இதுகுறித்து, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இலங்கை சிறப்பு படையணியை சேர்ந்த 45 உயரதிகாரிகள் வரும் டிசம்பர் மாதம் பயிற்சிக்காக இந்தியாவுக்கு வர இருப்பதாகவும், முடிந்தால் அவர்களை தமிழக அரசியல்வாதிகள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும் என்றும் இலங்கை ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா கூறியிருக்கிறார்.
இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை அமைச்சருமான பசில் ராஜபக்சே நேற்று கொழும்பில் இந்திய பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் தான் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இதை எவராலும் தடுக்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகுவதற்கு முன்பாகவே இலங்கை அனுராதபுரத்தில் நடைபெற்ற ராணுவத்தின் 63-வது ஆண்டு விழாவில் பேசிய அந்நாட்டு ராணுவ தளபதி ஜெகத் ஜெயசூர்யா, இலங்கை ராணுவ வீரர்கள் சுமார் 800 பேர் இந்தியாவில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, ``ராணுவ ஒத்துழைப்பை பொறுத்தவரை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே மிக நெருங்கிய புரிந்துணர்வு நிலவுகிறது. தமிழக அரசியல்வாதிகள் என்னதான் எதிர்ப்புக்குரல் எழுப்பினாலும் இந்த ஒத்துழைப்பை தடுக்க முடியாது. தமிழக அரசியல்வாதிகளுக்கு நாங்களே தகவல் தருகிறோம். வரும் டிசம்பர் மாதத்தில், இலங்கை சிறப்பு படையணியை சேர்ந்த 45 உயரதிகாரிகள் இந்தியாவுக்கு வரவிருக்கின்றனர். முடிந்தால் அவர்களை தமிழக தலைவர்கள் தடுத்து நிறுத்திக்கொள்ளட்டும்'' என்று திமிருடனும், அகம்பாவத்துடனும் அவர் பேசியிருக்கிறார். இலங்கைப் படைத் தளபதியின் இந்த பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கைப்போரின் போது ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் தான் இந்த ஜெயசூர்யா. இதற்காகவே அமெரிக்காவிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் இவர் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தமிழர்களை இனப்படுகொலை
செய்ததற்காக கைது செய்யப்பட்டு, போர்க் குற்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட
வேண்டிய ஒரு கொடூரன் இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கு சவால் விடும் அளவுக்கு
பேசத் துணிந்திருப்பதற்கு காரணம், நட்பு நாடு என்ற போர்வையில் இலங்கை
அரசுக்கு இந்தியா அளித்துவரும் ஆதரவுதான்.
மத்தியில் ஆட்சி அமைப்பதில் தமிழகம் தொடர்ந்து முக்கிய பங்காற்றிவரும் நிலையில், ``தமிழக தலைவர்கள் சொல்வதை இந்திய அரசு கேட்காது; நாங்கள் சொல்வதைத்தான் கேட்கும்'' என்று ஒரு சுண்டைக்காய் நாட்டின் தளபதி சொல்வதைக் கேட்கும் போது இந்தியா ராஜபக்சேவின் காலணி ஆதிக்கத்தின் கீழ் செயல்பட்டு வருகிறதா? என்ற வினா எழுகிறது. இலங்கைப் படைத் தளபதியின் இந்தப் பேச்சுத் தமிழக தலைவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய இறையான்மைக்கும் விடப்பட்ட சவால் ஆகும்.
தமிழ்நாடு இந்தியாவின் ஒரு பகுதி என மத்திய அரசு கருதினால், இலங்கை அமைச்சர் மற்றும் ராணுவ தளபதியின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் பயிற்சி பெற்று வருவதாக கூறப்படும் சிங்கள வீரர்கள் 800 பேரையும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment