Friday, January 31, 2014

தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,”


"தமிழகத்தில் தான், ஓட்டுகள் விற்பதும், வாங்குவதும் நடக்கிறது. அதனால், தமிழகம், அவமான சின்னமாக விளங்குகிறது,” என, பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

சேலத்தில், பா.ம.க., சார்பில், மது ஒழிப்பு குறித்த பெண்கள் மாநாட்டுக்கு தலைமை வகித்து, அக்கட்சியின் நிறுவனர், ராமதாஸ் பேசியதாவது:குழந்தைகளுக்கு ஓட்டுகள் இல்லை. ஆனால், அவர்களே, இன்று ஓட்டுகள் விற்பனைக்கு இல்லை என, தெரிவித்து வருகின்றனர். அவர்கள் தெரிவிப்பது, எங்களின் எதிர்காலத்தை விற்பனை செய்யாதீர்கள் என்பதே.கோடி, கோடியாக கொட்டி வைத்துள்ள ஊழல், லஞ்ச கறுப்பு பணம் மூலம், ஓட்டுகள், 2,000, 3,000 ரூபாய்க்கு, தேர்தல் நேரங்களில், விலை பேசப்படுகின்றன. கள்ளப் பணத்தில் இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது.'ஆம் ஆத்மி' கட்சி, ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. ஓட்டுகளையும் விலைக்கு வாங்கவில்லை.

தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகள், வெற்றிலை பாக்குடன், வெங்கடாஜலபதி படத்தை வைத்து, சத்தியம் வாங்கி, ஓட்டுக்கு, ஐந்து ரூபாய் கொடுத்து, இந்த கலாசாரத்தை துவக்கின. இதை, தி.மு.க., தான் முதலில் கொண்டு வந்தது. அதன்பின், 10 ரூபாய் துவங்கி இன்று திருமங்கலம், பென்னாகரம் தேர்தல்களில்ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வரை, வழங்கப்பட்டது. இதையே திருமங்கலம் பார்முலா என, கூறுகின்றனர்.பெரியண்ணா, 'டிவி' கொடுத்தாரு, இந்த அம்மா பொங்கலுக்கு, 1 கிலோ அரிசி, சர்க்கரையுடன், 100 ரூபாய் தர்றாங்க. அதை வாங்கும் உங்கள் கணவர்கள், 100 ரூபாயுடன், கூடுதலாக, 100 ரூபாய் போட்டு சாராயம் குடிக்கிறாங்க.

தமிழகத்தில், பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், ஒரு சொட்டு சாராயம் கூட விற்பனை செய்யப்படாது. தமிழகத்தில், 2.5 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளனர். நீங்கள் சரியாக முடிவு எடுப்பீர்கள், உங்கள் குடும்பம் வளம் பெற, எதிர்காலத்தில் குழந்தைகளின் வாழ்வாதாரம் சிறக்க, பா.ம.க.,வை ஆதரிக்க கோரி வருகிறோம். தமிழகத்தில், தி.மு.க.,- - அ.தி.மு.க., கட்சிகளைநிரந்தரமாக ஒழிக்க வேண்டும். இவ்வாறு' அவர் பேசினார்.

Thursday, January 30, 2014

சென்னை பல்கலை. ஆசிரியர் நியமனம்: சமூக அநீதியைப் போக்க வேண்டும்: ராமதாஸ் அறிக்கை



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை பல்கலைக்கழகத்தில் 96 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பர அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதனடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணல்கள் இன்று முதல் நடைபெறவிருக்கின்றன. இந்த ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்றுகள் எழுந்துள்ளன.
சென்னை பல்கலைக்கழகத்தில் இப்போது நிரப்பப்படவுள்ள 96 பணியிடங்களில் முறையான இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் பொதுப்பிரிவினருக்கு 17 இடங்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35 இடங்கள், மிகப்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 21 இடங்கள், பட்டியலினத்தவருக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4 இடங்களும், மிகப்பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 11 இடங்களும், பட்டியலினத்தவருக்கு 3 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், பொதுப்பிரிவினருக்கு 51 இடங்கள், அருந்ததியர் மகளிருக்கு 27 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதன்மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம் பல்கலைக்கழக ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும் தவறான இட ஒதுக்கீட்டு முறை தான்.
2000 ஆவது ஆண்டில் தமிழக அரசு பிறப்பித்த இட ஒதுக்கீட்டு ஆணைப்படி 100 புள்ளி சுழற்சி முறை (100 Point Roster)இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதன்படி ஒரு துறையில் 3 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் முதல் பணியிடம் பொதுப்பிரிவுக்கும், இரண்டாவது பணியிடம் பட்டியலினத்தவருக்கும் ஒதுக்கப்படும். மூன்றாவது பணியிடம் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்படும். அதன்பின் நான்காவது பணியிடம் எப்போது நிரப்பபடுகிறதோ, அப்போது அப்பணியிடம் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் 100 புள்ளி சுழற்சி முறை இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தவரை  பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்தில் குழப்பம் எதுவும் ஏற்படவில்லை.
ஆனால், 2007 ஆம் ஆண்டில் சில பிரிவினருக்கு உள் இட ஒதுக்கீட்டு வழங்கப்பட்டதால், 100 புள்ளி சுழற்சி முறையை 200 புள்ளி சுழற்சி முறையாக (200 Point Roster) மாற்றி தமிழக அரசு ஆணையிட்டது. இதில் தான் குழப்பம் ஏற்பட்டது. 200 புள்ளி சுழற்சி முறை இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்ட போது, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால், எந்த குழப்பமும் ஏற்பட்டிருக்காது. ஆனால், 100 புள்ளி சுழற்சி முறை அப்படியே கைவிடப்பட்டு, 200 புள்ளி சுழற்சி முறை புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டதால், முந்தைய முறையில் எந்த பிரிவுக்கெல்லாம்  இட ஒதுக்கீடு கிடைத்ததோ, அவர்களுக்கே மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. முந்தைய முறையில் இட ஒதுக்கீடு பெறாத மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் மிகக்குறைந்த பணியிடங்களே இருக்கும் என்பதால், ஒரு பிரிவினருக்கு ஒரு முறை இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டால், அடுத்த 30 ஆண்டுகளுக்கு அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது. அதுமட்டுமின்றி, ஒரு பிரிவினருக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை, இன்னொரு பிரிவினருக்கு வழங்குவதால் அவர்களுக்கிடையே தேவையற்ற பகைமை ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில் நடக்கும் முறைகேடுகளை களையும்படி கடந்த 17 ஆம் தேதி நான் அறிக்கை வெளியிட்டிருந்தேன். ஆனால், குறைகளை சரி செய்ய வேண்டிய தமிழக அரசும், சென்னைப் பல்கலைக்கழகமும் அவசர, அவசரமாக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது கண்டிக்கத்தக்கது.

எனவே, சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப இன்று முதல் நடைபெற்று வரும் நேர்காணல்களை ரத்து செய்ய அரசு உத்தரவிட வேண்டும். 200 புள்ளி சுழற்சி முறையைகைவிட்டு, ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த 100 புள்ளி சுழற்சி முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை நிர்ணயித்து பேராசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்,

தமிழக ஆளுனர் உரை! இல்லாத சாதனைக்கு இலவச விளம்பரம்! ராமதாஸ் அறிக்கை!

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டத்தொடரை தொடக்கி வைத்து ஆளுனர் ரோசய்யா உரையாற்றியுள்ளார். ஆளுனர் உரையில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
யானை வரும் பின்னே... மணியோசை வரும் முன்னே என்பதைப் போல அரசின் நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவுள்ள திட்டங்களின் கொள்கை சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவது தான் ஆளுனர் உரையின் நோக்கம் ஆகும். ஆனால், அதற்கு நேர் எதிரான வகையில் அரசின் புகழ்பாடும் அறிக்கையாக நடப்பாண்டின் ஆளுனர் உரை அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 5 விழுக்காடு என்ற அளவை விட குறைந்து விட்டது. இதை சரி செய்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் ஆளுனர் உரையில் இடம் பெறவில்லை. நடப்பாண்டில் மொத்தம் 130 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நெல் உற்பத்தி 100 லட்சம் டன் என்ற அளவைக் கூட எட்டாது எனத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நெல் மற்றும் கரும்பு உற்பத்தி குறைந்ததற்கு அரசின் தவறான கொள்கைகளும், விவசாயத்தை லாபம் தரும் தொழிலாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்காததும் தான் காரணமாகும். இந்தக் குறைகளை சரி செய்து விவசாயத்திற்கு புத்துயிரூட்ட எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, வேளாண் உற்பத்தித் திறனை பெருக்க இந்த அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது என்ற வெற்று வசனத்தை மட்டும் ஆளுனர் உரையில் இடம் பெறச் செய்திருக்கிறது. தமிழகத்தை வாட்டி வதைக்கும் மின் வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றை சரி செய்வதற்கான எந்த திட்டமும் ஆளுனர் உரையில் இடம் பெறாதது அரசின் செயலற்ற தன்மையையே காட்டுகிறது.

தமிழ்நாட்டின் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மட்டும் கர்நாடகத்தில் ரூ.12,000க்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிலையில், தொழில்துறையில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் தமிழகத்தை தேடி வருகிறார்கள் என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது, எதார்த்தத்தில் இருந்து ஆளுனர் உரை எந்த அளவுக்கு விலகிச் சென்றிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆளுனர் உரையில் வரவேற்கும்படியாக உள்ள ஒரே அறிவிப்பு சென்னையில் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் புதிய வழித்தடங்களில் செயல்படுத்தப்படும் என்பது தான். மோனோரயில் திட்டத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வந்த தமிழக அரசு, பெருநகர தொடர்வண்டித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கொண்டிருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விசயமாகும். இதைத் தவிர, ஆளுனர் உரையின் 43 பக்கங்களை திரும்பத் திரும்ப புரட்டிப் பார்த்தாலும் பாராட்டும் வகையில் எந்த ஓர் அறிவிப்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
 சுருக்கமாக கூற வேண்டுமானால், அரசின் சாதனைகளை விளம்பரப்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான கோடிகளை தமிழக அரசு வாரி இறைக்கிறது..... இம்முறை ஆளுனர்  உரை  மூலம் செய்யாத சாதனைகளுக்கு செலவில்லாமல் விளம்பரம் தேட அரசு முயன்றிருக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்

Tuesday, January 28, 2014

தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ்



 


தர்மபுரி பாமக மகளிர் அணி மாநாட்டில் ராமதாஸ்,   ‘’தமிழ்நாட்டின் இரண்டு இன்று முக்கிய பிரச்சனையாக உள்ளது. ஒன்று மது என்ற அரக்கன் திராவிட கட்சிகளான திமுக, அதிமுக நாட்டை குடிக்க வைத்தே பெண்களின் தாலியை அறுத்து வருகின்றது. அதை ஒழிக்க வேண்டும்.
இரண்டாவது தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு என்பது கிடையாது. இந்த இரண்டும் கிடைக்க பாமக ஆட்சி அமையவேண்டும்.
அதேபோல கொள்கைகளை மறந்து பணத்தை கொடுத்து ஓட்டு வாங்க திட்டமிட்டுள்ளனர் அதை முறியடிப்போம். இந்த குழந்தைகள் ஓட்டு இல்லை ஆனால் இவர்கள் ஓட்டு விற்பனை இல்லை என்று விளம்பர படுத்துகின்றனர். இந்த கொள்ளை நமது மக்களிடம் வரவேண்டும்’’ என்றார்.

தே.மு.தி.க., பா.ம.க. உறுதியாக கூட்டணிக்கு வரும் என்று நம்புகிறோம்; பொன்.ராதாகிருஷ்ணன்



தே.மு.தி.க., பா.ம.க. உடன் பா.ஜனதா கட்சி நடத்தி வரும் கூட்டணி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அக்கட்சிகள் உறுதியாக கூட்டணிக்கு வரும் என்றும் நம்புவதாகவும் பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை கமலாலயத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
பா.ஜனதா கட்சி பிற கட்சிகளுடன் நடத்தி வரும் கூட்டணி பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னை வண்டலூரில் வரும் 8ந் தேதி நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள். இதில், வெங்கையாநாயுடு எம்.பி., தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– தே.மு.தி.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது?.

பதில்:– 2 கட்சிகளுடனான கூட்டணி பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உறுதியாக கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்புகிறோம்.
கேள்வி:– தி.மு.க. தலைமை மீது மு.க.அழகிரி முறைகேடு புகார் கூறியுள்ளாரே?.

பதில்:– இதில் கவலைப்பட வேண்டியது கட்சியின் தலைவர் கலைஞர்தான்.

கேள்வி:– பிப்ரவரி 8ந் தேதி பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு முன்பாக கூட்டணி இறுதி செய்யப்பட்டால், அக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதா?.

பதில்:– நிச்சயம் வாய்ப்பு இல்லை. வேட்பாளர்களை கட்சி தலைமைதான் முடிவெடுத்து அறிவிக்கும்.

கேள்வி:– பா.ஜ.க. மகளிரணி சார்பில் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்துகிறீர்களே. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா?.

பதில்:– படிப்படியாக மதுவில் இருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Sunday, January 26, 2014

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கட்டாய கல்வியை இலவசமாக தருவோம்: ராமதாஸ்



மதுவை ஒழித்து மகளிரை காக்க பூரண மதுவிலக்கு வேண்டியும், பெண்ணுரிமை மற்றும் பாதுகாப்பு கோரியும், ஓசூர் சட்டமன்ற தொகுதி பா.ம.க. மகளிர் அணி சார்பில், அரசியல் எழுச்சி மாநாடு நேற்று நடைபெற்றது.
ஓசூர்–பெங்களூர் சாலையில் உள்ள கார்சன் ஓட்டல் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, பேராசிரியை லட்சுமி பழனிசாமி தலைமை தாங்கினார். புஷ்பா உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சி நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியபோது,  ’’அ.தி. மு. க. ஆட்சியில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து விட்டன. கடந்த 3 வருடங்களில் தமிழ்நாட்டில் அதிக அளவில் குற்றங்கள், கற்பழிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன. 8, 10 மற்றும் 12 வயதிற்குட்பட்ட 873 சிறுமியர் கடத்தி செல்லப்பட்டு கற்பழிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் கடந்த ஆண்டு ஓடும் பஸ்சில் மாணவி ஒருவர் 6 பேர் அடங்கிய கும்பலால் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்த மாநில போலீஸ் தீவிர நடவடிக்கை மேற்கொண்டதால், குற்றவாளி களுக்கு தண்டனை கிடைத்துள்ளது.
ஆனால், நமது மாநிலத்தில் அதே ஆண்டு டிசம்பர் மாதம், தூத்துக்குடி மாவட்டம் தாத்தாங்குளம் என்ற ஊரைச் சேர்ந்த புனிதா என்ற 12 வயது சிறுமி, குடிகார கும்பலால் கற்பழிக்கப்பட்டு கொலையானார். ஆனால், இச்சம்பவத்தில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் மக்களின் வருமானம் உயரவில்லை, ஆனால் அரிசி, பருப்பு..உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் தாறுமாறாக உயர்ந்து விட்டன.
குடியால் குடும்பங்கள் சீர்குலைந்து பல லட்சம் பெண்களின் வாழ்க்கை நரகமாகி விட்டது. குடியால்தான், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் இளம் விதவைகள் உருவாகி உள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தரமான, கட்டாய கல்வியை இலவசமாக தருவோம். தரமான கல்வி, தரமான மருத்துவம், விவசாயத்திற்கான அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்குவதை கொள்கையாக கொண்டுள்ள ஒரே கட்சி, உயர்ந்த லட்சியங்களுக்காக பாடுபடும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சிதான்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில், எங்களுக்கும் ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்.


கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாநில தலைவர் ஜி.கே. மணிக்கு ஆதரவு தந்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யுங்கள்’’என்று தெரிவித்தார்.

Saturday, January 25, 2014

யார் ஏளனம் செய்தாலும், சிண்டு முடிய முயன்றாலும் கவலையில்லை : ராமதாஸ்



பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கையில்,  ‘’அனைத்து சமுதாய பேரியக்கத்தின் முதல் கூட்டம் கடந்த 18.08.2012 அன்று சென்னையில் நடைபெற்றது. அதன்பின்னர் 02.12.2012 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டமும், தொடர்ந்து 32 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டங்களும் நடைபெற்றன.  இதில் பேசிய சில சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியலில் போட்டியிட வேண்டும் என்று கூறிய போது, நான், அனைத்து சமுதாய பேரியக்கம் அரசியல் இயக்கமல்ல... இது ஒரு சமுதாய இயக்கம் என்று விளக்கமளித்து இருக்கிறேன்.
அனைத்து சமுதாய பேரியக்கத்தில் அங்கம் வகிக்கும் சில தலைவர்கள் ஏற்கனவே அரசியல் கட்சிகளை நடத்தி வருகின்றனர். அந்த கட்சிகளை ஒருங்கிணைத்து பா.ம.க. தலைமையில் ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதன்படி தான் சமூக ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டது.
அந்த கூட்டணி சார்பில் போட்டியிடும் பா.ம.க. முதல் வேட்பாளர் பட்டியல் 21.10.2014 அன்று வெளியிடப் பட்டது. இக்கூட்டணியில் இடம்பெறும் மற்ற கட்சிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று நான் தெரிவித்திருந்தேன்.  அதன்பிறகு, 20.01.2014 அன்று சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாய பேரியக்கத்தின் கூட்டத்திலும், தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, அதற்கு முந்தைய கூட்டங்களில் தெரிவித்த அதே கருத்தை நான் மீண்டும் கூறினேன்.


ஆனால், தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற நிலைப்பாட்டை அனைத்து சமுதாய பேரியக்கம் திடீரென எடுத்தது போன்று செய்தி வெளியிடுவது சரியல்ல.
அனைத்து சமுதாய பேரியக்கத்திற்கும், சமூக ஜனநாயக கூட்டணிக்கு வித்தியாசம் தெரியாமல் சில ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சமூக நீதி, சமூக ஒருங்கிணைப்பு ஆகியவை தான் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் நோக்கங்கள் ஆகும். யார் ஏளனம் செய்தாலும், சிண்டு முடிய முயன்றாலும், உள்நோக்கம் கற்பித்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும் வலிமையுடனும், உத்வேகத்துடனும் அனைத்து சமுதாய பேரியக்கத்தின் லட்சியப்பயணம் தொடரும்’’ என்று கூறியுள்ளார்

Friday, January 24, 2014

இனிவரும் தேர்தல்களில் ஓட்டுக்காக மக்கள் பணம் வாங்கக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்



இனிவரும் தேர்தல்களில் ஓட்டுக்காக மக்கள் பணம் வாங்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;–
இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளில் குடியுரிமைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானது வாக்குரிமை ஆகும். நம்மை ஆட்சி செய்யும் நல்ல அரசை தேர்வு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள விலை மதிப்பற்ற அந்த உரிமையை பணத்திற்காக விற்பது நமது எதிர்காலத்தையும், குழந்தைகளையும் விற்பதற்கு சமமாகும்.வாக்களிக்க பணம் வாங்குவது தான் ஊழலின் ஊற்றுக்கண்ஆகும். வாக்குக்காக பணம் கொடுக்கும் அரசியல் கட்சிகள் கொடுத்த பணத்தை ஒன்றுக்கு பத்தாக எடுக்கத் துடிக்கும்போது தான் ஊழல் தொடங்குகிறது. எனவே ஊழலை ஒழிக்க வேண்டும் என விரும்புவோர் ஓட்டுக்கு பணம் பெறுவதை நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஏழை மக்களில் 78 விழுக்காட்டினரிடம் ஓட்டு விலைக்கு வாங்கப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. திருமங்கலம் இடைத்தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ரூ.5,000 பணம் செய்தித்தாளில் வைத்து வழங்கப்பட்ட உண்மை அமெரிக்கா வரை பரவி விக்கிலீக்சில் வெளியாகி உலகம் முழுவதும் நமக்கு அவப்பெயரை பெற்றுத்தந்தது. இவ்வளவுக்குப் பிறகும் ஓட்டுக்கு பணம் தருவதை தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் நிறுத்துவதாக தெரியவில்லை. ஓட்டுக்கு பணம் தருவதும், பெறுவதும் அரசியல் புற்று நோயாக பரவி வருகிறது.
ஓட்டுக்கு பணம் தரப்படுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சில நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், எந்த பயனும் ஏற்படவில்லை. இந்த நிலையை மாற்ற மக்களால் மட்டுமே முடியும். இதற்காக, வரும் மக்களவைத் தேர்தலிலும், இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ஓட்டுக்காக ஒரு ரூபாய் கூட வாங்கக்கூடாது என்று தேசிய வாக்காளர் தினத்தில் அனைத்து வாக்காளர்களும் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல: கையெழுத்து இயக்கம்

எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல: கையெழுத்து இயக்கம்


தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு சென்னையில் 'எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல' என்ற கையெழுத்து இயக்கம் சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

Sunday, January 19, 2014

வாக்குகள் விற்பனைக்கு அல்ல; விலை பேச வர வேண்டாம் என பதாகையில் எழுதி ஓட்டி வைக்க வேண்டும்: ராமதாஸ்

 

சிதம்பரம் வடக்குமெயின் ரோடு பைசல் மஹாலில் சிதம்பரம் நாடாளுமன்ற (தனி) தொகுதி சமூக சனநாயக கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கி.கோபாலகிருஷ்ணன் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்புரையாற்றினார். அவர் பேசியபோது, ’’பாமக, வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த நான் எந்த சமுதாயத்தையும் எதிரியாக பார்க்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சனைகள் ஏற்பட்டால் அனைவரும் அமைதி காத்து அறிவை பயன்படுத்தி பாமக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
தேர்தல் வர இன்னும் 3 மாதங்களே உள்ளன. அதற்குள் நம்மை சிறைக்கு அனுப்பினாலும் அனுப்புவார்கள். இரண்டரை கோடி வன்னியர்கள் எனது பேச்சை கேட்டு நடந்தால் நம் சமூக பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக பாடுபடுவேன். ஜனவரி 20-ம் தேதி சென்னையில் அனைத்து சாதி தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன். இதை சில ஊடகங்கள் கேலி செய்கிறது. வன்னியர் சமுதாய மக்களுடன், அனைத்து சமுதாய மக்களிடம் வாக்கு கேட்கிறேன்.
47 ஆண்டுகள் ஆண்ட திராவிட கட்சிகள் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் 10வது இடத்தில் பின்னோக்கி உள்ளது. இந்தியாவில் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடி கடன் சுமை உள்ள 2-வது மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நபர் மீதும் ரூ.25 ஆயிரம் கடன் உள்ளது. தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகள் 13 லட்சமாக இருந்த அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை 10 லட்சமாக குறைத்து, 3 லட்சம் ஊழியர்களை வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
வேலைவாய்ப்பு அலுவலங்களில் 1 கோடி பேர் பதிவு செய்துள்ளனர். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கடலூர், சிதம்பரம் தொகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வன்னியர்கள் தங்களது வீடுகள் முன்பு 'எங்கள் வீட்டில் 4 வாக்குகள் உள்ளது. வாக்குகள் விற்பனைக்கு அல்ல. யாரும் விலை பேச எங்கள் வீட்டிற்கு வர வேண்டாம்' என அனைவருக்கும் தெரியும்படி பதாகையில் எழுதி ஓட்டி வைக்க வேண்டும்’’ என ச.ராமதாஸ் தெரிவித்தார்.

Friday, January 17, 2014

தமிழகத்தில் இடஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்படுமோ?: ராமதாஸ் அச்சம்

சென்னை: இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் தொட்டிலாக போற்றப்படும் தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக நடைபெறும் விதி மீறல்களை பார்க்கும்போது இட ஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இடஒதுக்கீடு மற்றும் சமூக நீதியின் தொட்டிலாக போற்றப்படும் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக நடைபெறும் விதி மீறல்களை பார்க்கும்போது இட ஒதுக்கீடு குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. பல துறைகளில் இட ஒதுக்கீட்டு விதிகள் சிறிதும் மதிக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் தனித்தனியாக தகுதி மதிப் பெண்களை நிர்ணயிக்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இந்த நியாயமான கோரிக்கையை கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்து வருகிறது.
முன்னேறிய பிரிவினருக்கும், பின் தங்கிய வகுப்பினருக்கும் ஒரே மாதிரியான தகுதி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்படுவதால் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பலரின் ஆசிரியர் பணி வாய்ப்பு பறிக்கப்படுகிறது.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலக கட்டிடத்தை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டுள்ள பல்துறை உயர்சிறப்பு மருத்து வமனைக்கு மருத்துவ பணியாளர்களை தேர்வு செய்வதிலும் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருக்கிறது. இது சமூக நீதிக் கொள்கைக்கு செய்யப்படும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.
இவற்றையெல்லாம் தாண்டி இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ள தமிழக பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் 200 புள்ளி சுழற்சி முறை இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு விதிமீறல் அதிகரித்திருக்கிறது. பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு துறையையும் தனித்தனி அலகாக கருதி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது.
ஆனால், யாருக்கும் கட்டுப்படாத அமைப்புகளாக தங்களை கருதிக் கொள்ளும் பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறை இட ஒதுக்கீட்டு விதிகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு தங்களின் விருப்பம் போல பணியாளர்களை நியமித்துக் கொள்கின்றன. பல பல்கலைக்கழகங்கள் சுழற்சி முறை இட ஒதுக்கீட்டுக்காக பராமரிக்க வேண்டிய ரோஸ்டர் புத்தகத்தை பராமரிப்பதில்லை என்பதிலிருந்தே இட ஒதுக்கீட்டுக்கு எந்த அளவுக்கு மரியாதை அளிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இட ஒதுக்கீட்டு விதிகளை அப்பட்டமாக மீறுவதில் தமிழகத்தில் உள்ள எந்த பல்கலைக்கழகமும் விதி விலக்கல்ல. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டிருப்பதே இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டிருப்பதற்கு ஆதாரமாகும்.
இடஒதுக்கீட்டு விதிமீறல் காரணமாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கானோரின் பேராசிரியர் பணி வாய்ப்புகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். இந்த அநீதி உடனடியாக களையப்படாவிட்டால், அது தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் துடைக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதை அரசு உணர வேண்டும்.
எனவே, தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் நியமனங்களில் இட ஒதுக்கீட்டு விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்பட்டனவா? என்பது குறித்து தமிழக அரசு தணிக்கை செய்ய வேண்டும்.

இட ஒதுக்கீட்டு விதிகள் மீறப்பட்டதால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பணியிடங்களை பின்னடைவு பணியிடங்களாக அறிவித்து, அவற்றை அந்தந்த இட ஒதுக்கீட்டு பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Sunday, January 12, 2014

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசின் மிலாதுன் நபி வாழ்த்துச் செய்தி!



பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளான மிலாதுன் நபி திருநாளைக் கொண்டாடும்  உலகெங்கும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  

   அன்பு, அமைதி,சமயநல்லிணக்கம் ஆகியவற்றை உலகிற்கு போதிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் அண்ணல் நபிகள் நாயகம். உலகம் முழுவதும் சகோதரத்துவம் தழைக்கவேண்டும் என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தவர். உண்மையின் வடிவமாக திகழ்ந்தவர்.சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதற்கு தலைசிறந்த உதாரணமாகத் திகழ்ந்தவர் அண்ணல் நபிகள். எத்தகைய தத்துவங்களையெல்லாம் போதித்தாரோ, அதன்படியே அவர் வாழ்ந்து காட்டினார். தொல்லை கொடுப்பவர்களையும், துன்பம் விளைவிப்பவர்களையும் மன்னிக்கும் பண்பு மனிதகுலத்திற்கு வேண்டும்-; எத்தகைய இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவற்றை அன்பால் எதிர்கொண்டு, எதிரிகளையும் அரவணைக்கவேண்டும் என்ற தத்துவத்தை போதித்த அவர், அதை தமது வாழ்விலும் கடைபிடித்தார். 
    அவரது பிறந்தநாளை மீலாதுன் நபியாக கொண்டாடும் நாம், அவரது போதனைகளை உண்மையாக பின்பற்றுவதே அவருக்கு செலுத்தும் மரியாதையாக இருக்கும். எனவே,அவர் போதித்த அன்பு, அமைதி,சமாதானம், சமய நல்லிணக்கம், தவறு செய்தவர்களை மன்னித்து ஏற்கும் மனப்பான்மை ஆகியவற்றை கடைபிடிக்க அவரது பிறந்தநாளான இந்த நன்னாளில் உறுதி ஏற்போம். இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழக விஞ்ஞானிகளுக்கு விழா எடுத்து பாராட்டி விருது வழங்குக: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

மயில்சாமி அண்ணாதுரை, சுப்பையா அருணன், என்.வளர்மதி, வி. நாராயணன், கே.சிவன் ஆகியோரே தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள விஞ்ஞானிகள் ஆவர். மயில்சாமி அண்ணாதுரை தான் சந்திரயான் விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தின் இயக்குனராக பணியாற்றியவர். நிலவில் நீர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய முடியாமல் உலகமே திணறிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு தண்ணீர் இருப்பதை அண்ணாதுரை அனுப்பிய சந்திரயான் தான் ஆதாரங்களுடன் கண்டு பிடித்து உலகிற்கு தெரிவித்தது. அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா அனுப்பவுள்ள சந்திரயான்-2 விண்கலத்திற்கான திட்ட இயக்குனராகவும் மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டு வருகிறார்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவரான சுப்பையா அருணன் தான் பெருமைக்குரிய மங்கள்யான் திட்டத்தை வழி நடத்திய இயக்குனர் ஆவார். செவ்வாய் கிரகம் சம்பந்தப்பட்ட புதிருக்கு விடை காண்பதற்காக அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் செவ்வாய் கிரகத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, சீனா போன்ற முன்னேறிய நாடுகளே மங்கள்யான் விண்கலம் கண்டுபிடிக்கவுள்ள உண்மைகளை அறிந்து கொள்வதற்காக காத்துக்கிடக்கின்றன என்பதிலிருந்தே இத்திட்டத்தின் மகத்துவத்தை உணர முடியும்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த சாதனைப் பெண்ணான என்.வளர்மதி விண்வெளி ஆராய்ச்சியில் மற்றுமொரு மைல்கல்லாக கருதப்படும் ரிசாட்-1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியான அரியலூரைச் சேர்ந்த இவர் கடுமையாக உழைத்து இந்தியாவின் தலைசிறந்த பெண் விஞ்ஞானிகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். இவர் வடிவமைத்த ரிசாட்-1 உளவு செயற்கைக் கோள் விவசாயத்திற்கும், இயற்கை வளங்களை பாதுகாக்கவும், இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கணிக்கவும் பேருதவி செய்கிறது. வளர்மதியின் ஆராய்ச்சி தான் விண்வெளித் துறையில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பாவுக்கு இணையாக இந்தியாவை நிலைநிறுத்தியது என்பது நமக்கு கூடுதல் பெருமையாகும்.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் தான் அமெரிக்காவை மிரள வைத்த கிரையோஜெனிக் எந்திரத்தை முழுக்க, முழுக்க இந்தியாவிலேயே தயாரித்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆவார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து கிரையோஜெனிக் எந்திரத்தின் தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா மறுத்துவிட்ட நிலையில் 20 ஆண்டு உழைப்புக்குப் பிறகு நாராயணன் தலைமையிலான விஞ்ஞானிகள் தமிழகத்தில் உள்ள மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் எந்திரத்தை தயாரித்துள்ளனர். இந்த கிரையோஜெனிக் எந்திரத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி டி-5 ஏவுகலத்தின் திட்ட இயக்குனரான கே.சிவனும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் ஆவார்.
உலகமே வியக்கும் அளவுக்கு தமிழர்கள் சாதனை படைத்திருப்பது நமக்கு பெருமை அளிக்கும் போதிலும், இந்த சாதனைத் தமிழர்களுக்கு தமிழக அரசு இன்று வரை உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்த சாதனைத் தமிழர்கள் அனைவரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்கள் என்பது இன்னுமொரு பெருமையாகும். இவர்களின் சாதனைகளை முறையாக அங்கீகரிப்பதன் மூலம் தான் தமிழ்வழிக் கல்வியின் வலிமை மற்றும் பெருமைகளை இன்றைய இளைய தலைமுறைக்கு உணர்த்த முடியும்.
எனவே, விண்வெளி ஆராய்ச்சியில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் அனைவருக்கும் தமிழக அரசு உடனடியாக விழா எடுத்து பாராட்டுவதுடன், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருதுகளை வழங்கி கவுரவிக்க வேண்டும். அது மட்டுமின்றி, அரசு அமைப்புகளில் பணியாற்றுபவர்களுக்கு ‘பத்ம' விருதுகளை வழங்க முடியாது என மத்திய அரசு விதிகளில் கூறப்பட்டிருப்பதால் இவர்களுக்கு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற விருதுகள் வழங்கப்படவில்லை. டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருது வழங்க விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதைப் போல, இப்போதும் திருத்தம் செய்து தமிழக விஞ்ஞானிகளுக்கு ‘பத்ம' விருதுகளை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Saturday, January 11, 2014

அதிமுக ஆட்சியில் மக்களை ஆடு மேய்க்க வைத்துள்ளனர்: ராமதாஸ்



திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் தொகுதி அளவிலான பாமக மகளிர் மாநாடு நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில்,
பெண்களுக்கு சம வாய்ப்பு, சம அந்தஸ்து கிடைக்க பாமக போராடி வருகிறது. ஆண் படித்தால் அவருக்கு மட்டும் பயனளிக்கும். பெண் கல்வி கற்றால் வீடும், சமுதாயம் வளம்பெறும். அன்பையும், பாசத்தையும் வாரி கொடுப்பவர்கள் பெண்கள்தான். அவர்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாமல் தூங்கிகொண்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் மக்களை ஆடு மேய்க்க வைத்துள்ளனர். நாங்கள் என்ன இலவசமாக மிக்சி, கிரைண்டர் கேட்டோமா. நல்ல கல்வியும், வேலைவாய்ப்பைத்தான் கேட்கிறோம். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை நடக்காத நாளில்லை.
கடந்த ஓராண்டில் மட்டும் பெண்களுக்கு எதிராக 7 ஆயிரம் குற்றங்களும், 55 ஆயிரம் கொலை, கொள்ளை குற்ற வழக்குகுள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்களும், இளைஞர்களும் நினைத்தால் நிச்சயம் மாற்றம் வரும் என்றார்

Thursday, January 9, 2014

பொங்கல் திருநாளையொட்டி 4 நாட்களுக்கு மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும்! ராமதாஸ் வலியுறுத்தல்!



பொங்கல் திருநாளையொட்டி 4 நாட்களுக்கு மதுக்கடைகளை இழுத்து மூடவேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக மகளிர் சங்க மாநாடு செஞ்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ராமதாஸ்,
தமிழகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் புறக்கணிக்க வேண்டும். மின்விசிறி போன்றவைகளை கேட்காமலேயே வழங்கும் திராவிட கட்சிகள், தரமான கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக வழங்காதது ஏன்?
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு காரணம் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளே காரணம். இந்த அரசு கொடுக்கும் ஒரு கிலோ அரிசி, அரை கிலோ சக்கரை வாங்க முடியாதா மக்களால். அரசு கொடுக்கும் அந்த நூறு ரூபாய் எங்க போகும். டாஸ்மாக் கடைக்குத்தான் போகும்.
நான் என்ன சொல்கிறேன். போகி, பெரும்பொங்கல், மாட்டு பொங்கல், காணும்பொங்கல் ஆகிய 4 நாட்களும் மதுக்கடையை இழுத்து மூட வேண்டும் என்று சொல்கிறோம் என்றார்.

Wednesday, January 8, 2014

தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்

சென்னை: தம் மீதான கொலை வழக்கில் எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருப்பதன் மூலம், கடந்த 7 ஆண்டுகளாக சுமந்து வந்த முள்மூட்டையை இறக்கி வைத்துள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று திண்டிவனத்தில் நிகழ்ந்த ஒருகொலை தொடர்பான வழக்கில் செங்கல்பட்டு முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் நடுவண் புலனாய்வுப் பிரிவு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.நானும், எனது மகன் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி, மருமகன் பரசுராமன், பெயரன் மருத்துவர் பிரித்தீவன் ஆகியோரும் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி இந்த வழக்கிலிருந்து எங்களின் பெயரை நீக்குவதாக நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது.செய்யாத தவறுக்காக பெரும் பழியை நாங்கள் சுமந்து வந்த நிலையில், இந்த கொலை வழக்கில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்திருப்பதன் மூலம் கடந்த 7 ஆண்டுகளாக சுமந்து வந்த முள்மூட்டையை இறக்கி வைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.திண்டிவனத்தில் நடந்த கொலையில் எனக்கோ அல்லது எனது கட்சியினருக்கோ எந்த தொடர்பும் இல்லை. புனிதமான மருத்துவ தொழில் செய்பவனாக வாழ்க்கையைத் தொடங்கிய நான், யாருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை.ஆனால், என் மீது பழி சுமத்தினால்தான் அரசியலில் வளர முடியும்; மேலிடத்தைக் கவர முடியும் என்ற எண்ணத்தில் அப்போது அமைச்சராக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.சண்முகம் திட்டமிட்டு என் மீதும், எனது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வைத்தார். இதை விசாரித்த காவல்துறை எனக்கும், அன்புமணி உள்ளிட்டோருக்கும் இதில் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, எங்களின் பெயர்களை வழக்கில் இருந்து நீக்கினர்.அதன்பிறகும் அரசியல் உள்நோக்கத்துடனும், அ.தி.மு.க. மேலிடத்தின் தூண்டுதலாலும் இந்த வழக்கை சி.பி.ஐ. மூலம் மறு விசாரணை செய்ய வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சி.வி.சண்முகம் வழக்குத் தொடர்ந்தார். அதன்படி நடத்தப்பட்ட சி.பி.ஐ. விசாரணையின் முடிவில் தான் நானும் மற்றவர்களும் இவ்வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறோம். இதன்மூலம் தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும் என்பது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.திண்டிவனம் கொலை தொடர்பாக என் மீது பழி சுமத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான 7 ஆண்டுகளில் நான் அடைந்த வேதனையையும், அனுபவித்த மன உளைச்சலையும் வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்களும் பா.ம.க.வை ஒழித்தே தீர வேண்டும் என்ற ஒற்றை வஞ்சக எண்ணத்துடன் களமிறங்கி எனக்கு எதிரான பொய்செய்திகளை வெளியிட்டன.திண்டிவனம் கொலை தொடர்பாக என் மீது பழி சுமத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரையிலான 7 ஆண்டுகளில் நான் அடைந்த வேதனையையும், அனுபவித்த மன உளைச்சலையும் வார்த்தைகளில் வரையறுக்க முடியாது. ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்க வேண்டிய ஊடகங்களும் பா.ம.க.வை ஒழித்தே தீர வேண்டும் என்ற ஒற்றை வஞ்சக எண்ணத்துடன் களமிறங்கி எனக்கு எதிரான பொய்செய்திகளை வெளியிட்டன.இப்போது இந்த வழக்கிலிருந்து நானும், அன்புமணி உள்ளிட்டோரும் நீக்கப்பட்டு விட்டோம் என்ற செய்தியை, 9 நாட்களாகிவிட்ட பிறகும் ஊடகங்கள் வெளியிடவில்லை.அரசியல் ஆதாயம் தேடுவதற்காக எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் எதிராக அவதூறுகளை பரப்பியதுடன், பொய் குற்றச்சாற்றுகளையும் சுமத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது வெகுவிரைவில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
 

Saturday, January 4, 2014

வீட்டின் முன்பகுதியில் ‘எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்தை எழுதி தொங்கவிடுங்கள்: ராமதாஸ் பேச்சு



திண்டிவனம் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் சங்க அரசியல் எழுச்சி மாநாடு திண்டிவனம் வ.உ.சி. திடலில் சனிக்கிழமை மாலை மாநில இளம்பெண்கள் அணி துணை செயலாளர் பொன்.மகேஸ்வரி தலைமையில் நடந்தது.
மாநாட்டில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:–
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இளம்பெண்கள் அதிக விதவைகளாக உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் மதுதான். மதுவை குடிக்க சொல்கிற கட்சிகளை அப்புறப்படுத்தும் காலம் வந்தாச்சு. இதையெல்லாம் மாற்றும் முழுபொறுப்பு பெண்களிடம் உள்ளது.
தேர்தல் நேரத்தில் கட்சிக்காரர்கள் கொடுக்கிற பணத்தை வாங்கிவிட்டு கவுரவத்தையோ, நட்பையோ விற்றுவிடாதீர்கள். ஒவ்வொரு வீட்டின் முன்பகுதியிலும், ‘எனது ஓட்டு விற்பனைக்கு அல்ல’ என்ற வாசகத்தையும், மானம், மரியாதையுடன் வாழ்கிறோம் என்ற வாசகத்தையும் பலகையில் எழுதி தொங்கவிடுங்கள்.
தமிழ்நாட்டில் ஏழ்மையை ஒழிப்பதற்கு பதிலாக மதுவை கொடுத்து ஏழையை ஒழிக்கிறார்கள். மதுவை ஒழிக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக பா.ம.க. போராடி வருகிறது. கடந்த காலங்களில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் மது குடித்தார்கள். ஆனால் தற்போது பள்ளியில் படிக்கின்ற 13 வயது மாணவன் மது குடிக்கிறான்.
ஒரு முறை பா.ம.க.விற்கு வாக்களித்து கோட்டையில் உட்கார வையுங்கள். முதல்–அமைச்சரானதும், மதுவை ஒழிப்பது தான் முதல் கையெழுத்தாக போடுவோம். பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும். இதன் மூலம் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் குறையும். பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மாணவ, மாணவிகளுக்கு கட்டாய கல்வி, கட்டணமில்லா கல்வி, சுமையில்லா கல்வியை இலவசமாக கொடுப்போம். சிறந்த மருத்துவ சிகிச்சை, விவசாயிகளுக்கு விதை, மருந்து, உரம் உள்ளிட்டவைகளை இலவசமாக கொடுப்போம். இதன் மூலம் தமிழ்நாடு வளர்ச்சியடையும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

Friday, January 3, 2014

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மக்களை கொள்ளையடிக்கும் செயல்! ராமதாஸ் கண்டனம்!

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 97 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 61 பைசாவும் உயர்த்தப்பட்டிருக்கின்றன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 75.68 ஆகவும், டீசல் விலை ரூ. 57.93 ஆகவும் உயர்ந்துள்ளது. ஏழை- நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வு கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து ராமதாஸ்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் தான் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதாக கூறப்படுவதை ஏற்க முடியாது.  உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 108 டாலரிலிருந்து 107 ஆக டாலராக குறைந்து விட்டதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களோ கச்சா எண்ணெய் விலை 115 டாலரிலிருந்து 116 டாலராக உயர்ந்து விட்டதாக ஓர் அப்பட்டமான பொய்யைக் கூறி பெட்ரோல் -- டீசல் விலையை உயர்த்தியிருப்பது பொது மக்களை முட்டாள்களாக்கும் செயல் ஆகும். பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்குவதென மத்திய அரசு முடிவெடுத்த போதே, இதுபோன்ற மக்கள் விரோத செயல்கள் அடிக்கடி அரங்கேற்றப் படும் என்று நான் எச்சரித்திருந்தேன். அதேபோல் தான் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மத்தியில் கடந்த 2009-ஆம் ஆண்டு மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியேற்ற போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.44.24 ஆகவும், டீசலின் விலை ரூ.32.82 ஆகவும் இருந்தது. அதன்பின் கடந்த ஐந்தாண்டுகளில் பெட்ரோல் விலை 72 விழுக்காடும், டீசல் விலை 76 விழுக்காடும் அதிகரித்திருக்கின்றன. கடந்த ஐந்தாண்டுகளில் மக்களின் வருவாய் 25% கூட உயராத நிலையில், பெட்ரோல், டீசல் விலை இந்த அளவு அதிகரித்திருப்பதையும், அதனால் மற்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்திருப்பதையும் மக்களால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இரு முறை சமையல் எரிவாயு விலை உயர்வு, இரு முறை பெட்ரோல் விலை உயர்வு, மூன்று முறை டீசல் விலை உயர்வு என மொத்தம் 7 முறை பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மிகக் கொடூரமான தாக்குதலை மத்திய அரசு நடத்தியிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வரும் நிலையில் மீண்டும், மீண்டும் பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்துவது  அப்பாவி மக்களைக் கொள்ளையடிக்கும் செயலாகும்.
மக்களின் துயரங்களை உணர்ந்து, அவர்களின் சுமைகளை குறைக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், ஐந்தாண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் துயரங்களுக்கெல்லாம் பதிலடி தரும் வகையில், வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய ஆட்சியாளர்களுக்கு பொது மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி என்று கூறியுள்ளார்

Thursday, January 2, 2014

அரசு மருத்துவர்கள் நியமனத்தில் சமூகநீதிக்கு முடிவு கட்ட சதி:


பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’’சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் அமைக்கப்பட்டு வரும் அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவப் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசின் மருத்துவ பணிகள் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
 
இயக்குனர், பதிவாளர்கள் உட்பட 84 பணியிடங்களுக்கான நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படாது என்று தமிழக அரசு வெளிப்படையாக அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் அரசு வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டியது கட்டாயமாகும். ஒரேயொரு பணியிடத்தை நிரப்புவதாக இருந்தாலும் சுழற்சி முறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அவ்வாறு இருக்கும்போது அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி மட்டுமின்றி அச்சமும் அளிக்கிறது.
சமூகநீதியின் பிறப்பிடம் என போற்றப்படும் தமிழ்நாட்டில் அரசு அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கான மருத்துவர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என துணிச்சலுடன் அறிவிக்கும் ஆட்சியாளர்கள், எதிர்காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு எதிலுமே இட ஒதுக்கீடு இல்லை என அறிவிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்பது தான் அச்சத்திற்கு காரணமாகும்.
அதுமட்டுமின்றி, தலைமைச்செயலக அதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு தேர்வு செய்யப்படும் மருத்து வர்களுக்கு மற்ற அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை விட 3 மடங்கு வரை அதிக ஊதியம் வழங்கப்படும்; இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தாலும் பணியில் சேரலாம்; தமிழக மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்யாவிட்டால் கூட, வேலையில் சேர்ந்த பிறகு பதிவு செய்து கொள்ளலாம் என ஏராளமான சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவதால் தான் இவர்களுக்கு இவ்வளவு சலுகைகள் வழங்கப்படுவதாக அரசுத் தரப்பில் காரணம் கூறப்படலாம். ஆனால், அது ஏற்கக்கூடிய காரணமல்ல.
கடந்த 2001&ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்றதும், நிதி நெருக்கடியை காரணம் காட்டி பணி நியமனங்களுக்கு தடை விதித்தார். ஆசிரியர்கள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அப்போது ஒப்பந்த அடிப்படையில் பணி என்பதைக் காட்டி இவ்வளவு சலுகைகள் வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் நியமிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி, ஒப்பந்தப் பணி என்பதைக் காரணம் காட்டி மற்ற ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. எனவே, ஒப்பந்தப் பணி என்பதைக் காரணம் காட்டி இடஒதுக்கீட்டை மறுப்பதையும், ஒரே பணியை செய்பவர்களுக்கு இரு விதமான ஊதியம் வழங்குவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த தமிழக அரசு, அடுத்தகட்டமாக இப்போது மருத்துவத் துறையில் இட ஒதுக்கீட்டை இரத்து செய்வதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு மற்றும் சமூகநீதிக்கு முடிவு கட்டுவதற்கான சதி தொடங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
அரசு மருத்துவமனைகளில் இப்போது பணியாற்றும் மருத்துவர்களை விட, புதிதாக நியமிக்கப்படும் மருத்துவர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டால், அது ஏற்கனவே பணியாற்றும் மருத்துவர்களுக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும். இதற்கெல்லாம் மேலாக, வழக்கமான மருத்துவர்கள் தேர்வு முறையை விடுத்து, 10 நாட்களுக்குள் அவசர, அவசரமாக மருத்துவர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசரத் தேவை எதுவும் இப்போது ஏற்படவில்லை.


எனவே, இட ஒதுக்கீடின்றி, மருத்துவர்களை நியமிப்பதற்கான அறிவிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற்று, வழக்கமான நடைமுறையை கடைபிடிக்க வேண்டும். இல்லாவிடில், இட ஒதுக்கீட்டை அழிப்பதற்கான தமிழக அரசின் சதித் திட்டத்தைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

மின்வெட்டால் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அ.தி.மு.க. அரசு: பாமக பொதுக்குழு

சென்னை: ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கும் முந்தைய திமுக மற்றும் தற்போதைய அதிமுக அரசுகளுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் பாமக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பாமகவின் தலைமை பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சனை, மின்வெட்டு பிரச்சனை உள்ளிட்டவைகள் தொடர்பாக 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ஈழத் தமிழர் பிரச்சனைஇலங்கையில் போர் முடிவடைந்து நான்கரை ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில், போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இன்று வரை நீதி கிடைக்க வில்லை. இலங்கை வடக்கு மாநிலத்தில் உள்ள தமிழர்கள் இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.வடக்கு மாநிலத்தில் தேர்தல் முடிந்து ஆட்சி அமைக்கப்பட்டவுடன் தமிழர்களின் துயரங்கள் அனைத்தும் பறந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால், விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டணி அரசு அதிகாரம் இல்லாமல் பெயரளவில் நடந்து கொண்டிருக்கிறது; தமிழர்களின் துயரங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை அரசு மீது இதுவரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானம் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட போதெல்லாம், இந்தியா குறுக்கிட்டு தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்தது.இனப்படுகொலைக்காக இராசபக்சேவையும், அவரது கூட்டாளிகளையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்றி தண்டிப்பதும், தமிழர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய ஐ.நா. மூலம் தனித்தமிழீழம் அமைப்பதும் தான் ஈழத்தமிழர்களுக்கு நாம் வழங்கும் நீதியாக இருக்கும். இதை செய்யத்தவறிய மத்திய அரசுக்கும், அவ்வாறு செய்யும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் தவறிய முந்தைய தி.மு.க. அரசு மற்றும் இப்போதைய அ.தி.மு.க. அரசுக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறதுமின்வெட்டுதமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கடந்த 2011&ஆம் ஆண்டு மே மாதத்தில் ஏற்ற முதலமைச்சர் ஜெயலலிதா அடுத்த 3 மாதங்களில் தமிழகத்தில் மின்வெட்டு போக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்பின்னர் 10 முறை மூன்று மாதங்கள் கழிந்துவிட்ட போதிலும் மின்வெட்டு பிரச்சினை மட்டும் தீரவேயில்லை.கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் மின்வெட்டு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழகத்தில் மின்வெட்டு போக்கப்பட்டு, 99% மின்மிகை மாநிலமாகி விட்டதாகவும், டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகம் 100% மின்மிகை மாநிலமாகிவிடும் என்றும் கூறியிருந்தார்.ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் மின்வெட்டு தலைவிரித்தாடத் தொடங்கி விட்டது. வழக்கமாக கோடைக் காலத்தில் தான் ஓரளவு மின்வெட்டு ஏற்படும். ஆனால், தற்போது மழைக் காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டிருப்பது வரலாறு காணாத ஒன்றாகும். மின்தேவை குறைவாகவும், மின்னுற்பத்தி அதிகமாகவும் இருக்கக்கூடிய இந்த காலத்திலேயே மின்வெட்டைக் கட்டுப்படுத்த தமிழக அரசால் முடியவில்லை என்றால், வேறு எந்த காலத்திலும் மின்வெட்டை சரி செய்ய முடியாது.தமிழகத்தை மின்மிகை மாநிலமாக்குவதாக கூறிவரும் ஜெயலலிதா மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தான் உண்மை. இதனால் தமிழகத்தின் மின் உற்பத்தி வெகுவாக குறைந்து கடந்த ஆட்சியில் 2 முதல் 5 மணி நேரமாக இருந்த மின்வெட்டு இப்போது 10 முதல் 14 மணி நேரமாக அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமின்றி, சுமார் 11 ஆயிரம் மெகாவாட் அளவுக்கான மின்திட்டங்கள் அறிவிப்பு நிலையிலேயே தேங்கிக் கிடக்கின்றன.மின்வெட்டை சரிசெய்யாமல் தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சியையும், பொருளாதார வளர்ச்சியை கெடுத்ததுடன், பல்லாயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பை ஏற்றடுத்தியது தான் ஜெயலலிதா அரசின் சாதனையாகும். மின்வெட்டை சரிசெய்யாமல் தமிழகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் அ.தி.மு.க. அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கடுமையாக கண்டிக்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.சட்டம் ஒழுங்கு மோசம்தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் பேட்டியளித்த ஜெயலலிதா, அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததால் பயந்துபோன கொள்ளையர் அனைவரும் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.ஆனால், இந்தியா முழுவதும் உள்ள கொள்ளையர்கள் அனைவரும் தமிழகத்திற்கு வந்துவிட்டார்களோஎன்று அஞ்சும் அளவுக்கு தமிழகத்தில் கொள்ளைகள் அதிகரித்துவிட்டன.மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத சூழல் நிலவுகிறது; அதேபோல் மக்கள் வீடுகளை பூட்டி விட்டு நிம்மதியாக வெளியில் செல்ல முடியவில்லை. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2013 வரையிலான மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் 5800 படுகொலைகளும், 55 ஆயிரத்திற்கும் அதிகமான கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றங்களும் நடந்திருப்பதாக காவல்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகள் பட்டியலில் சோனியா காந்திக்கு அடுத்து பத்தாவது இடத்தில் இருக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைவர் இந்திரா நூயி-யின் சென்னை இல்லத்தில் விலை மதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன; பாதுகாப்பு மிகுந்த சென்னை அருங்காட்சியகத்தில் மொகலாயர் கால நாணயங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் தமிழகத்தின் சட்டம்& ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.சட்டம் & ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதல்வர் ஜெயலலிதாவோ காவல்துறையை பயன்படுத்திஎதிர்க்கட்சியினரை பழிவாங்குதல், 144 தடை உத்தரவை பிறப்பித்து மக்களின் ஜனநாயக உரிமைகளை பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் தமிழகம் வாழத் தகுதியற்ற மாநிலமாகிவிடும். அமைதிப் பூங்காவாக இருந்த தமிழகத்தை அச்சக் காடாக மாற்றிவரும் ஜெயலலிதா அரசுக்கு இப்பொதுக்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,விவசாயிகள் பிரச்சனைஉழவன் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பது பழமொழி. ஆனால், உழும் உழவனுக்கே சோறு கிடைக்காது என்று சொல்லும் அளவுக்குத் தான் உழவுத் தொழில் மோசமடைந்து கொண்டு செல்கிறது. ஒருபுறம் மாறிமாறி ஏற்படும் வறட்சி மற்றும் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள், மறுபுறம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலை உயர்வு என விவசாயிகளின் துயரம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்ட நிலையில், வேளாண் விளைபொருட்களுக்கு கட்டுபடியாகும் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே உழவர்களின் துயரத்தைப் போக்க முடியும் என்றும், இதற்காக உழவர் வருவாளிணி குழுக்களை அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால், தமிழக அரசோ இத்தகைய குழுக்களை அமைக்காததுடன், விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கவும் மறுத்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஒரு டன் கரும்புக்கு கொள்முதல் விலையாக ரூ.2500 வழங்கப்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.ஆனால், ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு டன் கரும்புக்கு ரூ.2100 மட்டுமே கொள்முதல் விலையாகக் கொடுத்து விவசாயிகளை ஏமாற்றினார். இப்போது கூட ஒரு டன் கரும்புக்கு ரூ.3500 வழங்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், இதுவரை வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் பரிந்துரை விலையை ரூ.100 குறைத்து டன்னுக்கு ரூ. 2650 மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.அதேபோல் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2000 வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, வெறும் ரூ.1300 மட்டுமே வழங்குகிறது. இதனால், விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் வறுமையிலும், கடன் சுமையிலும் வாடுகின்றனர். நெல் மற்றும் கரும்புக்கு போதிய விலை கொடுக்காமல் விவசாயிகளின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிய தமிழக அரசுக்கு பா.ம.க. தலைமைப் பொதுக்குழு கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறதுமீனவர் படுகொலைகடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்க்கை கண்ணீரில் தான் கரைகிறது. நாகப்பட்டினம் முதல் இராமேஸ்வரம் வரையுள்ள மாவட்டங்களின் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றால், மீண்டும் கரை திரும்புவார்களா? என்பது நிச்சயமில்லை.அந்த அளவுக்கு சிங்களப்படையினர் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சிங்களப்படையினரால் இதுவரை 800&க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2013 ஆம் ஆண்டில் மட்டும் 600&க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்போதைய நிலையில் 267 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்; தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 86விசைப்படகுகள் இலங்கை அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இதனால், மீனவர்களின் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், அவர்களை மீட்கவோ, அவர்களின் குடும்பங்களுக்கு உதவவோ மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாறாக மீனவர்கள் பேராசைக்காரர்கள் என்று முத்திரை குத்தும் முயற்சிகளில் தான் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.மீனவர்கள் பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற அμகுமுறையை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிக்கிறது.இலங்கை சிறையில் வாடும் 267 மீனவர்களையும், பறிமுதல் செளிணியப்பட்ட 86 படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும்; வரும் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக, இலங்கை மீனவர்கள் இடையிலான பேச்சுக்களின் போது இப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறைக்குப் போன 134 நிர்வாகிகளுக்கு பாராட்டுபாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு அதிகரித்து வருவதையும், மாமல்லபுரம் மாநாட்டின் இமாலய வெற்றியையும் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு பா.ம.க. நிர்வாகிகள் மீதும், வன்னிய சமுதாயத்தின் மீதும் கடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது. மரக்காணம் கலவரத்தில் அப்பாவித் தொண்டர்கள் இருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களையும், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொண்டர்களையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு, பா.ம.க. சட்டப்பேரவைக் கட்சித் தலைவரும், வன்னியர் சங்கத் தலைவருமான ஜெ. குரு ஆகியோரையும். 8000&க்கும் மேற்பட்ட தொண்டர்களையும் அ.தி.மு.க. அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. இதற்கெல்லாம் உச்சகட்டமாக, எந்தத் தவறும் செய்யாத ஜெ.குரு உள்ளிட்ட 134 பேரை குண்டர் சட்டம் மற்றும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது.ஜெ. குரு உள்ளிட்டோர் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, அதை மத்திய உள்துறை அமைச்சகம் இரத்து செய்தது. ஆனால், அதை ஏற்காத தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது.குறிப்பாக வன்னியர் சங்கத் தலைவர் ஜெ. குரு விடுதலையாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த அரசு, அவர் மீது மொத்தம் 4 முறை குண்டர் சட்டத்தை பாய்ச்சியது. அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சைக் கூட அளிக்காமல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தது.தமிழக அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை துணிச்சலுடன் எதிர்கொண்டு நான்கரை மாதம் முதல் எட்டு மாதம் வரை கொடுஞ்சிறையை அனுபவித்து திரும்பிய ஜெ.குரு உள்ளிட்ட 134 பேரையும் இப்பொதுக்குழு பாராட்டுகிறது. இவர்களை நீதிமன்றத்தின் உதவியுடன் மீட்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததுடன், அவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிய மருத்துவர் ராமதாசு, மருத்துவர் அன்புமணி இராமதாசு ஆகியோருக்கும், களப் பணியாற்றிய சட்டப் பாதுகாப்புக் குழு வழக்கறிஞர்களுக்கும் இந்தக் கூட்டம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறதுகோமாரி நோய்தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. நாகை மாவட்டத்தில் தொடங்கிய கோமாரி நோய் சென்னை தவிர மீதமுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பரவியிருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இந்த நோயின் அறிகுறிகள் தென்பட்டன. இதை அறிந்து கோமாரி நோயைத் தடுக்க முன்கூட்டியே கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள் எதையும் அரசு நிர்வாகம் மேற்கொள்ளாததால் தமிழகம் முழுவதும் இந்த நோய் பரவி பத்தாயிரத்திற்கும் அதிகமான கால்நடைகளை பலி கொண்டிருக்கிறது. கோமாரி நோயால் உயிரிழந்த கால்நடைகளுக்கு கர்நாடகத்தில் ரூ. 25 ஆயிரம் இழப்பீடாக வழங்கப்படுவதால் தமிழகத்திலும் அதே அளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு நிராகரித்து விட்டது. கோமாரி நோயை கட்டுப்படுத்தத் தவறியதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழக அரசு நிராகரித்தது கண்டிக்கத்தக்கது.பால் கொள்முதல் விலைதமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட எருமைப்பாலின் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், பசும்பாலின் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும் உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், யானைப் பசிக்கு சோளப் பொரியைப் போல எருமைப் பால், பசும்பால் ஆகியவற்றின் விலையை லிட்டருக்கு தமிழக அரசு வெறும் ரூ. 3 மட்டுமே உயர்த்தியது. தீவனம் உள்ளிட்ட கால்நடை உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துவிட்ட நிலையில், அதற்கேற்றவாறு பால் கொள்முதல் விலையை உயர்த்தி உற்பத்தியாளர்களின் துயரை துடைக்கத் தவறிய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 

பாமக 3வது வேட்பாளர் பட்டியல்: தி.மலை- எதிரொலி மணியன், சிதம்பரம்-கோபி, கடலூர்- கோவிந்தசாமி

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் 3வது வேட்பாளர் பட்டியலை இன்று பாமக வெளியிட்டுள்ளது.லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கெனவே 2 கட்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

 
திருவண்ணாமலையில் எதிரொலி மணியன், சிதம்பரத்தில் கோபி என்ற கோபாலகிருஷ்ணன் மற்றும் கடலூரிக் மருத்துவர் இரா. கோவிந்தசாமி ஆகியோர் பாமக வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மொத்தம் 10 தொகுதி வேட்பாளர்கள்பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறிவித்திருந்தது.அதில், கிருஷ்ணகிரி - ஜி.கே. மணி, அரக்கோணம் - ஆர். வேலு, ஆரணி - அ.கி. மூர்த்தி, சேலம் - அருள், புதுவை - அனந்தராமன், விழுப்புரம் (தனி) - வடிவேல் ராவணன், மயிலாடுதுறை- க.அகோரம் ஆகியோர் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.தற்போது 3 வது வேட்பாளர் பட்டியலில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டு வந்தாலும் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் மும்முரமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 

அதிமுக- திமுகவுக்கு எதிராக கூட்டணி- பாமக பொதுக்குழுவில் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் இன்று காலை பாமக தலைமை பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை வகித்தார்.திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று உறுதிபட ராமதாஸ் முன்பு தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக முடிவு செய்திருக்கிறது.அண்மையில் டெல்லியில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை அன்புமணி நேரில் சந்தித்து பேசியிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற பாமக தலைமை பொதுக்குழுக் கூட்டத்தில் திமுக, அதிமுகவுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் கூட்டணியை அமைக்க வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தினர்.அதிமுக- திமுகவுக்கு கண்டனம்இன்றைய பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், இலங்கையில் தமிழர்கள் மரியாதையுடன் வாழ்வதை உறுதி செய்ய ஐ.நா. மூலம் தனித்தமிழீழம் அமைப்பதும் தான் ஈழத் தமிழர்களுக்கு நாம் வழங்கும் நீதியாக இருக்கும். இதை செய்யத் தவறிய மத்திய அரசுக்கும், அவ்வாறு செய்யும்படி மத்திய அரசுக்கு நெருக்கடி தரத் தவறிய முந்தைய தி.மு.க. அரசு மற்றும் இப்போதைய அ.தி.மு.க. அரசுக்கும் பா.ம.க. கட்சியின் தலைமை பொதுக்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் மின்வெட்டை சரிசெய்யாத தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 

Wednesday, January 1, 2014

பாமக தலைமைப் பொதுக்குழு கூட்டம்



பாமக தலைமைப் பொதுக்குழு கூட்டம் 02.01.2014 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சென்னை தேனாமபேட்டையில் உள் காமராசர் அரங்கில் நடைபெற உள்ளது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நடக்க இருக்கும் இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் 2014ஆம் ஆண்டில் ஆற்ற வேண்டிய பணிகள், நாடாளுமன்ற தேர்தலுக்கான செயல் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது. கூட்டத்தின் முடிவில் ராமதாஸ் உரையாற்றுகிறார்.
இவ்வாறு பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாராயணசாமியுடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவரும், புதுவை எம்.பியும் மத்திய அமைச்சருமான நாராயணசாமியை பாமக இளைஞரணி தலைவரும், பாமக நிறுவனர் ராமதாஸ் மகனுமான அன்புமணி ராமதாஸ் 01.01.2014 இன்று மாலை 4. 30 மணியளவில் சற்று நேரத்துக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டிற்க்கு சென்று சந்தித்தார்.
 தனி அறை ஒன்றில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, அன்புமணி, புதுவை பாமக வேட்பாளர் அனந்த ராமன் ஆகியோர் உரையாடிக்கொண்டுள்ளனர்.
பாமக தரப்பில், நாராயணசாமியின் மனைவி கலைச்செல்வி சில தினங்களுக்கு முன்பு காலமானார். அதற்கு ஆறுதல் கூறவே அன்புமணி வந்துள்ளார் என்கிறார்கள் புதுவை பாமகவினர்.
மற்றொரு தரப்போ, கூட்டணி பற்றி பேசுகிறார்கள். அதனால் தான் தனியறையில் பேசுகிறார்கள் என்கிறார் கள். தற்போது உரையாடிக்கொண்டு இருக்கும் இருவரும் வெளியே வந்து பேசினால் தான் எதற்காக இந்த சந்திப்பு என்பது அறியவரும்.

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: