Thursday, January 30, 2014

தமிழக ஆளுனர் உரை! இல்லாத சாதனைக்கு இலவச விளம்பரம்! ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தொடரை தொடக்கி வைத்து ஆளுனர் ரோசய்யா உரையாற்றியுள்ளார். ஆளுனர் உரையில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே என்பதைப் போல அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவுள்ள திட்டங்களின் கொள்கை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவது தான் ஆளுனர் உரையின் நோக்கம் ஆகும். ஆனால், அதற்கு நேர் எதிரான வகையில் அரசின் புகழ்பாடும் அறிக்கையாக நடப்பாண்டின் ஆளுனர் உரை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு என்ற அளவை விட குறைந்து விட்டது. இதை சரி செய்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் ஆளுனர் உரையில் இடம் பெறவில்லை. நடப்பாண்டில் மொத்தம் 130 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நெல் உற்பத்தி 100 லட்சம் டன் என்ற அளவைக் கூட எட்டாது எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு உற்பத்தி குறைந்ததற்கு அரசின் தவறான கொள்கைகளும், விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்காததும் தான் காரணமாகும். இந்தக் குறைகளை சரி செய்து விவசாயத்திற்கு புத்துயிரூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, வேளாண் உற்பத்தித் திறனை பெருக்க இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்ற வெற்று வசனத்தை மட்டும் ஆளுனர் உரையில் இடம் பெறச் செய்திருக்கிறது. தமிழகத்தை வாட்டி வதைக்கும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை சரி செய்வதற்கான எந்த திட்டமும் ஆளுனர் உரையில் இடம் பெறாதது அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மட்டும் கர்நாடகத்தில் ரூ.12,000க்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், தொழில்துறையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தமிழகத்தை தேடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, எதார்த்தத்தில் இருந்து ஆளுனர் உரை எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆளுனர் உரையில் வரவேற்கும்படியாக உள்ள ஒரே அறிவிப்பு சென்னையில் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் புதிய வழித்தடங்களில் செயல்படுத்தப்படும் என்பது தான். மோனோரயில் திட்டத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்த தமிழக அரசு, பெருநகர தொடர்வண்டித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விசயமாகும். இதைத் தவிர, ஆளுனர் உரையின் 43 பக்கங்களை திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்தாலும் பாராட்டும் வகையில் எந்த ஓர் அறிவிப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 சுருக்கமாக கூற வேண்டுமானால், அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடிகளை தமிழக அரசு வாரி இறைக்கிறது..... இம்முறை ஆளுனர்  உரை  மூலம் செய்யாத சாதனைகளுக்கு செலவில்லாமல் விளம்பரம் தேட அரசு முயன்றிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: