Sunday, October 14, 2012

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை: ராமதாஸ்



பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு சில நாட்களில் மட்டும் சென்னையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் தவிர தமிழகத்தின் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சுமார் 300 பேர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவ மனைகளில் சேர்க்கப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில் மக்களிடையே பெரும் அச்சமும்,பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், டெங்கு காய்ச்சலை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்கள் வந்தால் டெங்கு காய்ச்சல் ஏற்படுவது இயல்பு தான் என்று கூறி தங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்க அரசு அதிகாரிகள் முயல்கின்றனர். இது அரசு நிர்வாகம் மற்றும் அதிகாரிகளின் பொறுப்பின்மையையும், அலட்சியத்தையுமே காட்டுகிறது.

தமிழகத்தை தற்போது ஆட்டிப்படைக்கும் டெங்கு காய்ச்சல் திடீரென வந்த ஒன்றல்ல. கடந்த ஏப்ரல் மே மாதங்களிலேயே நெல்லை மாவட்டம் கடையநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் அம்பாசமுத்திரம் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போதே கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டு டெங்குவைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை தவறியதன்  விளைவாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கும் இந்த நோய் பரவத் தொடங்கியது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் டெங்கு பரவி ஒரு வயது குழந்தை உட்பட சிலர் உயிரிழந்தனர். ஆனால் அப்போது சென்னை உட்பட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும்   டெங்கு இல்லை என்று மறுப்பு தெரிவிப்பதில் தான் அரசு தீவிரம் காட்டியதே தவிர , டெங்குவை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டது. அண்மையில் சென்னையில் காலரா நோய் பரவி சுமார் 29 பேர் உயிரிழந்தபோம் அதை மறைப்பதில் தான் அரசு அக்கறை காட்டியது. இதுதொடர்பான உண்மை நிலவரத்தை அம்பலப்படுத்திய மாநகராட்சி சுகாதார அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். தமிழக அரசின் இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

மாநகரங்களில் உள்ள அரசுப் பொது மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கும் போதிலும், பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளை உள்நோயாளிகளாக சேர்ப்பதற்கு படுக்கை கிடைக்காத அவலம் நிலவுகிறது. மாவட்ட அளவிலான மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சைஅளிப்பதற்கான வசதிகள் இல்லை; டெங்குவால் பாதிக்கப்பட்டோருக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்பதால் அதை செய்வதற்காக அவர்களுக்கு இரத்த வட்டுக்களை செலுத்தும் வசதிகள் இல்லை. இதனால் டெங்குவால் பாதிக்கப்பட்ட  குழந்தைகளை சிகிச்சைக்காக 100 கிலோ மீட்டருக்கும் அப்பால் உள்ள மருத்துவ மனைகளுக்கு அழைத்து செல்ல வேண்டியிருக்கிறது.

எனவே, தமிழக அரசு இனியாவது அதன் பொறுப்பை உணர்ந்து டெங்குவை கட்டுப்படுத்துவற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மற்றும் வட்டத் தலைமை மருத்துவமனைகளில் டெங்குவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட வேண்டும். டெங்கு அறிகுறி காணப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். மாநிலம் முழுவதும் கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படுவதுடன்,டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்

No comments:

காப்புரிமை(Copyrights)

--------------------------------------------------
இந்த இணையத்தளம் என் தனிப்பட்ட விருப்பத்திற்காக ஆரம்பிக்க பட்டது. நான் மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளால் ஈர்க்கபட்டு , இத்தகைய ஊடகத்தை தமிழ் உலகத்திற்கும், உலக ஊடகத்திற்க்கும் அளித்த உயர்ந்த நோக்கமுள்ள மனிதர் திரு.மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே என்னால் இயன்ற இந்த சிறிய சேவை. அதே போல் இது முழுக்க முழுக்க தனிப்பட்ட நபரின் இணையத்தளம் ஆகும். இதில என் கருத்துக்களால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி - அய்யனார் ------------------------------------------------
HTML Counter Users Visited: