Sunday, January 12, 2014

தமிழக விஞ்ஞானிகளுக்கு விழா எடுத்து பாராட்டி விருது வழங்குக: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

மயில்சாமி அண்ணாதுரை, சுப்பையா அருணன், என்.வளர்மதி, வி. நாராயணன், கே.சிவன் ஆகியோரே தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள விஞ்ஞானிகள் ஆவர். மயில்சாமி அண்ணாதுரை தான் சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர். நிலவில் நீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியாமல் உலகமே திணறிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு தண்ணீர் இருப்பதை அண்ணாதுரை அனுப்பிய சந்திரயான் தான் ஆதாரங்களுடன் கண்டு பிடித்து உலகிற்கு தெரிவித்தது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா அனுப்பவுள்ள சந்திரயான்-2 விண்கலத்திற்கான திட்ட இயக்குனராகவும் மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டு வருகிறார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுப்பையா அருணன் தான் பெருமைக்குரிய மங்கள்யான் திட்டத்தை வழி நடத்திய இயக்குனர் ஆவார். செவ்வாய் கிரகம் சம்பந்தப்பட்ட புதிருக்கு விடை காண்பதற்காக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற முன்னேறிய நாடுகளே மங்கள்யான் விண்கலம் கண்டுபிடிக்கவுள்ள உண்மைகளை அறிந்து கொள்வதற்காக காத்துக்கிடக்கின்றன என்பதிலிருந்தே இத்திட்டத்தின் மகத்துவத்தை உணர முடியும்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த சாதனைப் பெண்ணான என்.வளர்மதி விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக கருதப்படும் ரிசாட்-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான அரியலூரைச் சேர்ந்த இவர் கடுமையாக உழைத்து இந்தியாவின் தலைசிறந்த பெண் விஞ்ஞானிகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் வடிவமைத்த ரிசாட்-1 உளவு செயற்கைக் கோள் விவசாயத்திற்கும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும், இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணிக்கவும் பேருதவி செய்கிறது. வளர்மதியின் ஆராய்ச்சி தான் விண்வெளித் துறையில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு இணையாக இந்தியாவை நிலைநிறுத்தியது என்பது நமக்கு கூடுதல் பெருமையாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் தான் அமெரிக்காவை மிரள வைத்த கிரையோஜெனிக் எந்திரத்தை முழுக்க, முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து கிரையோஜெனிக் எந்திரத்தின் தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா மறுத்துவிட்ட நிலையில் 20 ஆண்டு உழைப்புக்குப் பிறகு நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகள் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் எந்திரத்தை தயாரித்துள்ளனர். இந்த கிரையோஜெனிக் எந்திரத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி-5 ஏவுகலத்தின் திட்ட இயக்குனரான கே.சிவனும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஆவார்.
உலகமே வியக்கும் அளவுக்கு தமிழர்கள் சாதனை படைத்திருப்பது நமக்கு பெருமை அளிக்கும் போதிலும், இந்த சாதனைத் தமிழர்களுக்கு தமிழக அரசு இன்று வரை உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த சாதனைத் தமிழர்கள் அனைவரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது இன்னுமொரு பெருமையாகும். இவர்களின் சாதனைகளை முறையாக அங்கீகரிப்பதன் மூலம் தான் தமிழ்வழிக் கல்வியின் வலிமை மற்றும் பெருமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த முடியும்.
எனவே, விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக விழா எடுத்து பாராட்டுவதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, அரசு அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு ‘பத்ம' விருதுகளை வழங்க முடியாது என மத்திய அரசு விதிகளில் கூறப்பட்டிருப்பதால் இவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்படவில்லை. டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது வழங்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதைப் போல, இப்போதும் திருத்தம் செய்து தமிழக விஞ்ஞானிகளுக்கு ‘பத்ம' விருதுகளை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: