாழ்கிறோம் என்ற வாசகத்தையும் பலகையில் எழுதி தொங்கவிடுங்கள்.
தமிழ்நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கு பதிலாக மதுவை கொடுத்து ஏழையை ஒழிக்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. கடந்த காலங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மது குடித்தார்கள். ஆனால் தற்போது பள்ளியில் படிக்கின்ற 13 வயது மாணவன் மது குடிக்கிறான்.
ஒரு முறை பா.ம.க.விற்கு வாக்களித்து கோட்டையில் உட்கார வையுங்கள். முதல்–அமைச்சரானதும், மதுவை ஒழிப்பது தான் முதல் கையெழுத்தாக போடுவோம். பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறையும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வி, கட்டணமில்லா கல்வி, சுமையில்லா கல்வியை இலவசமாக கொடுப்போம். சிறந்த மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு விதை, மருந்து, உரம் உள்ளிட்டவைகளை இலவசமாக கொடுப்போம். இதன் மூலம் தமிழ்நாடு வளர்ச்சியடையும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: